களத்தில் நம் ஆயுதம், கழகத் தேர்தல் அறிக்கை! "கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதம்" - (14-03-2021)
பதிவு: 15 Mar 2021, 10:37:28 மணி
களத்தில் நம் ஆயுதம், கழகத் தேர்தல் அறிக்கை!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் எப்போதும் வாக்காளர்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற கதாநாயகனாக இருப்பது தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கை. இப்போதும் அந்த கதாநாயகன் வெற்றிகரமான நட்சத்திரமாக மிளிர்வதை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று (மார்ச் 13) வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு அனைத்துத் தரப்பினரிடமும் கிடைத்து வரும் உளப்பூர்வமான வரவேற்பு உணர்த்துகிறது.
கழகம், தேர்தல் களத்தை சந்திக்காத 1952-ஆம் ஆண்டே தனது நிலைப்பாட்டை - கோட்பாடுகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு, அதனடிப்படையில் மாற்றுக்கட்சியினருக்கான ஆதரவை வழங்கியவர் பேரறிஞர் அண்ணா. 1957-இல் கழகம் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டதில் தொடங்கி, நாட்டின் முன்னேற்றத்தையும் நாட்டு மக்களின் நலனையும் கவனமாகக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட விரிவான தேர்தல் அறிக்கையினை முன்வைத்து வாக்கு கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது. தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் ‘கதாநாயகன்’களாக மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றன. கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற போதெல்லாம் அந்தத் தேர்தல் அறிக்கைகள் செயல்வடிவம் பெற்று, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் - தமிழர்களின் நல்வாழ்வுக்கும் உயர்வுக்கும் தக்க வழியில் துணை நின்றன.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்கு அக்கறையுடன் கற்றுத்தந்துள்ள அரசியல் பயிற்சியின் அடிப்படையில், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமிழகத்தின் நலன் சார்ந்த வாக்குறுதிகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை மிகுந்த ஆர்வமுடன் உருவாக்கப்பட்டது. இதற்கான குழுவின் ஒருங்கிணைப்பாளராகக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., நியமிக்கப்பட்டு, கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.இராசா எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., கழக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., செய்தித் தொடர்புத்துறைச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் பயணித்து, கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் ஒவ்வொரு துறை சார்ந்த மக்களும் அனுபவித்த அவலங்களையும், எதிர்கொண்ட பிரச்சினைகளையும் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகள் – தேவைகள் - வளர்ச்சிக்கான அம்சங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து - பல துறை வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டு - ஆழ்ந்து அலசி ஆராய்ந்து - ஒட்டுமொத்தத் தமிழகத்தின் நீடித்து நிலைத்திடும் வளர்ச்சிக்கான 360 டிகிரி அளவிலான முழுப் பார்வையுடன் வடிவமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையைத்தான், தலைவர் கலைஞரின் இல்லத்திலும், பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் ஆகியோரது ஓய்விடங்களிலும் வைத்து வணங்கி - வாழ்த்துப்பெற்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டேன்.
கழகம் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் என்பது, வெற்றிப் பட்டியலாக உடன்பிறப்புகளின் நெஞ்சிலும் - பொதுமக்களின் உள்ளத்திலும் நிறைந்து, அதுவே ஒரு கதாநாயகனாக உயர்ந்த உருவெடுத்த நிலையில், அனைத்துத் தரப்பு மக்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மக்களின் நலனையும் மாநிலத்தின் வளர்ச்சியையும் சார்ந்த 505 வாக்குறுதிகள், திருச்சி சிறுகனூரில் அளித்த 7 உறுதிமொழிகள் அடங்கிய தொலைநோக்குத் திட்டங்களுக்கான அம்சங்கள், ஒவ்வொரு மாவட்ட மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் அனைத்தும் அதில் இடம்பிடித்துள்ளன.
தனித்தனிப் புத்தகங்களாகவும், மின்நூல்களாகவும் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேர்ந்துள்ளதாலும், ஊடகங்கள் –பத்திரிகைகள் - சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதாலும் அவை குறித்து விரிவாக விளக்கிடத் தேவையில்லை. எனினும், குறிப்பாகச் சிலவற்றைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75% இடங்களைத் தமிழர்களுக்கு வழங்குதல்,
திருக்குறளைத் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தல்,
கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம்,
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை தமிழகத்தின் தேசிய பண்பாட்டு விழாவாகக் கொண்டாடுதல்,
குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை,
கொரோனா பேரிடரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வகையில், ஒவ்வொரு குடும்ப (அரிசி) அட்டைதாரருக்கும் வரும் ஜூன் 3 கலைஞர் பிறந்த நாளில் 4000 ரூபாய் நிவாரணத் தொகை,
நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே சட்டம் நிறைவேற்றுதல்,
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு - டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறைப்பு,
5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக்குழுக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, முதியோர் உதவித் தொகை ரூ.1500,
அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு,
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு,
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை,
புதிய மின்மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம்,
அரசு ஊழியர்கள் - போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்,
பள்ளி மாணவர்களுக்கு கைக்கணினி,
சத்துணவில் காலையில் ஊட்டச்சத்துமிக்க பால்,
அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணவசதி,
மீனவர்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள்,
மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை,
பள்ளி - கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்,
பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சிகள்,
சிறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன்,
மசூதி - தேவாலயங்கள் சீரமைப்புக்கு ரூ.200 கோடி,
இந்து கோவில்கள் புனரமைப்புக்கு ரூ.1000 கோடி,
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராதல்,
மாற்றுத்திறனாளிகளுக்குப் பயணச் சலுகை,
நடைபாதைவாசிகளுக்கு காப்பகம்,
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை,
- என தமிழ்நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய இந்தத் தேர்தல் அறிக்கையுடன், மாவட்டவாரியாக நிறைவேற்றப்படவிருக்கும் திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளும் இணைத்தே வெளியிடப்பட்டுள்ளது.
வளம் மிக்க தமிழர்களுடன் வலிமைமிகுந்த தமிழ்நாட்டைக் கட்டமைத்திடும் இலட்சிய இலக்குடன் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தமிழக மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், இன்னும் சில கோரிக்கைகள் இருக்கின்றன; அவற்றையும் தேர்தல் அறிக்கையில் இணைத்திடுங்கள் என்கிற அன்புக் குரல்களும் கேட்கின்றன. அந்தக் குரல்களின் நியாயத்தை உணர்கிறேன்.
பத்தாண்டு காலமாகப் பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகத்தில் நாளொரு கோரிக்கை -பொழுதொரு விண்ணப்பம் என மக்களிடமிருந்து வெளிப்படுவது இயல்புதான். தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அரியலூர் அனிதா முதல் ஏராளமான மாணவ - மாணவியரின் உயிரைக் குடித்த நீட் தேர்வு எனும் கொடுமையிலிருந்து மாணவச் சமுதாயத்தை மீட்டெடுத்து, அவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறும் வகையில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வு ரத்துக்கான சட்டம் கொண்டு வரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவச் சமுதாயமும் பெற்றோரும் மகிழ்ந்து வரவேற்கும் இந்த வாக்குறுதி வெளியிடப்பட்ட அதே நாளில்தான், ‘நர்சிங் தேர்வு உள்பட சித்தா, யுனானி உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை’ என்கிற அதிர்ச்சி தரும் அறிவிப்பினை, மத்திய பா.ஜ.க. அரசின் கீழுள்ள தேசியத் தேர்வு முகமை அறிவித்திருப்பதும் வெளியாகியுள்ளது. இது ஏழை – எளிய - கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. குறிப்பாக செவிலியர் படிப்பு பயின்று, மக்களின் உயிர்காக்கும் சேவையில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு எதிரான படுபாதகமான கொடுமையாகும். மாணவச் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் பெரிய அநீதி. இதனை தி.மு.கழகம் முழுமையாக எதிர்ப்பதுடன், தொடக்க நிலையிலேயே இதனைத் தடுத்து நிறுத்திடவும் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்ளும்.
ஒவ்வொரு நாளும் மக்கள் விரோத திட்டங்களை மட்டுமே செயல்படுத்தும் மத்திய பா.ஜ.க. - மாநில அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு எதிரான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைக் கடந்தும், மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்படும். அதுபோலவே, தி.மு.கழகம் ஏற்கனவே மேற்கொண்டுள்ள மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகள் தொடரும்.
எடுத்துக்காட்டாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020-க்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை நிராகரிக்க வலியுறுத்தும் தி.மு.க.வின் நிலைப்பாடு தொடரும். அதுபோலவே, சேலம் - சென்னை எட்டுவழிச்சாலையால் விவசாயிகள் வாழ்வாதாரமும் - சூழலியலும் கடும் பாதிப்புக்குள்ளாவதை தி.மு.கழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதுபோலவே, திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கடல்வளங்கள் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குச் செல்வதற்கு தி.மு.கழகத்தின் எதிர்ப்பு நிலை தொடரும். தேர்தல் அறிக்கையில், மாவட்ட வாரியாக நிறைவேற்றப்படவுள்ள திட்டம் சார்ந்த அறிவிப்புகளே பெருமளவில் இடம்பெற்றிருப்பதால், கழகம் ஏற்கனவே மேற்கொண்டு வரும் நிலைப்பாடுகள் சுட்டிக்காட்டப்படவில்லை. எனினும், அதே நிலைப்பாடு தொடரும் என்பதையும் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.
சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்கிற தலைவர் கலைஞரின் வழியிலேயே தி.மு.கழகத்தின் இந்தத் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளுக்கும் செவிமடுத்து, அதனை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டிருப்பதால், பொதுமக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுந்தரப்பினர், குதர்க்கம் பேசி, குழப்பம் விளைவித்து, குறுக்குசால் ஓட்டி, தங்கள் பக்கம் உறுதியாகிவிட்ட தோல்வியிலிருந்து துளியளவேனும் தப்பிக்க முடியுமா எனத் தத்தளிக்கிறார்கள். அதற்காக பல்வேறு திரிபுவாதங்களில் - திசை திருப்பல்களில் ஈடுபடுகிறார்கள்.
“இலங்கையிலிருந்து இந்தியாவில் உள்ள முகாம்களில் இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிட, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்” என்ற வாக்குறுதியைத் திரித்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சார்பாக தி.மு.கழகம் பேசுவதாக சமூக வலைதளங்களில் பொய்ப் பரப்புரையை அவிழ்த்து விடுகிறார்கள்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்கள் கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றில் தி.மு.க.வின் தெளிவான எதிர்ப்பு நிலைப்பாட்டினை நாடாளுமன்றத்தில் கழகத்தின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர். உங்களில் ஒருவனான என் தலைமையில் நமது தோழமைக் கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து தமிழகம் தழுவிய அளவில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்தைப் பெற்று குடியரசுத் தலைவரிடம் அனுப்பி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம்.
அந்தத் திருத்தச் சட்டத்தில், அண்டை நாடுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளில், இலங்கை இடம்பெறாததையும், மதரீதியான வரையறையில் முஸ்லிம்கள் தவிர்க்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு, அதனை இணைப்பதுடன், இனரீதியான சிறுபான்மையினரையும் சேர்க்க வேண்டும் என்பதையும் கழகத்தின் மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவா அவர்கள் எழுத்துபூர்வமாகவே குறிப்பிட்டு வழங்கியிருக்கிறார்.
தி.மு.க.வின் வெளிப்படைத்தன்மையான செயல்பாடுகளை அடிமை அ.தி.மு.க.வாலும், அதன் புரட்டு ஊதுகுழல்களாலும் திசை திருப்பிவிட முடியாது. எதிர்க்கட்சியாக இத்தனை பணிகளை மேற்கொண்டுள்ள தி.மு.கழகம், விரைவில் ஆளுங்கட்சியானதும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண் திருத்தச் சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமான அ.தி.மு.க.வின் பச்சைத் துரோகத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவருக்கும் படுதோல்வி ஏற்படுவது உறுதி என்கிற பய உணர்வால், அ.தி.மு.க செய்யும் திரிபுவாதங்கள் இனி மக்கள் மத்தியில் எடுபடப்போவதில்லை. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது பொதுமக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட கதாநாயகன்; உடன்பிறப்புகளின் கையில் ஒருபெரும் போர்க்கருவி; ஜனநாயக அறப்போர்க்களத்தில், கூர்மையான அந்தப் போர்க்கருவியை முழுவீச்சோடு பயன்படுத்திட வேண்டும் என கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
கழகத்தின் சார்பிலும் தோழமைக் கட்சிகளின் சார்பிலும் களம் காண்கிற வெற்றி வேட்பாளர்களுக்கான பரப்புரையை விவேகத்துடனும் வேகத்துடனும் தொடங்குங்கள். அதனை வீடு வீடாகத் தொடருங்கள். வீதி வீதியாகத் தொடருங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து, கழகத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றைத் தெளிவுபடுத்துங்கள். “இவை வெறும் வாக்குறுதிகள் அல்ல. வருங்காலத் தமிழகத்தின் வளர்ச்சிக்கான வரைவு ஆவணம்; ஒப்பந்தப் பத்திரம்” என்பதை எடுத்துக் கூறுங்கள்.
உடன்பிறப்புகளே, நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும், என்ன தொழில் செய்பவராக இருந்தாலும், எங்கே வசிப்பவராக இருந்தாலும் அவர்களுக்கான வாக்குறுதிகள் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இது மக்களின் மனசாட்சியை எதிரொலிக்கும் தேர்தல் அறிக்கை. ஆட்சி மாற்றத்தை உறுதி செய்திடும் தேர்தல் அறிக்கை.
ஜனநாயகப் போர்க்கருவியான இதனைக் கையில் ஏந்துவோம்; மக்களிடம் கொண்டு செல்வோம். சொன்னதைச் செய்வோம் என்கிற கலைஞரின் பொன்மொழியை தமிழக மக்களிடம் வாக்குறுதியாக அளித்து, 234 தொகுதிகளிலும் முழுமையாக வெல்வோம்!
அன்புடன்
மு.க.ஸ்டாலின்.