கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் அவர்களின் அறிக்கை
பதிவு: 17 Jan 2019, 20:27:59 மணி
சமூக வலைதளப் பதிவைக் காரணம் காட்டி ஜனவரி - 16, 2019 அன்று நடைபெற்றுள்ள கைது குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் திரு. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்
சமூக வலைத்தள பதிவுகளை காரணம் காட்டி கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. லோகநாதன் அவர்களை கைது செய்தது பல முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளது. தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகளிடம் நான் பலமுறை வலியுறித்தியதை போல கழக பொறுப்பு என்பது கழகத்தின் நற்பெயரை காப்பாற்றும் முக்கிய கடமையை கொண்டதாகும். அதேபோல், கழக தொண்டர்களிடம் நான் முன்பே கூறியதை போல நியாயமற்ற வகையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் கழகம் அணைத்து உதவியையும் ஆதரவையும் அளிக்கும். நிலுவையில் இருக்கும் குற்றச்சாட்டு என்பதாலும் கழக தொழில்நுட்ப அணியின் செயலாளர் என்ற முறையிலும் மேற்கொண்டு இந்த குற்றச்சாட்டு குறித்து நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. எனினும், கழகத்தின் செயல்பாடுகளும், என் செயல்பாடுகளும் மேற்கூறப்பட்ட கொள்கைகளுக்கு உட்பட்டே இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பலதரப்பட்ட மக்களுக்கு பல தரங்களில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சமூக வலைத்தள கட்டுப்பாடுகளும், விதிகளும் வருத்தத்துக்குரியது. பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கென ஒரு நியாயமும், அதிகாரம் படைத்தோரும் அவர்களை சார்ந்தோரும் கொச்சையாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பாடும் வசைகளுக்கு அளவற்ற சுதந்திரமும் அளிக்கப்படுகிறது.
கழக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு ஆர். எஸ். பாரதி அவர்கள் சமூக வலைத்தள மீறல்கள் குறித்து பல வழக்குகளை தாக்கல் செய்த போதிலும், ஒரு புகார் மீது கூட தமிழக காவல் துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கவில்லை! இந்த வெளிப்படையான பாகுபாடு மற்றும் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் ஆகியவை தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் என்பது நியாயமான எண்ணங்களை கொண்ட குடிமக்களுக்கு தெளிவாக புரியும்.
நம் ஜனநாயகம் எதிர்கொண்டுவரும் துன்பப் பட்டியலில், தமிழக ஊடகங்கள் அரசாங்கத்தின் பிரச்சார ஆயுதங்களாக மாறியுள்ளதையும் சேர்க்க வேண்டும். சமூக வலைத்தள பதிவு போன்ற ஒரு சிறிய சம்பவத்திற்கு தினசரிகளில் முதற்பக்க கட்டுரையும், செய்தி தொலைகாட்சிகளில் ப்ரேத்யேக கவனமும் அளிக்கப்படுகிறது. அதேவேளையில், திரு. மதேயு ஜோசப் அவர்கள் அம்பலப்படுத்திய கொடநாடு கொலைகள் மீது நிலவும் சந்தேக்கப்படும் வகையிலான நிசப்தமும், முழுமையான மௌனமும் அதிர்ச்சி அளிக்கிறது. ஊடகங்களின் இந்த வேறுபட்ட தரங்கள், மத்திய மற்றும் தமிழக அரசுகளின் கைகளில் சிக்கி ஜனநாயகம் படும் சிதைவையே பிரதிபலிக்கின்றன. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு முழுமையாக செயல்படும் ஜனநாயக நாடாக இந்தியாவை மறுசீரமைக்க, இந்த ஜனநாயக விரோத ஆட்சிகளை அகற்றுவதே தமிழக மக்களும், இந்திய மக்களும் எடுக்க வேண்டிய முதன்மையான படியாகும்.