
பிறப்பு:
1953 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கலைஞர் மு.கருணாநிதி-தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார் தளபதி என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் மு.க. ஸ்டாலின். ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் அவரது தந்தை கலைஞர் மு கருணாநிதி. தளபதி உடன் பிறந்தோர், முத்து, அழகிரி, செல்வி, தமிழரசு மற்றும் கனிமொழி.
கல்வி:
தளபதி ஸ்டாலின், சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி மேலாண்மை மறுத்தது. இதனால் சென்னை சேத்துப்பட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.
1967-1968 ஆண்டுகளில் தளபதி மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு “கோபாலபுரம் இளைஞர் திமுக” என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு சமூகப்பணிகளை செய்து வந்தார்.
1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.முக.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக்கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார். 1973ம் ஆண்டு திமுக-வின் பொதுக்குழு உறுப்பினரானார்.
கலை - கழகம்:
தந்தையின் அரசியல்-கலை ஆளுமை காரணமாக, தளபதி ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் இருந்தது. அவர் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய "முரசே முழங்கு" என்ற நாடகமாகும். இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது.
இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின். அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும்.
திரைப்படம்:
தளபதி ஸ்டாலின் அவர்கள் சமூக நலக் கருத்துக்களை வலியுறுத்தும் சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஒரே ரத்தம்(1988), மக்கள் ஆணையிட்டால்(1988), குறிஞ்சி மலர்(நெடுந்தொடர்) ஆகிய படைப்புகளில் கதாநாயகனாக நடித்துள்ளார்.


அரசியல்:
1975ல் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். தேசிய அளவிலும், மாநிலங்களிலும் அதை எதிர்த்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு நெருக்கடி நிலையை அடியோடு எதிர்த்ததால் மத்திய அரசால் சர்வாதிகார முறையில் கலைக்கப்பட்டது. இதையடுத்து முரசொலி மாறன், தளபதி மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 25000க்கும் மேற்பட்டோர் ‘மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
நெருக்கடி நிலை ஒடுக்குமுறையால் ஸ்டாலின் அவர்கள் ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். மிசாவில் தளபதி ஸ்டாலினுடன் சிறை வைக்கப்பட்ட சிட்டி பாபு காவல்துறையினர் தாக்கிய தீவிரத்தால் இறந்துபோனது கழகத்தின் வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. ஸ்டாலினை தீவிரமான அரசியலில் பங்குபெற வைத்து பக்குவபடுத்தியதில் இந்த சிறை வாசத்துக்கு பெரும்பங்குண்டு.


இளைஞரணி:
இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரையிலே உள்ள சான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது 1982 இல் திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவில் 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் தளபதி மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக்குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலும், ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது. இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் “தளபதி” என்று அழைக்கப்பட்டார். தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி முதன்முதலாக அன்பகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது, இன்றும் செயல்பட்டு வருகிறது.
-
2003இல் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில், துணை பொதுச்செயலாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.
-
2008 ம் ஆண்டு திமுகவின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.




சட்டமன்ற பணி:
தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தேர்தல் வரலாறு கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தின் வரலாற்றுடன் இரண்டற கலந்துள்ளது. 1984-ஆம் ஆண்டு முதல் 2016 வரை, 8 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதில் 6 முறை வெற்றி பெற்று முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி ஆற்றி வருகிறார். கடந்த இருபது ஆண்டுகளாக தமிழக மக்கள் அவரை தொடர்ந்து சட்டமன்றத்துக்கு தேர்வு செய்து வருகின்றனர். மக்கள் பணியில் கவனமும், சரியான திட்டமிடலும் அவரின் சட்டமன்ற வெற்றிகளுக்கு முழுமுதற் காரணம். தொகுதி மக்களின் துயர் துடைப்பதிலும், வளர்ச்சியிலும் தணியாத ஆர்வம் கொண்டவர் தளபதி மு.க. ஸ்டாலின். பல்வேறு பதவிகளை வகித்தாலும், வாக்களித்த தொகுதி மக்களின் நலனை எந்த வித குறைகளுமின்றி நிறைவேற்றுவதில் மிகுந்த கவனமெடுத்து செயல்படுவார்.
தேர்தல் பயணம்
| ஆண்டு | தொகுதி | முடிவு |
|---|---|---|
| 1984 | ஆயிரம் விளக்கு | தோல்வி |
| 1989 | ஆயிரம் விளக்கு | வெற்றி |
| 1991 | ஆயிரம் விளக்கு | தோல்வி |
| 1996 | ஆயிரம் விளக்கு | வெற்றி |
| 2001 | ஆயிரம் விளக்கு | வெற்றி |
| 2006 | ஆயிரம் விளக்கு | வெற்றி |
| 2011 | கொளத்தூர் | வெற்றி |
| 2016 | கொளத்தூர் | வெற்றி |


துணை முதல்வர்:
கடந்த 2009-ஆம் ஆண்டு, தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக துணை முதல்வர் பதவியை தளபதி மு.க. ஸ்டாலின் வகித்தார். துணை முதல்வர் பதவியில் அவர் ஆற்றிய சாதனைகள் வளமான தமிழகத்திற்கு வழிகோலியது.
எதிர்கட்சித் தலைவர்:
2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மு. க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழகத்தில் பலம் வாயந்த எதிர்க்கட்சியாக மக்கள் திமுகவை தேர்வு செய்தனர். தற்போது தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக தளபதி மு. க. ஸ்டாலின் சிறப்புடன் செயலாற்றி வருகிறார்.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில், திமுகவின் தேர்தல் கூட்டணியை முடிவு செய்ததிலும், பல வேட்பளார்களை முடிவு செய்ததிலும் தளபதி மு.க. ஸ்டாலின் பெரும் பங்காற்றினார்


மேயர்:
மாநகராட்சி மன்ற சட்டம் திருத்தப்பட்ட பின்னர், 1996ம் ஆண்டு நடந்த சென்னை மேயர் தேர்தலில் முதல் முறையாக நேரடியாக மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை தளபதி மு.க. ஸ்டாலின் பெற்றார். மேயர் பதவியில் இருந்தபோது ஸ்டாலினுக்கு சென்னை மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது. துப்புரவுப் பணிக்களுக்கு முன்னுரிமை அளித்து சென்னை நகரத்தின் குப்பை அள்ளும் முறைகளை நவீனப்படுத்தினார். சுகாதாரம், பொது கட்டுமானம், பள்ளிகள் என ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி சென்னை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார்.
மேம்பாலங்கள்:
மேயராக செய்த சாதனைகளுக்காக "நவீன சென்னை நகரத்தின் தந்தை" என்று போற்றப்படுபவர் தளபதி மு.க. ஸ்டாலின். சிங்கார சென்னை என்ற முழக்கத்தை முன்னெடுத்து அதை மக்களிடையே பரவலாக்கினார். சென்னை நகரத்தின் சாலைகள் புதுப்பொலிவு பெற்றன. மிகப்பெரிய மேம்பாலங்களை கட்டி சென்னை நகரத்தின் நெரிசலுக்கு தீர்வு கண்டார். இவரது ஆட்சியில், 9 பெரிய மேம்பாலங்களும், 49 குறும்பாலங்களும் கட்டப்பட்டது. இதுதவிர 18 முக்கிய சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டன. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான சென்னை மெரீனாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பெரம்பூரிலுள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் நவீன முறையில் பராமரிக்கப்பட்டது.
இதேபோல், சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்தவர் தளபதி ஸ்டாலின் மட்டுமே. அவரது பதவிக் காலத்தில், நெரிசல் மிகுந்த 10 சாலைகளில் மேம்பாலங்கள் கட்ட முடிவெடுக்கப்பட்டு, பதவிக்காலம் முடியும் முன்பே,
1. பீட்டர்ஸ் சாலை – கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு,
2. பீட்டர்ஸ் சாலை – வெஸ்ட்காட் சாலை சந்திப்பு,
3. பாந்தியன் சாலை – காசா மேஜர் சாலை சந்திப்பு,
4. புரசைவாக்கம் நெடுஞ்சாலை – ஆண்டர்ஸ் சாலை சந்திப்பு,
5. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை – இராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு,
6. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை – டி.டி.கே சாலை சந்திப்பு,
7. டி.டி.கே.சாலை – சி.பி.ராமசாமி சாலை சந்திப்பு,
8. சர்தார் பட்டேல் சாலை – டாக்டர் முத்துலட்சுமி சாலை சந்திப்பு,
9. சர்தார் பட்டேல் சாலை – காந்தி மண்டபம் சாலை சந்திப்பு ஆகிய 9 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.
மேம்பாலங்கள் கட்ட 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த்து. ஆனால், மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டபோது 30% நிதி மீதம் இருந்தது.
தலைவர் ஸ்டாலின் அவர்களது நிர்வாகத் திறமை, நிதி மேலாண்மை ஆகியவற்றுக்கு இதுவே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
இந்தியாவில், இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த ஒரு மாநகராட்சியும் இத்தகைய மேம்பாலங்களை கட்டி முடித்ததில்லை.
10-வதாக கட்டிமுடிக்கப்பட்ட பெரம்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பாலம் பின்னர் திறந்துவைக்கப்பட்டது.
இன்று, சென்னை மக்கள் ஓரளவேணும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிகிறதென்றால், அதற்கும் மு.க.ஸ்டாலின் மட்டுமே காரணம்.
தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அயராத உழைப்பாலும் சாதனைகளின் பலனாகவும் 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் சென்னை மக்களால் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விருதுகள்:
ஆட்சி நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டு பங்களிப்புகளுக்காக, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
அமெரிக்காவிலுள்ள கெண்டக்கி மாகாணத்தின் காமன்வெல்த் அளிக்கும் மிக உயரிய விருதான் கெண்டக்கி கர்னல்(Kentucky Colonel) விருது ஸ்டாலினின் பொது சேவைக்காக வழங்கப்பட்டது. கெண்டக்கியின் நல்லெண்ணத் தூதுவராகவும் அவருக்கு கவுரவம் அளிக்கப்பட்டது. இந்த கவுரவத்தை இதற்கு முன் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் ரொனால்ட் ரீகன், நோபல் பரிசு பெற்றவரும் முன்னாள் இங்கிலாந்து பிரதமருமான வின்ஸ்டன் சர்ச்சில், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்ற உலகப்புகழ் வாய்ந்த நபர்கள் பெற்றுள்ளனர். அத்தகு சிறப்பு மேயர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது மிகப்பெரிய பெருமையாகும். இது அவருக்கு மட்டுமல்ல அவர் சாந்துள்ள திமுகவுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெருமையாகும்.

அமைச்சர்:
2006ல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கலைஞர் மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக தளபதி மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சரானார். அமைச்சர் பதவியில் திறம்பட செயலாற்றி தமிழகத்துக்கு பல முன்னோடி திட்டங்களை அறிமுகம் செய்தார்.

தலைவர்:
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் குன்றிவரும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு சனவரி 4, 2017 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவின் செயல் தலைவராக ஆக்கப்பட்டார்.
2018 ஆகஸ்ட் 8ல் தமிழத்தின் முதுபெரும் தலைவரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமான பிறகு திமுகவின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என உயர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கழகப்பணி செய்துவரும் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் கலைஞருக்கு அடுத்து கழகத்தின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்றது கழகத்துக்கு மட்டுமன்றி, தமிழ்கத்துக்கும் பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்தது.
குடும்பம்:
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா என்கிற சாந்தா. இவர்களுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். மகன் உதயநிதி ஸ்டாலின் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். தமிழ் திரையுலகில் அவர் புகழ்பெற்ற நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், உள்ளார்.
