Announcement - DetailPage - DMK
header_right
"பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து வரும் 15, 16-ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.கழகம் ஆதரவு" - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

பதிவு: 13 Mar 2021, 15:50:51 மணி

"பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து வரும் 15, 16-ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.கழகம் ஆதரவு"
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
இந்திய ஒன்றியத்தின் வலிமை மிகுந்த பொருளாதாரக் கட்டமைப்பான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது ஒன்றையே முழுநேரக் கொள்கையாகக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் நலனுக்கு விரோதமான செயல்பாடுகளால், எளிய மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் பொதுத்துறை வங்கிகள் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றன. பொதுத்துறை வங்கிகளை இணைத்து, வங்கிச் சேவைகளின் பரவலாக்கத்தை முடக்கிய மத்திய அரசு, ஏற்கனவே ஐ.டி.பி.ஐ. வங்கிப் பங்குகளை விற்று தனியார்மயமாக்கியது போல மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க முன்வந்துள்ளது.
அரசுத் துறைகளின் பணப்பரிவர்த்தனை - வரிவசூல் - ஓய்வூதியம் வழங்குதல் போன்ற பணிகளை பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் வங்கிகளுக்கு மாற்றக்கூடிய முடிவையும் மத்திய அரசு எடுத்துள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசின் ஜன்தன் திட்டம் முதல் கல்விக்கடன், விவசாயக் கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பலவும் பொதுத்துறை வங்கிகளால்தான் நடைபெறுகின்றன.
அத்தகைய பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கி, கார்ப்பரேட் நலன் காக்கும் திரு. நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்து மார்ச் 15, 16 தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.கழகத்தின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.