"முதலமைச்சர் வேட்பாளரின் தொகுதி என்ற சிறப்பைப் பெற்றுள்ள கொளத்தூர் தொகுதியை, தமிழகத்தின் ‘மாடல் தொகுதியாக’ மாற்றுவேன்" - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
பதிவு: 28 Mar 2021, 12:20:20 மணி
"முதலமைச்சர் வேட்பாளரின் தொகுதி என்ற சிறப்பைப் பெற்றுள்ள கொளத்தூர் தொகுதியை, தமிழகத்தின் ‘மாடல் தொகுதியாக’ மாற்றுவேன்"
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (27-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, கொளத்தூரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்தக் கொளத்தூர் தொகுதியில் வழக்கம்போல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன். இது நம்முடைய தொகுதி என்றே சொல்வேன்.
தேர்தல் அறிவித்த பின்னர் நான் வாக்கு சேகரிக்க இன்றுதான் வந்திருக்கிறேன். காரணம் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளுக்குச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன்.
எனவே காலம் தாழ்ந்து வந்ததற்காக நிச்சயம் நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். அதனால்தான் முதலில் சொன்னேன் - இது நம்முடைய தொகுதி.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் வீட்டுப் பிள்ளை தானே வளரும்”. அதேபோல மற்ற தொகுதிகளுக்குச் சென்று வருவதால், இந்தத் தொகுதியில் எனக்கு மேலும் ஆதரவு அதிகமாகத்தான் இருக்கும்.
உங்களுக்குத் தெரியும். ‘நம்முடைய எம்.எல்.ஏ. – நம் வீட்டுப் பிள்ளை - ஊர் ஊராகப் பரப்புரைப் பயணத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதனால் நம்முடைய தொகுதியைப் பற்றிக் கவலை இல்லை. இன்னும் சுற்றட்டும்’ என்றுதான் நீங்கள் சொல்வீர்கள்.
இருந்தாலும் எனக்கு மனது கேட்கவில்லை. சிலருக்குக் கோபம் வந்து விடும். அதற்குப் பயந்தே இப்போது வந்திருக்கிறேன். அவ்வாறு கோபம் வந்தாலும் அது உண்மையான கோபம் அல்ல, செல்லக்கோபம் தான் – உரிமை கலந்த கோபம் தான்.
எனவே அதுவும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்போது வந்திருக்கிறேன். இந்தத் தொகுதியில் நான் எதிர்க்கட்சி வரிசையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று, எப்படிப்பட்ட பணிகளை ஆற்றி இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும், இயற்கை பேரிடர்கள் எது வந்தாலும் உடனே வந்துவிடுவேன். கொரோனா காலத்திலும் வந்தேன். எனவே வாரத்திற்கு இரண்டு முறை, மூன்று முறை உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு உண்டு.
இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை; நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். எந்தத் தொகுதிக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு, இந்த கொளத்தூர் தொகுதிக்கு உண்டு. 234 தொகுதிகளில், முதலமைச்சர் வேட்பாளர் தொகுதி இந்த கொளத்தூர் தொகுதி.
அதனால் எதிர்க்கட்சியாக இருந்து ஆற்றிய பணிகளை விட இன்னும் பத்து மடங்கு ஆளுங்கட்சிப் பொறுப்பை ஏற்று - முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பல பணிகளை நிறைவேற்ற முடியும்.
234 தொகுதிகளில் இந்த கொளத்தூர் தொகுதியை ஒரு 'மாடல் தொகுதியாக' மாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். அப்படி மாற்றுவோம் என்ற நம்பிக்கை உங்களுக்கும் இருக்கிறது.
அதனால்தான் என்னை இவ்வளவு ஆசையாக, அன்போடு, பாசத்தோடு, வரவேற்று மகிழ்ந்து இருக்கிறீர்கள். எனவே உங்கள் வீட்டுப் பிள்ளை உங்களுக்காக ஓடியாடி உழைக்கும், உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய பணியைத் தொடர நீங்கள் எல்லாம் வரும் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்வதைவிட, உங்கள் வீட்டுப் பிள்ளையைத் தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, உங்களுக்குப் பணியாற்ற எங்களுக்கு உத்தரவிடுங்கள் என்று கேட்டு, உங்கள் அன்புக்கும் உற்சாகத்திற்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
சைதாப்பேட்டையில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
நீங்கள் தந்திருக்கும் இந்தச் சிறப்பான, உற்சாகமான, இனியதொரு வரவேற்பிற்கு நன்றி. உங்களைத் தேடி நாடி ஆதரவு கேட்டு வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். ஏதோ தேர்தலுக்காக மட்டும் வந்து சந்திக்கின்ற ஸ்டாலின் நான் அல்ல, எப்போதும் எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் உங்களோடு இருக்கும் ஸ்டாலின்தான் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.
வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டு கொள்வதற்காக உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன்.
சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் நம்முடைய கழக வேட்பாளர் அருமை நண்பர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும். அவர் ஏற்கனவே இந்த தொகுதியில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக எந்த அளவிற்கு சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். எதிர்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சட்டமன்றத்தில் எப்படியெல்லாம் குரல் கொடுத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். இந்தத் தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்து உங்களுடைய பிரச்சினைகளுக்காக எப்படி எல்லாம் வாதாடி - போராடியிருக்கிறார் என்பது இந்தத் தொகுதியில் இருக்கும் உங்களுக்கு நன்றாக தெரியும். அதேபோல சென்னை மாநகரத்தின் மேயராக இருந்து இந்த மாநகர மக்களுக்கு அடிப்படை பிரச்சினைகளை எப்படி எல்லாம் தீர்த்து வைத்தார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த வேட்பாளரைத்தான் தேர்ந்தெடுத்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளராக ஒப்படைத்து இருக்கிறோம்.
அதேபோல விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர், கழக வேட்பாளர் தம்பி பிரபாகர் ராஜா அவர்களை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும். அவர் வணிகர் பேரவையின் தலைவரான விக்கிரமராஜா அவர்களின் அருமைப் புதல்வர்; இளைஞர். நம்முடைய வேட்பாளர் பட்டியலில் குறைந்த வயதைக் கொண்ட வேட்பாளர். அப்படிப்பட்ட இளைஞரைத்தான் வேட்பாளராக தேர்ந்தெடுத்து விருகம்பாக்கம் தொகுதிக்கு உங்களிடத்தில் ஒப்படைத்து இருக்கிறோம். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
அதேபோல வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் ஜே.எம்.ஹெச்.ஹசன் அவர்களுக்குக் கை சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும். இவரும் இளைஞர்தான். காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரூண் அவர்களை உங்களுக்கு நன்றாக தெரியும். அவருடைய அருமை மகன். காங்கிரஸ் இயக்கத்தின் இளைஞர் அமைப்பில் துடிப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கும் அவரை நீங்கள் எல்லாம் வேளச்சேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க கை சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
நான் இப்போது சைதாப்பேட்டைக்கு வந்திருக்கிறேன். சைதாப்பேட்டைக்கு வருவதில் நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைவேன் என்பது உங்களுக்கு தெரியும். ஏனென்றால் இது கழகத்தின் கோட்டை.
கலைஞருடைய தொகுதி சைதாப்பேட்டை. கழகம் முதன் முதலில் 1967-இல் ஆட்சிக்கு வந்த போது தலைவர் கலைஞர் அவர்கள் இந்தத் தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது வரலாறு. நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்த வரையில் குடியிருந்த பகுதி வேளச்சேரி.
அதேபோல கழகம் ஆட்சிக்கு வரக் காரணமான மாநாடு - கூட்டணி கட்சிகளின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அவர்களே தலைமை ஏற்ற அந்த மாநாடு 1966ஆம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடத்தப்பட்டது.
இந்த மூன்று சிறப்புக்குரிய தொகுதிகளை சார்ந்திருக்கும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைத்தான் நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்க வந்திருக்கிறேன்.
1967 - இல் கலைஞர் அவர்கள் சைதாப்பேட்டையில் வெற்றிபெற்று பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றது உங்களுக்கு நன்றாக தெரியும். 1967-இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கழகத்தின் மாநில மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் நம்முடைய வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். அப்போது ஒவ்வொரு தொகுதியாக சொல்லிக்கொண்டு வந்தார். கடைசியாக சைதாப்பேட்டை தொகுதி என்று சொல்லி திருவாளர் 11 லட்சம் என்று அண்ணா அவர்கள் அன்றைக்கு கலைஞரை வேட்பாளராக அறிவித்தார்.
அதற்கு காரணம், கலைஞர் அவர்கள் கழகத்தின் பொருளாளராக இருந்து 11 லட்சம் ரூபாயைத் திரட்டி அண்ணா அவர்களிடம் தேர்தல் நிதியாக வழங்கியதைப் பெருமைப்படுத்திய அண்ணா அவர்கள் அவ்வாறு அறிவித்தார்.
அது மட்டுமல்ல, அதற்குப் பிறகு 1971 அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அப்பொழுதும் சைதாப்பேட்டை தொகுதியில் தான் கலைஞர் அவர்கள் வேட்பாளராக நின்றார். அப்போது சைதாப்பேட்டையில் வெற்றி பெற்றோம். தமிழ்நாட்டில் இதுவரையில் யாரும் சாதிக்காத 184 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. இது சைதைக்கு கிடைத்திருக்கும் வரலாறு.
இன்றைக்கு சைதாப்பேட்டை தொகுதியில் நம்முடைய வேட்பாளரை எதிர்த்து நிற்பவர் யார் என்பது உங்களுக்கு தெரியும். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அரசியலில் தலைமறைவாக இருந்தவர். கொரோனா காலத்தில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்தவர். இப்போது அ.தி.மு.க. வேட்பாளராக வந்திருக்கிறார். அதே கொரோனா காலத்தில் நம்முடைய மா.சு. அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தவர். அதனால் கொரோனாவில் அவர் பாதிக்கப்பட்டார். மேலும் அவருடைய மகனையே இழந்த நிகழ்வை யாரும் மறந்துவிட முடியாது. தன்னுடைய மகனை இழந்தவர்தான் மா.சு. அவர்கள்.
மா.சு.வை எதிர்த்து நிற்பவர் துரைசாமி அல்ல, துரோக சாமி. இவ்வாறு நானல்ல, அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களே கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வரலாறு இருக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் இறந்ததற்குப் பிறகு, முதலில் ஜானகி அணியில் சென்று சேர்ந்தார். அதற்குப் பிறகு ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் ஒன்று சேர்ந்ததற்குப் பிறகு அரசியலை விட்டு விலகி விட்டார். அதற்குப் பின்னால் 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவரோடு சேர்ந்து ஒரு போட்டி அ.தி.மு.க.வை ஆரம்பித்தார். சின்னத்தையும் கொடியையும் கைப்பற்றுவதற்கு திட்டம் போட்டு வழக்குப் போட்டார்.
அதற்கு பிறகு மறுபடியும் ஒதுங்கியிருந்தார். மீண்டும் 2011-இல் நான் கொளத்தூரில் நிற்கின்ற போது என்ன எதிர்த்து வேட்பாளராக நின்று தோற்றார். அதற்குப் பின்னால் சென்னை மேயராக இருந்தார். அவ்வாறு இருந்தாரே தவிர பணியாற்றவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து சென்னை மிதந்தது. அதற்குக் காரணமான ஒருவர்தான் இந்தத் துரோக துரைசாமி என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதைச் சென்னையில் இருக்கும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
அது இயற்கைப் பேரிடரல்ல, மனிதப் பேரிடர் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்குக் கொடுமையை இந்த சென்னை சந்தித்தது. பின்பு ஜெயலலிதா மறைந்ததை அடுத்து சசிகலாவைச் சந்தித்து அரசியலுக்கு நுழைகின்ற முயற்சியில் ஈடுபட்டார். அவர் சிறைக்குப் போனதும் தலைமறைவாகிவிட்டார்.
பிறகு ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற செய்தி வந்தது. அவருக்கு அருகில் உட்கார்ந்து கொண்டார். அவர் இல்லை என்றதும் ஓய்வெடுத்துக் கொண்டார். இப்போது இந்தச் சைதைத் தொகுதியில் வேட்பாளராக வந்திருக்கிறார். இவர் துரைசாமி அல்ல துரோக சாமி என்பதற்கு இதைவிட உதாரணம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
பதவியில் இருந்த போதும் மக்களுக்கு நன்மை செய்யாத, மக்களுக்கு துரோகம் செய்த துரைசாமியை நீங்கள் எல்லாம் வீழ்த்த வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய மக்கள் தொண்டனாக விளங்கிக் கொண்டிருக்கும் மா.சு.வை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவர் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி, மேயராக இருந்த போதும் சரி, நாம் எதிர்க்கட்சியாக இருந்த நேரத்திலும், பல்வேறு பணிகளை பல்வேறு நன்மைகளை இந்த மாநகர மக்களுக்கும், இந்தத் தொகுதி மக்களுக்கும் ஆற்றி இருப்பவர்.
இன்றைக்கு நம்மை எதிர்த்து நிற்கும் ஆளுங்கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, ஊழல் ஆட்சியை தி.மு.க. நடத்தியது என்று சொல்கிறார். கடந்த 10 வருடங்களாக நாம் ஆட்சியில் இல்லை. அ.தி.மு.க.தான் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கிறது.
இதுவரை இருந்த அரசியலிலேயே 1991 - 96 ஆம் ஆண்டில் நடந்த அதிமுக ஆட்சிதான் ஊழல் மலிந்த ஆட்சி. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவே, பர்கூரில் நின்று சுகவனத்திடம் தோற்றுப் போனார். அது வரலாறு.
அதை மிஞ்சும் அளவிற்கு ஊழல் செய்து, எங்கு பார்த்தாலும் கரப்சன் - கமிஷன் - கலெக்ஷன் என்பதை கொள்கையாக வைத்துக் கொண்டு முதலமைச்சரிருந்து கடைக்கோடி மந்திரி வரைக்கும் எப்படி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களோடு, புள்ளிவிவரத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆளுநரைச் சந்தித்து நாம் கொடுத்திருக்கிறோம். இன்னும் சில பிரச்சினைகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன.
அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், முதலமைச்சராக இருக்கும் பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் அவர் தன்னுடைய சம்பந்திக்கு, சம்பந்தியின் சம்பந்திக்கு டெண்டர் கொடுத்திருக்கிறார். அதில் ஊழல் நடந்திருக்கிறது. அதேபோல பொதுப்பணித்துறையில் தூர்வாருவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது.
இது அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என்று நம்முடைய கழகத்தின் அமைப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதில் பூர்வாங்க உண்மை இருக்கிறது. எனவே இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்.
அவ்வாறு உத்தரவு போட்டவுடன் முதலமைச்சர் பழனிசாமி உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர் இதை சி.பி.ஐ. விசாரிக்க கூடாது என்று, உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கினார். அன்று சி.பி.ஐ. மட்டும் விசாரித்து இருந்தால், அவர் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது. சிறைக்குள்தான் இருந்திருப்பார். அதுதான் உண்மை. அதனால் உடனடியாக ஆளுநர் இதில் தலையிட வேண்டும் என்று தி.மு. கழகத்தின் சார்பில் நாம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதேபோல துணை முதலமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதில் டாலர் பரிமாற்றம் நடந்திருக்கிறது. அதில் ஊழல் நடந்திருக்கிறது. எஸ்.பி.வேலுமணி மீது எல்.இ.டி. பல்பில் தொடங்கி ஸ்மார்ட் சிட்டி, கொரோனா கொள்முதல் வரை பட்டவர்த்தனமாக ஊழல் நடந்திருக்கிறது. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி ஊழல், காற்றாலை ஊழல், மின் கொள்முதல் ஊழல், உதிரிபாகங்கள் கொள்முதல் செய்வதில் ஊழல் எனப் பல புகார்கள். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாங்கப்படும் வாக்கி டாக்கியில் ஊழல் செய்ததாகப் புகார் உள்ளது. அதேபோல வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மீது பாரத் நெட் திட்டத்திற்கு டெண்டர் விட்டதில் பல கோடி ரூபாய் ஊழல். குட்கா புகழ் விஜயபாஸ்கர் அவர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி குட்காவை சட்டவிரோதமாக விற்க பல்வேறு நிறுவனங்களிடம் பல கோடி லஞ்சம் வாங்கியிருக்கிறார்.
இவ்வாறு பெரிய பட்டியலே இருக்கிறது. ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை. எனவேதான் நம்முடைய தேர்தல் அறிக்கையில் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஊழல் குறித்து முதலமைச்சரிலிருந்து கடைக்கோடியில் இருக்கும் அமைச்சர்கள் வரை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளோம்.
இந்த லட்சணத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஊர் ஊராகச் சென்று நான் உழைத்து வந்தவன், நான் படிப்படியாக வளர்ந்து வந்தவன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
அவர் எப்படி வந்தார் என்பது நமக்கு தெரியாதா? அவர் எப்படி வந்தார்? ஊர்ந்து… ஊர்ந்து… தவழ்ந்து… தவழ்ந்து…வந்தார்.
இதைச் சொன்னால் அவருக்குக் கோபம் வரும். நான் என்ன பாம்பா? பல்லியா? என்று கேட்பார். பாம்பு, பல்லிக்கு இருக்கும் விஷத்தை விட துரோகத்திற்கு இருக்கும் விஷம் தான் அதிகம்.
நீங்கள் ஊர்ந்து வந்தது உண்மையா? இல்லையா? தவழ்ந்து வந்தது உண்மையா? இல்லையா? அதை சொல்லுங்கள். இந்த லட்சணத்தில் அவர் உழைக்கிறாராம். ஸ்டாலின் உழைக்காமலேயே முன்னுக்கு வந்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நானா உழைக்காமல் வந்தேன்? எந்த ஸ்டாலினை பார்த்து கேட்கிறீர்கள். ஓராண்டு காலம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவன். சிட்டிபாபு மட்டும் என்னைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால் இன்றைக்கு ஸ்டாலின் இல்லை. 13 வயதில் திணிக்கப்படும் இந்தியை எதிர்த்த தலைவர் கலைஞருடைய மகன் ஸ்டாலின். 14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க. அமைப்பைத் தொடங்கி மாவட்டப் பிரதிநிதியாக - பகுதிப் பிரதிநிதியாக - மாவட்டப் பிரதிநிதியாக - கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக - செயற்குழு உறுப்பினராக - இளைஞரணி செயலாளராக - கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக - பொருளாளராக – தலைவர் உடல் நலிவுற்ற நேரத்தில் கழகத்தின் செயல் தலைவராக – அவர் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை உங்களைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் தலைவனாக - இவ்வாறு வளர்ந்தவன் நான்.
தலைவர் கலைஞர் அவர்களை பத்திரிகை நிருபர்கள் ஒருமுறை சந்தித்து, ‘ஸ்டாலினைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்’ என்று கேட்டபோது, அவர், ‘எனக்கு ஸ்டாலினிடத்தில் பிடித்தது உழைப்பு… உழைப்பு… உழைப்பு…’ என்று சொன்னார். அதை விட எனக்கு வேறு சான்றிதழ் தேவையா?
உழைப்பிற்கே ஓய்வு கொடுத்து உழைத்தவர் அவர். அவருடைய வாயினாலேயே அந்தப் பெயரை நான் பெற்றிருக்கிறேன். அது ஒன்று எனக்குப் போதும். வேறு எந்த பதவியும் எனக்குத் தேவை இல்லை.
பழனிசாமி என்று சொன்னாலே கொடநாடுதான் நினைவுக்கு வரும்.. பழனிசாமி என்று சொன்னாலே கொள்ளைதான் நினைவுக்கு வரும்.. பழனிசாமி என்று சொன்னாலே சாத்தான்குளம் படுகொலைதான் நினைவுக்கு வரும்.. பழனிசாமி என்று சொன்னாலே தூத்துக்குடியில் 13 பேரை காக்கை குருவியை சுட்டுக் கொல்வது போல சுட்டுக் கொன்றதுதான் நினைவுக்கு வரும்.. பழனிசாமி என்று சொன்னாலே பொள்ளாச்சிதான் நினைவுக்கு வரும்.. பழனிசாமி என்று சொன்னாலே நீட் தேர்வினால் பலர் இறந்ததுதான் நினைவுக்கு வரும். இப்போது பழனிசாமி என்றால் பாஜகவின் கிளைக்கழகமாக அ.தி.மு.க. மாறிவிட்டது என்பதுதான் நினைவுக்கு வரும்.
பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப்போவதில்லை. ஆனால் அ.தி.மு.க.வும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று விடக்கூடாது. அவ்வாறு ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலும் அவர் அ.தி.மு.க. உறுப்பினராக இருக்க மாட்டார், பாஜக உறுப்பினராக மாறி விடுவார்.
அதற்கு உதாரணம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றோம். ஒரே ஒரு இடத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அவர் ஓ.பி.எஸ். மகன். அவர் அ.தி.மு.க. எம்.பி.யாக வெற்றி பெற்று பாஜக எம்.பி.யாக இருக்கிறார். அவருடைய லெட்டர் பேடில் மோடியின் படம் தான் இருக்கிறது.
எனவே அவர்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று விடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் தொடக்கத்தில் 200க்கும் குறைவில்லாத இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னேன்.
ஆனால் இப்போது பல நாட்களாகத் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். அதை வைத்து சொல்கிறேன், 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம்.
தமிழக வரலாற்றிலேயே அழிக்க முடியாத கரும்புள்ளியாக இன்றைக்கு பழனிசாமி இருக்கிறார். எனவே இந்தக் கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையிலிருந்து விரட்டுவதற்கு நீங்கள் தயாராக வேண்டும். இந்த கிரிமினல் கேபினட்டை சிறைக்கு அனுப்ப தயாராக இருக்க வேண்டும். அதற்கான தேர்தல்தான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் தேர்தல் என்பதை மறந்துவிடக்கூடாது.
கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அதில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்,
பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம், கொரேனா காலத்தில் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் வெறும் 1,000 ரூபாய் வழங்கினார்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாயை நாம் ஆட்சி பொறுப்பேற்று ஜூன் 3-ஆம் தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவோம், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும், மாணவர்கள், இளைஞர்கள் நலனை அடிப்படையாக வைத்து அவர்கள் கல்விக்காக வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன் ரத்து செய்யப்படும், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும்.
மேலும் 3 தொகுதிக்காக, சென்னையில் சிதைந்து போன குடிசைமாற்று வாரிய வீடுகள் மீண்டும் கட்டித்தரப்படும். ஐ.ஐ.டி. கிருஷ்ணா விடுதி வாயில் தீண்டாமைச் சுவரை அகற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கே.கே. நகர் அரசு புறநகர் மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். கோயம்பேடு வணிக வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வறை மற்றும் முதலுதவி சிகிச்சை மையம் அமைத்துத் தரப்படும். வேளச்சேரி ஏரி தூய்மைப்படுத்தப்பட்டு படகு சவாரி செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும். வேளச்சேரி ராம் நகர் ஆறாவது பிரதான சாலை 13-வது மெயின் ரோடு தரைப்பாலம் உயர்த்தி அமைக்கப்படும். வேளச்சேரி தண்டீசுவரம் நகரில் உள்ள திடல் விளையாட்டுத் திடலாக மாற்றப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சாலையோரம் உள்ள கடைகளுக்கு மாற்றாக அரசு வணிக வளாகங்கள் கட்டித் தரப்படும். சென்னைப் பெருநகரில் தேவையான இடங்களில் சமுதாயக் கூடங்கள் கட்டப்படும். சென்னைப் பெருநகரில் தேவையான இடங்களில் விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ளவை தரம் உயர்த்தப்படும். கே.கே.நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்படும். சென்னை மக்களின் குடிநீர் தேவைகள் நிறைவு செய்யப்படும். மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் ஆட்சேயபணை இல்லாத இடங்களில் வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.
இவை நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றப்பட இருக்கின்ற சில திட்டங்கள்.
ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்த பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை அறிவித்தேன். அதை அறிவிக்கும்போது அண்ணா மீது ஆணையாக – தலைவர் கலைஞர் மீது ஆணையாக – தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக இதை நிறைவேற்றுவேன் என்று தான் அறிவித்தேன்.
இந்த ஐந்தாண்டு கால திட்டங்களும் பத்தாண்டு தொலைநோக்கு திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாக வேண்டும்.
இவர்களுக்கு மட்டுமல்ல, நான் எனக்கும் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். நான் ஒரு முதலமைச்சர் வேட்பாளராக உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். இந்த 3 பேர் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர்.
எப்படியாவது தமிழ்நாட்டில் மதவாதத்தை கொண்டு வந்து, இந்தியைத் திணித்து, தமிழகத்தில் ஆபத்தை ஏற்படுத்தி, நீட்டை கொண்டுவந்து கட்டாயப்படுத்தி, தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களின் மருத்துவ படிப்பைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, நம்மை கொடுமைக்கு ஆளாக்க நினைப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது - இது திராவிட மண். தந்தை பெரியார் பிறந்த மண் - அறிஞர் அண்ணா பிறந்த மண் - தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். மறந்துவிடாதீர்கள். இந்த மோடி மஸ்தான் வேலைகளெல்லாம் இங்கு பலிக்காது.
தமிழர்களின் வாழ்வுரிமை காப்பாற்றப்பட வேண்டும். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்ற வேண்டும். நம்முடைய தன் மானம் காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக உங்களை தேடி வந்திருக்கிறேன். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வையுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.