New - DetailPage - DMK
header_right
"அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கைகளை எழுப்பியதற்காக அவர்களை வஞ்சித்தது பழனிசாமி அரசு; கழக ஆட்சி மலர்ந்ததும், அவர்களது கோரிக்கைகள் யாவும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்"

பதிவு: 25 Mar 2021, 10:34:38 மணி

"அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கைகளை எழுப்பியதற்காக அவர்களை வஞ்சித்தது பழனிசாமி அரசு; கழக ஆட்சி மலர்ந்ததும், அவர்களது கோரிக்கைகள் யாவும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்"
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (24-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, ஆத்தூரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
முதலில் நீங்கள் எல்லாம் தந்திருக்கும் சிறப்பான உற்சாகமான இனிய வரவேற்பிற்கு நன்றி. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீங்கள் எல்லாம் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால், கொடுமையிலும் கொடுமையாக நடந்து கொண்டிருக்கும் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு ஆரவாரத்தோடு திரண்டிருக்கிறீர்கள்.
உங்களைத் தேடி நாடி ஆதரவு கேட்டு, வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன். ஏதோ தேர்தலுக்காக மட்டும் வந்து போகும் ஸ்டாலின் நான் அல்ல. வாக்குக்காக மட்டும் வந்து போகும் ஸ்டாலின் நான் அல்ல. என்றைக்கும் உங்களோடு இருந்து, உங்கள் பிரச்சினைகளுக்காக வாதாடுகிற, போராடுகிற உங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்க நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதில் உரிமையோடு பங்கேற்கும் அந்த ஸ்டாலின் தான் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன்.
வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நீங்கள் எல்லாம் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
ஆத்தூர் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சின்னதுரை அவர்கள். அவர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். எல்லோரிடத்திலும் எளிமையாக அன்போடு பழகும் ஒரு சிறந்த செயல் வீரர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும்,
கெங்கவல்லி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி அவர்கள், ஏற்கனவே கெங்கவல்லி தொகுதியில் வேட்பாளராக நின்று குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தவர். சேலம் மாநகரத்தின் மேயராக இருந்து சேலம் மாநகராட்சி மக்களின் அன்பைப் பெற்றவர். நம்முடைய ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தந்திருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், சங்கராபுரம் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் உதயசூரியன் அவர்கள், அவர் பெயரிலேயே உதயசூரியனைப் பெற்றிருக்கிறார். ஏற்கனவே இந்த சட்டமன்றத்தில் பணியாற்றி அந்த தொகுதி மக்களுடைய பிரச்சினைகளை எந்த அளவிற்கு தீர்த்து வைத்தார் என்பது உங்களுக்கு தெரியும். அதனால்தான் மீண்டும் அவரை வேட்பாளராக தேர்வு செய்து நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், ரிஷிவந்தியம் தொகுதியில் கழக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் அவர்கள், ஏற்கனவே அந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு எல்லோருடைய உள்ளங்களிலும் நன்மதிப்பை பெற்றவர். அந்த தொகுதியில் இருக்கும் மக்களிடத்தில் கழகத் தோழர்கள் இடத்தில் சிறப்பைப் பெற்றவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக மணிகண்ணன் அவர்கள், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றி இருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், கள்ளக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் பணியாற்றி கொண்டிருப்பவர் மணிரத்தினம் அவர்கள். அவருக்கு கை சின்னத்திலும் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடித்தர வேண்டும்.
அதுமட்டுமல்ல, நானும் வேட்பாளர்தான். தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் வேட்பாளராக நிற்கிறேன். இவர்கள் வெற்றிபெற்றால்தான் நான் முதலமைச்சர். எனவே அதை மனதில் வைத்துக்கொண்டு நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
வற்றாத வசிஷ்ட நதி இருந்த ஊருக்கு வந்திருக்கிறேன். கெங்கவல்லிக்கு வந்திருக்கிறேன். கள்ளக்குறிச்சி என்றாலே கழக குறிச்சி என்று சொல்லுவார்கள். அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொண்ட ரிஷிவந்தியம். புராணக் கதைகளில் இடம்பெற்ற உளுந்தூர்பேட்டை. மலைவாழ் மக்கள் நிறைந்த சங்கராபுரம். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கும் தொகுதிகளுக்கு உங்களில் ஒருவனாக இருக்கும் உங்கள் ஸ்டாலின் உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
முதலமைச்சராக இருக்கும் பழனிச்சாமி அவர்கள் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏன், நேற்றைக்கு கூட அவர் எப்படி முதலமைச்சர் ஆனார் என்ற கதையெல்லாம் சொன்னேன்.
ஊர்ந்து… ஊர்ந்து…சென்று முதலமைச்சர் ஆனார் என்று சொன்னேன். இதை நான் இட்டுக்கட்டி சொல்லவில்லை. நீங்கள் சமூகவலைதளங்களில் பார்த்த செய்தியைத் தான் சொன்னேன். இதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. நான் பாம்பா? பல்லியா? என்று கேட்கிறார். பாம்பு, பல்லி விஷத்தை விட பழனிசாமிக்கு தான் அதிக விஷம் இருக்கிறது.
அவரும் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். எதைக் கொடுக்க வேண்டுமோ கொடுத்து, பிரியாணி பொட்டலம் - பேட்டா – இப்படி எதை எதையோ கொடுத்து நிற்கவைத்த கூட்டத்திலும் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தி.மு.க. பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லை. ஆனால் ஏற்கனவே ஐந்து முறை தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதைச் சொல்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்யப்போகிறோம் என்பதையும் சொல்கிறோம்.
அதுபோல அம்மையார் ஜெயலலிதா இறந்ததற்கு பின்னர் நான்காண்டுகளாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களே… நீங்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? என்ற கேள்வியை நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.
உடனே அவருக்குக் கோபம் வந்துவிட்டது. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு, 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சம் கோடி முதலீட்டை இந்த தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்று பேசியிருக்கிறார். பொய்… பொய்… பொய்…. ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். மாநாடு நடந்தது உண்மை தான். அதேபோல வெளிநாட்டிற்கு முதலமைச்சர் உட்பட சில மந்திரிகள் கோட் - சூட் போட்டுக் கொண்டு சுற்றுலா சென்று வந்தது உண்மைதான். மறுக்கவில்லை.
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 3 லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்தோம் என்று பழனிசாமி சொல்கிறாரே… அதன் மூலமாக தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தொழிற்சாலைகள் கொண்டு வந்தீர்கள்? எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள்? அதற்கு முதலில் விளக்கம் சொல்லுங்கள்.
அதுகுறித்து நான் சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று தொடர்ந்து கேட்டு வந்தேன். மக்கள் மன்றத்திலும் கேட்டு வருகிறேன். அதற்கு பதில் சொல்வதற்கு அவருக்கு யோக்கியதை இல்லை… அருகதை இல்லை…!
அவர் 27 சதவிகிதம் முதலீடு வந்திருக்கிறது என்று ஒரு பொய்யைச் சொல்லி இருக்கிறார். எங்கு தொழிற்சாலை வந்து இருக்கிறது? என்று சொல்லவேண்டும். அவ்வாறு வந்ததாக எதுவும் தெரியவில்லை. 100 சதவிகிதம் வந்தால்தான் வெற்றியாகும்.
அது மட்டுமல்ல காவிரியை மீட்டேன்… காவிரியை மீட்டேன்… என்று ஒரு பொய்யை சொல்லத் தொடங்கி இருக்கிறார். அவர் மீட்கவில்லை. கலைஞர் போல அதிகாரம் பொருந்திய அமைப்பை பழனிசாமி பெற்றுக்கொடுத்தாரா? இல்லை.
மத்திய அரசின் ஜல்சக்தி துறையில் ஒரு கிளை போல அதிகாரமில்லாத வாரியத்தை பா.ஜ.க.விற்கு பயந்து பெற்று, டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர்தான் பழனிசாமி. இவ்வாறு அவர் பொய் பேசலாமா? முதலமைச்சர் பதவிக்கு அழகா இது?
நீர்நிலைகளை மீட்டெடுத்தேன். குடிமராமத்து பணிகள் செய்தேன் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
போலி பில் போட்டு பணத்தைச் சுருட்டி இருக்கிறார்களே தவிர, நீர்நிலைகளை எங்கும் தூர்வாரவில்லை. எனவே அதுவும் ஒரு பொய் என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவந்தேன் என்று சொல்கிறார். நேற்று நம்முடைய இளைஞரணி செயலாளர் உதயநிதிதான் செங்கலை எடுத்து எல்லா இடங்களிலும் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் எய்ம்ஸ் அடிக்கல்லை எடுத்துக் காண்பித்திருக்கிறார்.
2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றபோது மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடியை தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணத்திற்காக மதுரைக்கு அழைத்து பிரதமர் வந்த போது அதற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்கள். இப்போது 2021.
இதுவரையில் ஒரு இன்ச் வேலை கூட நடக்கவில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. இவ்வாறு தமிழகத்திற்கு துரோகத்தை செய்து கொண்டிருக்கும் ஆட்சிதான் மோடி தலைமையில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி, அதற்கு ஒத்து ஊதி அடிபணிந்து கூனிக் குறுகிக் கிடக்கும் பழனிசாமியின் ஆட்சி.
அதேபோல காவிரி - வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி விட்டதாக ஒரு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டு விழா நாடகம் நடந்தது.
அந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமரை அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அவ்வாறு பிரதமர் வருவதாக எங்களுக்குச் செய்தி கிடைத்தது.
உடனே நான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். “மாண்புமிகு பிரதமர் அவர்களே… நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும் போது பல அடிக்கல் நாட்டு விழாக்களில் கலந்து கொள்ளப் போகிறீர்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் காவிரி - வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக நாங்கள் செய்தி கேள்விப்பட்டோம். ஆனால் அது ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம். எனவே அந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்கி வைப்பதாக ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதை நீங்கள் திறந்து வைத்தால் நீங்கள் கேலிக்கு விமர்சனத்துக்கு ஆளாகி விடுவீர்கள்” என்று சொன்னேன்.
அது பிரதமருக்குத் தெரிந்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். ஆனால் அதற்குப் பிறகு அந்த நிகழ்ச்சியை அவர் இல்லாமலேயே நடத்தி இருக்கிறார்கள். கலைஞர் அந்தத் திட்டத்தை தொடங்கியபோது 165 ரூபாய் மதிப்பீட்டில் கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் 2011-இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறுத்தி விட்டார்கள். இப்போது இவர்கள் புதிதாக செய்ததாக ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவில் ஒரு பாட்டு வரும். “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து” என்று அதுபோல, பொய்யிலேயே இன்றைக்குக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக நாங்கள் மாற்றி விட்டோம் என்று ஒரு பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
மின்மிகை மாநிலம் என்றால் என்ன? அரசாங்கம் தானாக மின் உற்பத்தி செய்து, அதில் மீதமிருக்கும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்தால் அது மின்மிகை மாநிலம்.
ஆனால் இங்கு எந்த உற்பத்தியும் இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தைக் கடனாக வாங்குகிறார்கள். அவ்வாறு வாங்கும்போது அதில் கமிஷன் கிடைக்கிறது. அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு மின்மிகை மாநிலமாக மாற்றி விட்டோம் என்று ஒரு பொய்யான தகவலைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கமணி எந்த அளவிற்கு ஊழல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நானல்ல, பொதுவாக இருக்கும் அறப்போர் இயக்கத்தின் சார்பில் அதைக் கண்டுபிடித்து ஆதாரத்தோடு பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுத்து இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் அந்த வழக்கு பதிவாகி இருக்கிறது.
அடுத்து டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து விட்டோம் என்று முதலமைச்சர் பழனிசாமி சொல்கிறார். ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள் பாதிக்காத வகையில் அவற்றைப் பாதுகாத்து இருக்கிறாரே தவிர, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுகிற முயற்சியில் இம்மியளவும் பழனிசாமி ஆட்சி ஈடுபடவில்லை என்பது தான் உண்மை.
இவ்வாறு சாதனையே செய்யாமல் நாங்கள் சாதனைகளைச் செய்தோம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
உளுந்தூர்பேட்டையில் எம்.எல்.ஏ. ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் குமரகுரு. அவரை பழனிசாமிக்கு ஆல் இன் ஆல் என்று சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் இருக்கும் காண்ட்ராக்ட் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காண்ட்ராக்ட்களை தீர்மானிப்பவர். அவர்தான் முதலமைச்சருக்கு வலதுகரம் போன்றவர். அது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த தொகுதி மக்களுக்கு இந்த மாவட்டத்திற்கு ஏதாவது திட்டங்களை கொண்டு வந்திருக்கிறாரா? எதுவும் கொண்டு வரவில்லை. கொரோனா காலத்தில் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் நிலை இதுவென்றால், அமைச்சர்கள் எவ்வளவு சொத்துகள் சேர்த்திருக்கிறார்கள் என்று இந்து பத்திரிகையில் ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள்.
அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்துள்ளார்கள் என்றால் தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள் வேட்பு மனுவில் சொத்து மதிப்பைக் குறிப்பிட வேண்டும். அதை மறைக்க முடியாது. அதை எடுத்து அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
ஒவ்வொரு மந்திரியும் எவ்வளவு சொத்து சேர்த்து இருக்கிறார்கள் என்று தெளிவாக போட்டு இருக்கிறார்கள்.
அதில் துணை முதலமைச்சரின் சொத்து மதிப்பு 409 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு 359 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆர்.பி.உதயகுமாரின் சொத்து மதிப்பு 475 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. செல்லூர் ராஜூவின் சொத்து மதிப்பு 445 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 576 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கே.பி.அன்பழகனின் சொத்து மதிப்பு 683 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
இவையெல்லாம் கணக்கு காட்டியது, இன்னும் கணக்கு காட்டாமல் எவ்வளவு இருக்கிறதோ அது வேறு. எனவே பினாமி பெயரில் உறவினர்கள் பெயரில் வெளிநாடுகளில் இங்கிருக்கும் அமைச்சர்களின் சொத்துகள் குவிந்து இருக்கிறது.
கொள்ளையடித்து இருக்கும் இவை எல்லாம் இப்போது வெளி வருகிறதோ இல்லையோ நாம் தான் விரைவில் ஆட்சிக்கு வரப்போகிறோம். வந்தவுடன் முதலமைச்சரிலிருந்து கடைக்கோடியில் இருக்கும் அமைச்சர்கள் வரையில் செய்திருக்கும் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறோம். அவர்கள் அத்தனை பேருக்கும் நிச்சயமாக உரிய தண்டனை வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான். அதில் அழுத்தந்திருத்தமாக இருப்பான். ஏனென்றால் அவர்கள் கொள்ளையடித்திருக்கும் பணம் மக்களின் வரிப்பணம்.
அதேபோல இன்றைக்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எத்தனையோ கோரிக்கைகளை வைத்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு போராடிக் கொண்டிருக்கும் அவர்களை, இந்த ஆட்சி அழைத்து பேசவில்லை. போராடியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. மேலும் முதலமைச்சர் பழனிசாமி போராடுகிற அதிகாரிகளை - அரசு ஊழியர்களை பார்த்து, “ஐந்தாம் வகுப்பு தலைமை ஆசிரியர் 82 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்” என்று கொச்சைப்படுத்தி பேசினார். வாழ்நாள் முழுவதும் அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிக் கூறவில்லை. அவர்களைக் கொச்சைப்படுத்தி அவர்கள் வாங்கிய சம்பளத்தை வெளிப்படுத்தி கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
அதேபோல கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் அவர்கள், “ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாவிட்டால் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்”என்று எச்சரிக்கை விடுத்தார்.
போராடுகிற ஆசிரியர்கள் அழைத்து இந்த அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால் ஒருமுறை கூட அவர்களை அழைத்து இந்த அரசு பேசவில்லை.
அதேபோல துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள், “ஆசிரியர்கள் செய்த தவறுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது” என்று பேசுகிறார். அவர்கள் கேட்டது நியாயமானது. பத்தாண்டு காலமாக சம்பளத்திலிருந்து செலுத்திய எணம் எங்கே? அதற்குக் கணக்கு எங்கே என்று கேட்டார்கள். இவ்வாறு கேட்டது தான் அவர்கள் செய்த குற்றமா?
எனவே வஞ்சிக்கப்பட்ட ஆசிரியர்களே அரசு ஊழியர்களே நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் காவலராக இருந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அந்தத் தலைவர் கலைஞருடைய மகன் ஸ்டாலின் இருக்கிறேன். கவலைப்பட வேண்டாம்.
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கலைஞர் அவர்கள் எப்போதும் தேர்தலை சந்திப்பதற்கு முன்பு தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அந்த தேர்தல் அறிக்கையின் தலைப்பில் “சொன்னதை செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்” என்று குறிப்பிடுவார்.
அதேபோல கலைஞருடைய மகன் ஸ்டாலின் சொல்லுகிறான், ‘சொன்னதைச் செய்வான் செய்வதைத்தான் சொல்வான்’.
நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு என்ன உறுதிமொழிகளை வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட காட்டியிருக்கிறோம். அதில் சிலவற்றை சுருக்கமாக உங்களுக்கு சொல்ல நான் விரும்புகிறேன்.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக, 3 விவசாய சட்டங்கள் திரும்பப் பெற நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும். மீண்டும் உழவர் சந்தை உருவாக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாயும் 2,500, கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாயும் வழங்கப்படும். அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை.இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண் துறையில் தனிப்பிரிவு. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம் உருவாக்கப்படும். மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம், அரசு வேலை வாய்ப்புகளில் 40 சதவிகித இட ஒதுக்கீடு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும், சிறப்பு தாய் சேய் நலத் திட்டம் மூலமாக கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி வசதிகள். மேலும் மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், ஆனால், பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை குறைக்கப்படாது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கான பல அறிவிப்புகள் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.
இப்போது ஆத்தூர், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் இந்த 4 தொகுதிகளுக்கு உட்பட்டு இருக்கும் உறுதிமொழிகளை சொல்லியாக வேண்டும். மேட்டூர் - சேலம் கூட்டுக் குடிநீர் திட்டம். தலைவாசலில் குளிர்பதனக் கிடங்கு. மேட்டூரில் பாலிடெக்னிக் கல்லூரி. தலைவாசல், கெங்கவல்லியில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதற்காக மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் கொண்டு வரப்படும். கெங்கவல்லியில் அரசு செவிலியர் கல்லூரி. வாழப்பாடியிலும், கெங்கவல்லியிலும் பேருந்து நிலையங்கள் நவீன முறையில் விரிவுபடுத்தப்படும். கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம், தொழிற்பேட்டை, அரசு பொறியியல் கல்லூரி அரசு கலை அறிவியல் கல்லூரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் அமைக்கப்படும். ரிஷிவந்தியத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இரண்டாம் நிலை பணிகள் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோமுகி ஆற்றில் கச்சராபாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி சாலையில் மேம்பாலம் கட்டப்படும். மரவள்ளி கிழங்கிற்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும். சங்கராபுரத்தில் மரவள்ளிக் கிழங்கு தொழிற்சாலை அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். சங்கராபுரம் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். கள்ளக்குறிச்சிக்கும் - திருவண்ணாமலைக்கும் இடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ரிஷிவந்தியம் தனி தாலுக்காவாக அமைக்கப்படும். மணலூர்பேட்டை - தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை அமைக்கப்படும். மணலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையாக உயர்த்தப்படும். வீரகனூரில் பால் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்படும். வீரகனூரில் விலங்குகள் தீவனத் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்படும். முட்டல் ஏரியிலிருந்து மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீர் கல்லாநத்தம் ஏரிக்கு வந்தடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படும் மரவள்ளிக்கிழங்கிற்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படும். மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாராகும் சேகோ ஸ்டார்ச் போன்ற உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்படுவதற்கு சேலம் சேகோசர்வின் ஒரு கிளை ஆத்தூர் பகுதியில் அமைக்கப்படும்.
இவை நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங்களில் சில.
ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்த பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை சொல்லியிருக்கிறேன்.
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.
இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண்.
எனவே தமிழக மக்களே நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்த அடிமை ஆட்சி வேண்டுமா? கூனிக் குறுகி இருக்கும் இந்த பழனிசாமியை விரட்ட வேண்டாமா?
அதற்கு நீங்கள் எல்லாம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
கலைஞர் அவர்கள் உடன்பிறப்பே உடன்பிறப்பே என்று சொல்வது கழகத் தோழர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று தான் அழைப்பார்.
எனவே தமிழகத்தை மீட்க, மாநில உரிமைகளை பாதுகாக்க, அநீதிகளை துடைத்து நம் தமிழ் நாட்டை மீட்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று உங்களை அன்போடு பண்போடு, பாசத்தோடு, பரிவோடு, உரிமையோடு, உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, அனைத்திற்கும் மேலாக தலைவர் கலைஞருடைய மகனாக, உங்கள் பாத மலர்களைத் தொட்டுக் கேட்கிறேன். ஆதரவு தாருங்கள்… விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.