“கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றாமல், புதிய திட்டங்களையும் செயல்படுத்தாமல் மக்களை மறந்த அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை, மக்கள் மறக்க வேண்டும்”
பதிவு: 26 Mar 2021, 13:34:29 மணி
“கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றாமல், புதிய திட்டங்களையும் செயல்படுத்தாமல் மக்களை மறந்த அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை, மக்கள் மறக்க வேண்டும்”
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (26-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, திருவரங்கத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
முதலில் உங்களது உற்சாகமான இனியதொரு வரவேற்பிற்கு நன்றி. உங்களைத் தேடி நாடி உங்களிடத்தில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு ஆதரவு கேட்பதற்காக வந்திருக்கிறேன்.
நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன்.
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் - கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள், அவரைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரிடம் எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதில் முத்திரை பதிக்கும் வகையில் தன்னுடைய கடமையை நிறைவேற்றும் ஆற்றல் அவருக்கு உண்டு. கடந்த 7-ஆம் தேதி இதே திருச்சியில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற நிகழ்ச்சி நடத்துவதற்காக மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த சொன்னேன். அவர் மாபெரும் மாநாட்டையே நடத்தி காட்டினார். எந்தப் பணியில் ஈடுபட்டாலும், அமைச்சராக இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், அதேபோல கட்சிப் பணிகளை ஆற்றுவதாக இருந்தாலும் நேருக்கு இணை நேரு தான் என்று எல்லோராலும் பாராட்டப்படும் ஒரு வேட்பாளரைத்தான் திருச்சி மேற்கு தொகுதியில் நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், முசிறி தொகுதியில் நம்முடைய கழகத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மாவட்டச் செயலாளர் தியாகராஜன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருவெறும்பூர் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் அருமை தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு பணியாற்றி பல தியாகங்களை செய்து இந்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கிய தலைவர் கலைஞர் அவருடைய அன்பை - நட்பைப் பெற்ற நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பிலாருடைய பேரன். என்னுடைய ஆருயிர் நண்பனாக விளங்கிய, என்னுடைய வாழ்வில் ஏற்படும் எல்லா சுக துக்க நிகழ்ச்சிகளிலும் உரிமையோடு பங்கேற்ற என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி – அவரது அருமை மகன். இவர் ஏற்கனவே திருவெறும்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தத் தொகுதி முன்னேற்றத்திற்காக அரிய பல பணிகளை - திட்டங்களை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சட்டமன்றத்தில் ஆதாரங்களோடு புள்ளிவிவரங்களோடு எடுத்துவைத்து அந்தத் தொகுதி மக்களைக் கவர்ந்தவர். அவரைத்தான் மீண்டும் உங்களிடத்தில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், லால்குடி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் அவர்கள், அந்தத் தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அரும்பணி ஆற்றியவர். சட்டமன்றத்தில் லால்குடி தொகுதியின் பிரச்சினைகளை அழுத்தந்திருத்தமாக ஆணித்தரமாக எடுத்து வைத்தவர். அப்படிப்பட்டவரைத்தான் மீண்டும் தேர்ந்தெடுத்து நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், துறையூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலின் குமார் அவர்கள், அவரும் அந்த தொகுதியில் ஏற்கனவே நின்று வென்று சட்டமன்றத்திற்கு சென்று மக்கள் பணிகளை சிறப்பாக ஆற்றிய சகோதரர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருவரங்கம் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக எம்.பழனியாண்டி அவர்கள், ஒன்றிய கழகத்தின் செயலாளராக பணியாற்றி மக்கள் பணியாற்ற தன்னை ஒப்படைத்துக் கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருச்சி கிழக்கு தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் பொறுப்பை ஏற்று சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் சிறந்த செயல் வீரர். கடுமையான உழைப்பாளி. சமுதாயத்தில் அவருக்கு இணை அவர்தான் என்று பாராட்டப்படும் அளவிற்கு இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் கதிரவன் அவர்கள், தன்னுடைய கல்லூரியின் மூலமாக பலருக்குக் கல்வி மட்டுமல்ல, வேலைவாய்ப்பையும் பெற்றுத்தரும் அரும்பணியைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது அவர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவர் சிறுபான்மைச் சமூகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து சமூகத்திற்கும் துணை நிற்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தரவேண்டும் என்று உங்களையெல்லாம் நான் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
காவிரியும், கொள்ளிடமும் சூழ்ந்த ஆன்மீக நகரமான திருவரங்கம். காவிரி ஆற்றங்கரை நகரமான திருச்சி கிழக்கு - திருச்சி மேற்கு தொகுதிகள். தொழில் நகரமான – திருவெறும்பூர். பழங்காலத்தில் திருத்துவத்துறை என்ற – லால்குடி. முறுக்குக்கு பேர் போன – மணப்பாறை. சைவமும் வைணவமும் செழித்த – துறையூர். அரிசிக்குப் பேர் போன – மணச்சநல்லூர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொழில் நகராக விளங்கிய – முசிறி. இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தொகுதிகளின் வேட்பாளர்களைத்தான் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களிடத்தில் வேண்டுகோள் வைப்பதற்காக உங்களை தேடி நாடி நான் வந்திருக்கிறேன்.
ஏதோ தேர்தலுக்காக மட்டும் உங்களை சந்திக்கிற ஸ்டாலின் நான் அல்ல, எப்போதும், எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்க நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் உங்களை நேரடியாக சந்திக்கின்ற ஆற்றல் படைத்தவன்தான் இந்த ஸ்டாலின் என்ற அந்த உரிமையோடு உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கொள்கையில் உறுதியாக உள்ளவர்கள் நாங்கள். அந்த கொள்கையின் அடிப்படையில், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற குறிக்கோளைக் கொண்டு கழக அரசிலும், அரசுக்கு வெளியில் இருந்தாலும் இயங்குபவர்கள் நாங்கள்.
எனவே எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல தி.மு.க. என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். அதனால்தான் நம்முடைய தேர்தல் அறிக்கையிலேயே சமுதாய நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்து பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பாகுபாடின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் மாண்புகளையும் பாதுகாத்திடுவதே தி.மு.க.வின் கடமை என்பதைத் தெளிவாக குறிப்பிட்டுக்காட்டி இருக்கிறோம். அதன்படியேதான் நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகும் கடைபிடிப்போம் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசாக இருந்தாலும், மாநிலத்தில் இருக்கும் அ.தி.மு.க. அரசாக இருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்தில், நம்மை விமர்சித்து பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்கள் ஆட்சிக்காலத்தில் என்ன செய்திருக்கிறோம், என்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம், எதை மக்களுக்காக கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம் என்பதைப் பற்றி சொல்லும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை. காரணம் எதுவும் செய்யவில்லை.
மோடி அவர்கள் முதன் முதலாக பிரதமராக வந்த நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தார். அதில், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்றார். கொடுத்தாரா? வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை மீட்டு, இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வங்கியில் போடுவேன் என்றார். கொடுத்தாரா? விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என்று சொன்னார். உயர்த்தப்பட்டிருக்கிறதா?
அதேபோல இங்கு நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சி என்னென்ன உறுதிமொழிகளைச் சொன்னார்கள் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
எல்லோருக்கும் செல்போன் இலவசமாக கொடுப்பேன் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? பால் விலை லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? வேளாண் இடுபொருட்கள் அனைத்தும் இலவசம் என்று சொன்னார்கள். தந்தார்களா?
இவ்வாறு பட்டியல் போட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் நேரம் இல்லாத காரணத்தினால் நான் சிலவற்றை மட்டும் சொல்லி இருக்கிறேன். இப்போது அந்த இரண்டு பேரும் ஜோடி போட்டுக் கொண்டு இந்தத் தேர்தலுக்கு வாக்குக் கேட்டு வருகிறார்கள். அவர்களை எல்லாம் வரும் ஆறாம் தேதி இந்த நாட்டை விட்டு விரட்டும் வகையில் நீங்கள் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
அ.தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? இந்த கேள்வியைத்தான் நான் திரும்பத் திரும்ப அவர்களைப் பார்த்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
2016-இல் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இறந்தார்கள். அப்போதிலிருந்து கட்சியையும் - ஆட்சியையும் காப்பாற்றுவதில் தான் அவர்களுடைய கவனம் இருக்கிறதே தவிர, இந்த ஆட்சியை அதற்காகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். அவரிடம் இருந்து சசிகலா அந்த பதவியை பறிக்கிற முயற்சியில் ஈடுபட்டார். அதனால் பன்னீர்செல்வத்துக்கு கோபம் வந்துவிட்டது. உடனே அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று 40 நிமிடம் தியானம் செய்து ஆன்மாவோடு பேசினார். தர்மயுத்த நாடகத்தை நடத்தினார். அது எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.
அதற்கு பிறகு சசிகலா சிறைக்கு சென்றார். அவ்வாறு சிறைக்குச் சென்ற காரணத்தினால் தனக்கு அடிமையாக யார் இருப்பார்கள் என்று தேர்வு செய்து பழனிசாமியை முதலமைச்சராக உட்கார வைத்தார். அந்த முதலமைச்சர் பதவியை தினகரன் எப்படியாவது பறிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அந்த காரியத்தில் இறங்கினார்.
அதற்கு பிறகு மோடியே தலையிட்டார். அன்றைக்கு தமிழகத்தின் ஆளுநரைப் பயன்படுத்தி ஒரு கட்டப்பஞ்சாயத்தை நடத்துவதுபோல பன்னீர்செல்வம் - பழனிசாமி. இருவரையும் சமாதானம் செய்து அவர்களை இணைக்கும் நாடகத்தை நடத்தினார்கள்.
அதற்குப் பிறகு இருவரும் பதவியைப் பங்கு போட்டுக் கொண்டார்கள். கட்சியிலும் - ஆட்சியிலும் வேறு வேறு மாதிரி பங்கு போட்டுக் கொண்டார்கள். அப்போதிலிருந்து பழனிசாமியின் முதலமைச்சர் பதவிக்கு பன்னீர்செல்வம் ஆசைப்பட, இவருடைய ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பழனிசாமி முயற்சிக்க… இவ்வாறுதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
சமீபத்தில் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். சசிகலாவை சமாதானம் செய்ய பா.ஜ.க. எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் பிரச்சினைகள் வரும். எனவே அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
இப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு, தந்தி டி.வி.யில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு சிறப்பு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் சசிகலாவை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் முதலமைச்சர் பழனிசாமி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று பேசியிருக்கிறார்.
இதைப் பார்க்கும்போது இன்றைக்கும் அந்தக் கட்சியில் கோஷ்டி சண்டை தொடர்ந்து கொண்டிருப்பது புரிகிறது. எனவே மக்களைப் பற்றி கவலைப்பட முடியாத நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கிறோம் என்று ஒரு நாடகத்தை நடத்தினார்கள். இதுவரைக்கும் அது கண்டு பிடிக்கப்படவில்லை. ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரையில் ஒரு செய்தியும் வரவில்லை. அந்த மர்ம மரணத்தை பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கிறதா? இல்லை.
எனவே ஜெயலலிதா கொடுத்துவிட்டுச் சென்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு ஏதாவது செய்து இருக்கிறார்களா? இல்லை. தங்களது அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள மத்தியில் இருக்கும் பா.ஜ.க.விடம் அடிமையாக இருந்து, நம்முடைய உரிமைகளைப் பறிகொடுத்து இருக்கிறார்களே தவிர வேறு ஒன்றும் அல்ல.
அது நீட்டாக இருந்தாலும் சரி, உதய் திட்டமாக இருந்தாலும் சரி, உணவுப் பாதுகாப்பு சட்டமாக இருந்தாலும் சரி, ஜி.எஸ்.டி. வரியாக இருந்தாலும் சரி, பறிகொடுத்த உரிமைகளை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எனவே மக்களை மறந்து இருக்கும் அவர்களை நீங்கள் மறக்க வேண்டும். இதற்கெல்லாம் சரியான பாடத்தை வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறுகின்ற தேர்தலில் உதயசூரியனுக்கு நீங்கள் வெற்றியைத் தேடித் தந்து அவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும்.
நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு என்னென்ன பணிகளை நிறைவேற்றப் போகிறோம் என்பதைப் பற்றி நம்முடைய கழகத்தின் தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறோம். ஏறக்குறைய 505 உறுதிமொழிகள் - வாக்குறுதிகள் நம்முடைய தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதில் திருச்சியில் உயர் சிறப்பு மருத்துவமனை, மெட்ரோ ரயில், போட்டித்தேர்வு பயிற்சி மையம், பறக்கும் சாலைத் திட்டம், புதிய புறநகரம், மலைக்கோட்டை கோயிலில் கேபிள் கார் வசதி. இது அனைத்தும் செய்யப்படும் என்று உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர, மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும். மீண்டும் உழவர் சந்தை உருவாக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாயும் 2,500, கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாயும் வழங்கப்படும். அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை. இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண் துறையில் தனிப்பிரிவு. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம் உருவாக்கப்படும். மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும். பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம், அரசு வேலை வாய்ப்புகளில் இருக்கும் 30 சதவிகித இட ஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக உயர்த்துதல், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும், சிறப்பு தாய் சேய் நலன் திட்டம் மூலமாக கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி வசதிகள்.
விலைவாசியை குறைக்க, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், மேலும் மாதம் ஒருமுறை மின்கட்டணம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.
மேலும் இந்த திருச்சி மாவட்டத்திற்காக, திருவரங்கம் பேருந்து நிலையம், பக்தர்கள் தங்கும் இடங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். திருச்சி - நவல்பட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கூடுதல் நிறுவனங்களுடன் செயல்பட நடவடிக்கை. துறையூர், முசிறி, லால்குடி அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி. துறையூர், மணப்பாறையில் பாதாள சாக்கடைத் திட்டம். துறையூரில் புதிய பேருந்து நிலையம், பாலிடெக்னிக் கல்லூரி, சமுதாயக் கூடம், புறவழிச் சாலை, சிறப்புக் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம். திருச்சி, லால்குடி, உப்பிலியாபுரத்தில் நெல் கொள்முதல் மையங்கள். அரியமங்கலம் மற்றும் திருச்சி நகரிலுள்ள குப்பைக் கிடங்குகள் நகருக்கு வெளியே தூரத்தில் மாற்றப்படும். காந்தி மார்க்கெட், திருவரங்கம், தொட்டியம் மற்றும் மணப்பாறையில் குளிர்பதனக் கிடங்குகள். மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் குறுக்கே தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்; நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும். வேம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையம். மணப்பாறை மற்றும் மருங்காபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை; மணமேடு மற்றும் கோலக்குடியில் தொழிற்பேட்டை. தொட்டியம் - காட்டுப்புதூரில் வாழை பதப்படுத்தும் தொழிற்சாலை. திருச்சியில் உள்ள குறு, சிறு தொழிற்சாலைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசு, பெல் நிறுவனம், சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்படும். திருச்சியில் பூக்கள் சந்தை; வாழை கொள்முதல் மையம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கழிவு நீரேற்றும் நிலையத்தை அங்கிருந்து தொலைதூர இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள பெண்கள் சிறைச்சாலை நகருக்கு வெளியே மாற்றப்படும். திருச்சியில் சுற்றுச் சாலை அமைக்கப்படும்.
இது நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றப்பட இருக்கின்ற சில திட்டங்கள்.
ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்த பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்‘ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை அறிவித்தேன். அதை அறிவிக்கும்போது இது அண்ணா மீது – தலைவர் கலைஞர் மீது – தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணை என்று அறிவித்தேன். அதையும் இப்போது நினைவூட்டுகிறேன்.
இங்கு நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன். அதேநேரத்தில் எனக்கும் வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன். நானும் ஒரு வேட்பாளர் தான். தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர்.
எனவே மதவெறியைத் தூண்டி, இனவெறியைத் தூண்டி, தமிழ்மொழிக்கு ஆபத்து வரும் வகையில் இந்தியைத் திணித்து, நீட் தேர்வைக் கொண்டு வந்து நம்முடைய தமிழக மாணவர்களுக்குக் கொடுமை செய்திருக்கும் அதிமுக – பாஜக ஆட்சியாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது - இது திராவிட மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் தமிழ்நாட்டில் பலிக்காது.
தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்பே… உடன்பிறப்பே… என்று அடிக்கடி சொல்வார். அவர் கழகத் தோழர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவ்வாறு தான் அழைப்பார்.
அப்படிப்பட்ட உடன்பிறப்புகளே… இந்தத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல்தான். நாம் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதற்காக நடக்கின்ற தேர்தல்தான். ஆனால், அது மட்டுமல்ல, நம்முடைய தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். அதற்கான தேர்தலும் இது என்பதை மறந்து விடாதீர்கள்.
நாம் இழந்திருக்கும் உரிமையை மீட்க, உதயசூரியனுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
பின்னர் குளித்தலையில் மக்களிடையே நடந்துச் சென்று வாக்குச் சேகரித்தார்.