"விவசாயிகளை இடைத்தரகர்கள் என்று கொச்சைப்படுத்திய திரு.பழனிசாமி தான் இன்று விவசாயி என்று வேடம் போடுகிறார்" - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
பதிவு: 18 Mar 2021, 10:14:36 மணி
"விவசாயிகளை இடைத்தரகர்கள் என்று கொச்சைப்படுத்திய திரு.பழனிசாமி தான் இன்று விவசாயி என்று வேடம் போடுகிறார்"
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (17-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, தாம்பரம் – சண்முகம் சாலையில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
இங்கே எழுச்சியோடு - உணர்ச்சியோடு - ஆர்வத்தோடு - ஆரவாரத்தோடு என்னை வரவேற்று மகிழ்ந்திருக்கும் உங்களுக்கு முதலில் என்னுடைய நன்றி.
இன்றைக்கு உங்களை எல்லாம் தேடி நாடி வந்திருக்கிறேன். இதோ இந்த மேடையில் நின்று கொண்டிருக்கும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை எல்லாம் நீங்கள் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்.
தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஆர்.ராஜா அவர்கள், இதே தாம்பரத்திற்கு நகர்மன்றத் தலைவராக இருந்து, இந்த தாம்பரம் நகராட்சிக்கு என்னென்ன பணிகளை எல்லாம் ஆற்றி இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதைத் தொடர்ந்து இந்த தாம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து தன்னுடைய கடமையை சிறப்பாக நிறைவேற்றிய காரணத்தால்தான் மீண்டும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் செல்வப்பெருந்தகை அவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆதிதிராவிடர் பழங்குடி பிரிவின் தலைவராக தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். எனவே அவருக்கு கை சின்னத்திலும், திருப்போரூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள், நம்முடைய அருமை சகோதரர் திருமாவளவன் அவர்களின் அன்பைப் பெற்ற சிறப்பான வேட்பாளர், டி.வி. விவாத மேடைகளில் சமூகநீதி கொள்கைகளில் பின்வாங்கி விடாமல் பேசும் ஆற்றலைப் பெற்ற எஸ்.எஸ்.பாலாஜி அவர்களுக்கு என்ன சின்னம் ஒதுக்கப்படுகிறதோ அந்த சின்னத்திலும், செங்கல்பட்டு தொகுதியில் வரலட்சுமி மதுசூதனன் அவர்கள், ஏற்கனவே செங்கல்பட்டு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்தில் அவர் எடுத்து வைத்திருக்கும் வாதம் அந்த தொகுதியில் இருக்கும் மக்களுக்கு ஆற்றியிருக்கும் பணிகளை எல்லாம் எண்ணிப் பார்த்து தான் மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று உங்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
நானும் இன்றைக்கு முதலமைச்சர் வேட்பாளராக உங்களைத் தேடி வந்திருக்கிறேன். இந்தக் கழகத்திலிருந்து மக்கள் பணியாற்றி 50 ஆண்டுகால வரலாற்றை பெற்றவன்தான் இந்த ஸ்டாலின்.
ஆனால் இன்றைக்கு ஒருவர் இருக்கிறார், முதலமைச்சர் பழனிசாமி. அவர் படிப்படியாக வளர்ந்து வந்தாராம். படிப்படியாக வளர்ந்து வந்தாரா? ஊர்ந்து வந்தாரா? என்பது சமூக வலைதளங்களில் சந்தி சிரிக்கிறது.
அவர் ஏதோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் போல பேசிக்கொண்டிருக்கிறார். அவரை முதலமைச்சராக்கியது அம்மையார் ஜெயலலிதா என்கிறார். இது அண்டப்புளுகு. அவரை முதலமைச்சராக்கியது சசிகலாதான் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த லட்சணத்தில் அவர் தன்னை ஒரு விவசாயி என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
விவசாயி என்பது உண்மையாக இருந்ததால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பீர்களா? 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் - மாநிலங்களவையில் நிறைவேற்றுகிற போது, அதை ஆதரித்தவர்கள் அதிமுகவினர்.
இன்று நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. 100 நாட்களை தாண்டி டெல்லியில் இன்றைக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் லட்சக்கணக்கில் குடும்பத்தோடு உட்கார்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதை பற்றி எல்லாம் கவலை படவில்லை. ஆனால் தன்னை விவசாயி என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதைவிடக் கொடுமை போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை ப்ரோக்கர் என்றே கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இடைத்தரகர்கள் என கொச்சைப் படுத்துகிறார்.
ஆனால் சேலத்தில் இவருடைய தொழில் வெல்லமண்டியில் கமிசன் அடிப்பது. அவ்வாறு வெல்லமண்டி வைத்து கமிஷன் அடித்துக்கொண்டிருந்த பழனிசாமி, போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை தரகர் என்று பேசுகிறார்.
குடிமராமத்து என்ற பெயரில் இன்றைக்கு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் ஆட்சி - ஊழல் செய்து கொண்டிருக்கும் ஆட்சி பழனிசாமி தலைமையில் இருக்கும் இந்த ஆட்சி என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்த பழனிசாமி வேடம் உறுதியாக நிச்சயமாக, வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி கலையப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
பழனிசாமிக்கு முதலமைச்சராக உட்கார்ந்து ஆளத் தெரியாது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் இன்றைய நிலை சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் கடன்.
2011-இல் தி.மு.க. ஆட்சியை விட்டு இறங்கிய போது 1 லட்சம் கோடி ரூபாய் கடன். இந்த 10 வருடங்களில் 5 லட்சம் கோடி ஆகி இருக்கிறது. எனவே ஆளத்தெரியாது என்பதற்கு இதைவிட சாட்சி சொல்ல வேண்டுமா?
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க தெரியாத ஆட்சி தான் இந்த ஆட்சி. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கூடாது என்று சொல்லி அந்த வட்டாரத்தில் இருக்கும் மக்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் 100 நாட்களாக தொடர்ந்து அமைதியாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். 100-ஆவது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுக் கொடுக்கச் சென்றனர். அப்போது ஆட்சியர் இருந்து அந்த மனுவை வாங்கி இருந்தால், 13 பேரைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட்டிருக்குமா? அந்தக் குடும்பங்கள் இன்று அனாதையாக நிற்க நேர்ந்திருக்குமா? எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் சூழ்நிலை இது தான்.
இந்த ஆட்சியில் பெண்கள் எந்த அளவிற்கு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும், பொல்லாத ஆட்சி என்பதற்கும் அடையாளமே பொள்ளாச்சிதான். 200க்கும் மேற்பட்ட பெண்களை, கடத்தி, பலாத்காரம் செய்து, அதை வீடியோ பதிவு செய்து, பணம் பறித்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பில் இருக்கும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறது. இப்படிப்பட்ட கொடுமை இன்றைக்கு பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல நீட் பிரச்னை. ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, அரியலூர் பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற ஒரு சகோதரியை இழந்தோமே! அதைத் தொடர்ந்து பல மாணவ - மாணவிகளை இழந்திருக்கிறோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சட்டரீதியாக நீட்டை தமிழ்நாட்டில் இருந்து நீக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் நாம் ஈடுபடுவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
கேன்சர் என்ற கொடுமையான நோயை உண்டாக்கும் குட்காவை வினியோகம் செய்யும் நிறுவனத்தோடு தொடர்பு வைத்துக்கொண்டு அதில் கமிஷன் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்திருக்கிறார், அவர் தான் குட்கா புகழ் விஜயபாஸ்கர்.
இன்றைக்கு முதலமைச்சரிலிருந்து கடைக்கோடியில் இருக்கும் அமைச்சர்கள் வரை ஊழல் - லஞ்சம் - கொள்ளைதான். வருகின்ற மே-2ஆம் தேதி தேர்தல் முடிவு வரப்போகிறது. தேர்தல் முடிவு வந்ததற்கு பிறகு யார் ஆட்சி என்பது உங்களுக்கு தெரியும். எனவே அந்த ஆட்சியின் மூலமாக யார் சிறைக்குப் போகிறார்கள் என்பதை பார்க்கப் போகிறார்கள். இப்படி மொத்தத்தில் ஒரு கிரிமினல் கேபினட்டை இன்றைக்கு பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த ஊழல்வாதிகளின் விவரங்களை எல்லாம் சேகரித்துப் பட்டியல் போட்டு ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் வழக்குகள் போட்டு இருந்தாலும், சில மாதங்களுக்கு முன்பு ஆளுநரைச் சந்தித்து முதலமைச்சர் மீதும் அவருக்குக் கீழ் பணியாற்றி கொண்டிருக்கும் அமைச்சர்கள் மீதும் இருக்கும் முறைகேடுகள் – ஊழல் புகார்கள் அனைத்தையும் ஆதாரங்களோடு வழங்கி இருக்கிறோம்.
அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், முதலமைச்சர் பழனிசாமி மீது சம்பந்திக்கு டெண்டர் விட்டதில் ஊழல், துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் – வேலுமணி - அந்த பொறுப்பில் உட்கார்ந்துகொண்டு எல்லாவற்றிலும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார். தெருவிளக்கு, கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி, மாஸ்க், துடைப்பம் என்று கொரோனா காலத்திலும் கொள்ளை அடித்த ஆட்சி தான் பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி. தங்கமணி - மின்சார கொள்முதலில் ஊழல், நிலக்கரி இறக்குமதியில் ஊழல். வேலுமணி எதையும் வெளிப்படையாக செய்வார். தங்கமணி அமைதியாக செய்வார். அதுதான் அவர்கள் இருவருக்கும் வேறுபாடு. உதயகுமார் - வருவாய்த்துறை அமைச்சர். பாரத் நெட் டெண்டரில் ஊழல். ஜெயக்குமார் - மீனவர்களுக்கு வழங்கும் வாக்கி டாக்கியில் ஊழல். எனவே கடைக்கோடி அமைச்சர் வரை ஊழல் செய்து கொண்டிருக்கும் ஆட்சி தான் இன்றைக்கு இருக்கிறது. அதனால்தான் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரிலிருந்து - அமைச்சர்கள் வரை செய்திருக்கும் ஊழல்களை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற ஒரு உறுதிமொழியை சொல்லியிருக்கிறோம்
இன்று விலைவாசி விஷம்போல ஏறியிருக்கிறது. மஞ்சள் தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 65 ரூபாய் - இப்போது 120, சீரகம் தி.மு.க. ஆட்சியில் கிலோ 160 - இப்போது 350, பூண்டு தி.மு.க. ஆட்சியில் 100 ரூபாய் - இப்போது 250, மிளகு தி.மு.க. ஆட்சியில் ஒருகிலோ 275 - இப்போது 500, மிளகாய் தி.மு.க. ஆட்சியில் 70 ரூபாய் - இப்போது 180, புளி தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 45 ரூபாய் - இப்போது 150, நல்லெண்ணெய் தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 130 - இப்போது 230, கடலை எண்ணெய் தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 75 ரூபாய் - இப்போது 175, தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ தி.மு.க. ஆட்சியில் 105 - இப்போது 260.
இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பழனிசாமி தலைமையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டு இருக்கிறோம்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் உரிமைத் தொகை 1000, பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 5 குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 4 குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 100 குறைக்கப்படும், பால் விலை லிட்டருக்கு 3 குறைக்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பயணம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கியிருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உட்பட ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.
அடுத்து இந்த மாவட்டத்தில் - மதுராந்தகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி, செங்கல்பட்டில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி, செங்கல்பட்டில் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும், ஒரகடத்தில் ரயில்வே மேம்பாலம், தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும். சிங்கபெருமாள்கோவில் பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும். வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இணைக்கப்பட்டு நகராட்சியாக மாற்றப்படும். மதுராந்தகத்தில் தொழிற்பேட்டை, மீனம்பாக்கத்திலிருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு ஆகிய திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி தலைவர் கலைஞர் அவர்களுக்கு பெருமை சேர்க்கப் போகிறோம்.
கலைஞர் அவர்கள் நம்மைவிட்டு மறைந்த போது அவருடைய கடைசி ஆசை, அண்ணாவிற்கு பக்கத்தில் ஓய்வெடுக்க வேண்டும். அவர் உயிர் பிரிகின்ற நேரத்தில்கூட கடைசியாக உபயோகித்த வார்த்தை அண்ணா என்பதுதான். அதை நிறைவேற்ற இந்த ஆட்சி சம்மதிக்கவில்லை.
நானே நேரடியாக முதலமைச்சரை சந்திக்க சென்றேன். என்னை எல்லோரும் தடுத்தார்கள். நாம் அதற்குப்பிறகு நீதிமன்றத்தை நாடி, வழக்கு போட்டு, நீதிமன்றம் சரியான தீர்ப்பு கொடுத்தது.
இந்த நாட்டிற்கு எத்தனை பிரதமர்களை உருவாக்கி தந்த தலைவர். எத்தனையோ ஜனாதிபதிகளைத் அடையாளம் காட்டிய தலைவர். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்திய தலைவர். தோல்வியே பார்த்திராத ஒரே தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
எவ்வளவு திட்டங்கள் – சாதனைகளை உலகெங்கும் இருக்கும் பல்வேறு தரப்பு தமிழ் மக்களுக்கும் செய்தவர். அத்தகைய தலைவர் கலைஞருக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்தார்கள். தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்த பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா சிந்தியுங்கள் – செயல்படுங்கள்.
அதற்கு நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும். தாம்பரம் தொகுதியில் எஸ்.ஆர்.ராஜா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருப்பெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு கை சின்னத்திலும், திருப்போரூர் தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜிக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும், செங்கல்பட்டு தொகுதியில் வரலட்சுமி மதுசூதனன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தாருங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.