New - DetailPage - DMK
header_right
"சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் அ.தி.மு.க. ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா?" - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

பதிவு: 30 Mar 2021, 10:32:01 மணி

"சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் அ.தி.மு.க. ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா?"
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (29-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, அணைக்கட்டில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
நீங்கள் எல்லாம் தந்திருக்கும் இந்த சிறப்பான உற்சாகமான, இனியதொரு வரவேற்பிற்கு என்னுடைய நன்றி. உங்களைத் தேடி நாடி உங்களிடத்தில் ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன்.
ஏதோ தேர்தலுக்காக மட்டும் வரும் ஸ்டாலினாக நான் வரவில்லை, எப்பொழுதும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில், காட்பாடி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. கலைஞருக்கு பிறகு சட்டமன்றத்தில் அனுபவமுள்ள ஒருவர் உண்டு என்றால், அது இவர் தான். ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினர். அவருக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
அதேபோல அணைக்கட்டு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் நந்தகுமார் அவர்கள், ஏற்கனவே இந்தத் தொகுதியில் நின்று வென்று சட்டமன்றம் சென்று உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அவர் மாவட்டச் செயலாளராக இருப்பவர். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் அங்கிருக்கும் அமைச்சர்களிடத்தில் கோரிக்கைகளை வைப்பது சட்டமன்றத்தில் வாதங்களை எழுப்புவது மட்டுமல்ல, இந்தத் தொகுதியில் ஏதேனும் அரசு நிகழ்ச்சி என்றால் அங்கு சென்று தன்னுடைய உரிமையைக் கேட்பது என்று - சிறந்த செயல் வீரராக விளங்குபவரைத்தான் மீண்டும் தேர்ந்தெடுத்து இந்த அணைக்கட்டு தொகுதியின் வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
அதேபோல வேலூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளராக கார்த்திகேயன் அவர்கள், அவர் ஏற்கனவே வேலூர் மாநகர மேயராக இருந்து மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அதைத் தொடர்ந்து வேலூருக்கு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று, அந்தத் தொகுதி மக்களுடைய முன்னேற்றத்திற்காக பாடுபட்டு பணியாற்றி மீண்டும் வேட்பாளராக வேலூருக்கு கிடைத்திருக்கிறார். அவரை மீண்டும் வேலூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் அவருக்கு ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
அதேபோல கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் கே.சீதாராமன் எளிமையானவர். கழகத் தோழர்களின் உள்ளங்களில் சிறப்பான இடத்தை பெற்றவர். எனவே எளியவரான அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்து கே.வி.குப்பம் தொகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
அதேபோல குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் அருமை சகோதரி அமலு அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காத்தவராயன் அவர்கள் உடல் நலிவுற்று நம் அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தி மறைந்து விட்டார். அவர் எப்படி குடியாத்தம் தொகுதிக்குப் பணியாற்றி அந்தத் தொகுதியில் எல்லோருடைய உள்ளங்களிலும் இடம் பெற்றாரோ, அவர் வழி நின்று பணியாற்றுவதற்காகத்தான் சகோதரி வி.அமலு அவர்களை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். அவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடித்தர வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
யானை கட்டி நெற்போர் அடித்ததால் ஆனைகட்டியாக இருந்து, இன்று அணைக்கட்டு என்று அழைக்கப்படும் தொகுதி தான் இந்த அணைக்கட்டு. நம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களை 1971, 1989, 1996, 2006, 2011, 2016 இப்போது 2021 தேர்தலிலும் தேர்தெடுக்கப்போகின்ற காட்பாடி. சுதந்திரத்திற்கு முன்னதாகவே புரட்சியைத் தொடங்கிய ஊர் வேலூர். கைத்தறி நெசவுக்கு பெயர் போன குடியாத்தம். மாங்காய், நெல் உற்பத்திற்கு பேர் போன கே.வி.குப்பம்.
இவ்வாறு பெருமைக்குரிய சிறப்புக்குரிய தொகுதிகளின் வேட்பாளர்களாக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அவர்கள் அனைவரையும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து வெற்றி பெற வைக்கவேண்டும் என்று உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக உங்கள் ஸ்டாலின் உங்களிடம் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.
இந்த வட்டாரத்து மக்களுடைய எந்தக் கோரிக்கையையாவது கடந்த பத்து வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி இருக்கிறதா? நீங்கள் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
இந்த பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டதா? ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் தரத்தை உயர்த்த ஏதாவது செய்தார்களா? அணைக்கட்டு தொகுதியில் மலைப்பாங்கான கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தார்களா? காவனூரில் இரயில்வே பாலம் அமைத்துத் தந்தார்களா? கே.வி.குப்பம் தொகுதியில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முதல் திட்டத்தை நம்முடைய தி.மு.க. அரசு தான் நிறைவேற்றியது. அதன் இரண்டாம் திட்டத்தை பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு செய்ததா?
கால்நடை மருத்துவமனை கேட்ட மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? இந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், இங்கிருந்து பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? குடியாத்தம் தொகுதியில் தீப்பெட்டி தொழில் உற்பத்தியைக் கவனித்தார்களா?
அணைக்கட்டு தொகுதியில் நெல்சேமிப்பு மண்டி, பழத்தொழிற்சாலை, குளிர்சாதன சேமிப்பு கிடங்கு மக்கள் கேட்டார்கள். செய்தார்களா? குடியாத்தம் நெசவாளர்கள் செழிக்க ஒரு தொழில்துறை பூங்காவாவது அமைக்கப்பட்டதா? காட்பாடியில் அரசு கலைக்கல்லூரி கோரிக்கை நிறைவேறப்பட்டதா? இவ்வாறு நீங்கள் இல்லை… இல்லை என்று சொல்லும் சூழ்நிலையை உருவாக்கிய இந்த ஆட்சியை நீடிக்க விடலாமா? இந்த ஆட்சிக்கு பதில் சொல்ல வேண்டுமா? வேண்டாமா? அதற்கு நீங்கள் தயாராகிவிட்டீர்களா? நான் 200 இடங்களுக்கு குறையாமல் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையாகச் சொன்னேன். இப்போது கருத்துக்கணிப்புகளில் நான் சொன்னதை விட அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இப்போது பதினைந்து நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். அந்தப் பயணத்தில் மக்களைச் சந்திக்கும் போது அவர்கள் உணர்ச்சியை, எழுச்சியை, ஆர்வத்தை, ஆரவாரத்தைப் பார்க்கும் போது உறுதியாக 234 இடங்களிலும் நாம் தான் - நம்முடைய அணி தான் வெற்றி பெறப் போகிறது. இதை நிறைவேற்றும் பொறுப்பு உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறப்போவதில்லை. அது உறுதி. அவர்கள் வாஷ் அவுட். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி நடைபெற்றதோ அப்படி தான் நடக்கப்போகிறது அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் குட்டிக்கரணம் போட்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப்போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றாலும் அது பாஜக எம்.எல்.ஏ. தான். அதற்கு உதாரணம் நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றோம். ஒரே ஒரு இடத்தில் தேனியில் மட்டும் ஓ.பி.எஸ். மகன் வெற்றி பெற்றார். அவர் இப்போது பாஜக எம்.பி.யாகத்தான் செயல்படுகிறார். அவருடைய லெட்டர் பேடில் அவருடைய கட்சித் தலைவர் படம் இல்லை. மோடியின் படத்தைப் போட்டு வைத்திருக்கிறார். அதனால்தான் 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறேன். அதில் நீங்கள் விழிப்போடு இருக்கவேண்டும்.
இப்போது பழனிசாமி ஊர் ஊராகச் சென்று பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தலில் யார் வேண்டுமானாலும் பிரச்சாரத்தை நடத்தட்டும். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு முதலமைச்சர் பொய் பேசக்கூடாது.
ஆனால், முதலமைச்சர் அப்பட்டமாக, அபாண்டமாக பொய் சொல்கிறார். அவர் படிப்படியாக வளர்ந்து வந்தேன் என்று சொல்கிறார். அவர் படிப்படியாகவா வந்தார்? ஊர்ந்து வந்தார்… தவழ்ந்து வந்தார்…
‘நான் உழைத்து உழைத்து வந்தேன். ஸ்டாலின் உழைத்து உழைத்து வந்தாரா?’ என்று கேட்கிறார். நான் உழைத்து வந்தேன் என்பது இங்கிருக்கும் நம்முடைய தொண்டர்களை கேட்டால் சொல்வார்கள். தலைவர் கலைஞர் அவர்கள், 13 வயதில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து, “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே“ என்று போராடியவர்.
அவருடைய மகன் இந்த ஸ்டாலின் 14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை உருவாக்கி, அந்த வட்டத்தில் பகுதிப் பிரதிநிதியாக கட்சித் தோழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்டக் கழகப் பிரதிநிதியாக பொறுப்பேற்று, கழகத்தில் பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, படிப்படியாக வளர்ந்து இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று, பின்னால் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக, பொருளாளராக, தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்த நேரத்தில் கழகத்தின் செயல் தலைவராக, அவருடைய மறைவிற்கு பிறகு உங்களைப் போன்ற தொண்டர்கள் நிரம்பியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இன்றைக்கு நான் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
அதேபோல மக்கள் பணியில் சட்டமன்ற உறுப்பினராக, இரண்டு முறை சென்னை மாநகரத்தின் மேயராக, அதற்குப் பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக, இன்றைக்கு எதிர்க்கட்சித்தலைவராக, நாளைக்கு…..
இந்தப் பதவிகளை எல்லாம் பதவியாக நான் நினைத்ததில்லை. தலைவர் கலைஞர் அவர்களிடம் ஒருமுறை பத்திரிகை நிருபர்கள், “உங்கள் மகன் ஸ்டாலினைப் பற்றி ஒரு வரி சொல்லுங்கள்” என்று கேட்டபோது, அவர் “உழைப்பு… உழைப்பு… உழைப்பு.. அதுதான் ஸ்டாலினிடம் எனக்கு பிடிக்கும்” என்று சொன்னார்.
அதாவது ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து உழைத்த தலைவர் கலைஞர் தனது திருவாயினால், என்னைப் பற்றி அவ்வாறு சொன்னதைவிட வேறு பதவி எனக்குத் தேவையே இல்லை.
ஆனால் இன்றைக்கு தவழ்ந்து தவழ்ந்து சென்று, ஊர்ந்து ஊர்ந்து சென்று, இன்றைக்கும் முதலமைச்சராக உட்கார்ந்திருக்கும் பழனிசாமி அவர்கள், 'நாங்கள் பல விருதுகளை வாங்கி விட்டோம், எங்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது, பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்' என்று பேசியிருக்கிறார்.
அதாவது பழனிசாமி ஆட்சியில் பாலாறும் - தேனாறும் ஓடுவதுபோல, அதற்கென்று சில ஊடகங்களும் நடுநிலையோடு நாங்கள் செய்தி போடுகிறோம் என்று சொல்லி - அந்தப் போர்வையில் இந்தச் செய்திகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு சட்டம் - ஒழுங்கு நிலை என்ன?  மக்கள் அதை மறந்துவிடுவார்களா?
உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் நான் நினைவுப்படுத்துகிறேன். தடைசெய்யப்பட்ட பொருளான குட்கா இன்னும் விற்பனையில் இருக்கிறதே… அதுகுறித்து இன்னும் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறதே… அதனை மக்கள் மறந்துவிடுவார்களா?
தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றீர்களே… அதனை நீங்கள் மறந்து விட்டீர்களா? 2011-இல் பரமக்குடி துப்பாக்கிச் சூடு, 2012-இல் கூடங்குளம் துப்பாக்கிச் சூடு. இதையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்களா?
சாத்தான்குளத்தில் அப்பா – மகனை போலீஸ் லாக்கப்பில் அடித்து கொன்றீர்களே… அதனை மக்கள் மறந்து விட்டார்களா? பட்டப்பகலில் செயின் பறிப்பு, ஏ.டி.எம் கொள்ளை. அதை எல்லாம் மக்கள் மறந்து விடுவார்களா?
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. ‘அடிக்காதீங்க அண்ணா’ என்று அந்தப் பெண்கள் கதறி அழுதார்களே… மறந்துவிட்டீர்களா? பொள்ளாச்சி போல எத்தனை கொடூரங்கள் இந்த ஆட்சியில் அரங்கேறியிருக்கிறது?
2017-இல் ஏழு வயது குழந்தை ஹாசினியைச் சிதைத்துக் கொன்றது யாருடைய ஆட்சியில்? 2018-ஆம் ஆண்டு சென்னையில் 7 வயது குழந்தையை 22 கொடுமைக்கார்கள் சிதைத்தார்களே… அது நினைவில் இருக்கிறதா? இல்லையா?
அருப்புக்கோட்டையில் பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய புகார்களை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்களா? பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டி.ஜி.பி அந்தஸ்தில் இருந்தவர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றியது யார்? விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூரில் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் ஜெயஸ்ரீ என்ற சிறுமியை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினாரே? அவருக்கு அந்தக் கொடுமையை செய்ய யார் தைரியம் கொடுத்தது?
பெரியார் சிலையை அவமதிப்பது, பா.ஜ.க.வினர் கோயம்புத்தூரில் நடத்திய கலவரம், அந்த கலவரத்தின் முடிவில் பிரியாணி கடையை சூறையாடினார்களே… தேடப்படும் ரவுடிகள் பா.ஜ.க.வில் சேர்த்த போது காவல்துறையால் என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது?
அந்த பா.ஜ.க.வை தூக்கி சுமந்து கொண்டிருக்கிறீர்களே… உங்களுக்கு வெட்கம் - மானம் - சூடு - சொரணை எதுவும் இல்லையா? இதுவா பெண்களுக்கான பாதுகாப்பான ஆட்சி? இதை சொல்வதற்கு உங்கள் நா கூசவில்லையா?
இந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த கொலை - கொள்ளை - பாலியல் துன்புறுத்தல்கள் - ரவுடியிசங்களை பட்டியல் போட தொடங்கினால், நேரம் போதாது. அவ்வளவு பெரிய பட்டியல் இருக்கிறது.
இந்த ஆட்சியின் அவலட்சணம் அட்டைப்படமாக ஜூனியர் விகடன் பத்திரிகையில் வந்தது.
“காவு கேட்கும் கந்துவட்டி. உயிரா? மானமா?” “ஒரு கொலைக்கு 6,000 ரூபாய்; மிரளவைக்கும் ரவுடிகள். அலறும் தமிழகம்” “பெருகும் வக்கிரங்கள். கதறும் சிறுமிகள். பாலியல் பண்டமல்ல பிஞ்சுகள்” “ஆபாச அரக்கர்கள். ஆளுங்கட்சி புள்ளிகள்” இவ்வாறு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
என்னதான் மூடி மறைக்க முயற்சி செய்தாலும் அந்த செய்திகளெல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்தக் கூட்டத்தின் வாயிலாக இந்த நாட்டுக்குத் தெரிவிக்க விரும்புவது, விரைவில் நம்முடைய ஆட்சி வரப்போகிறது. நம்முடைய கழக ஆட்சி. இந்த ஸ்டாலின் தலைமையில் அமையவிருக்கும் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு காக்கப்படும். நான் பலமுறை சொல்லிவிட்டேன், காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை இந்த ஸ்டாலின் வழங்குவான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கு நான் பொறுப்பு.
ஏற்கனவே கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அதில் ஏறக்குறைய 505 தேர்தல் உறுதிமொழிகள் சொல்லியிருக்கிறோம்.
மேலும் இந்த வேலூர் மாவட்டத்திற்காக, அணைக்கட்டில் நறுமணத் தொழிற்சாலை; தொழிற்பேட்டை. அணைக்கட்டு தொகுதியில் சாத்தனூர் அணையிலிருந்து ஒடுக்கத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம். ஒடுக்கத்தூரில் மாம்பழம் மற்றும் கொய்யா பழச்சாறு தொழிற்சாலை. காட்பாடி சாலையில் வெங்கடேசுவரா பள்ளி அருகிலும், ஆற்காடு சாலையில் சி.எம்.சி. மருத்துவமனை அருகிலும் சுரங்கப் பாதைகள். காட்பாடி தொகுதியில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி. வேலூரில் தோல் தொழிற்பூங்கா; தகவல் தொழிட்நுட்பப் பூங்கா; மலர் வணிக மையம்; டோல்கேட் முதல் பச்சையப்பா வரையில் பறக்கும் மேம்பாலம். வேலூர் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும். குடியாத்தத்தில் ஜவுளிப் பூங்கா மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம். தோல் தொழிற்சாலையை அடிப்படையாகக் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம். தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களைச் சுத்தப்படுத்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். வேலூர், குடியாத்தம் ஆகிய ஊர்களில் புறவழிச் சாலைகள். பேரணாம்பட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி. தமிழறிஞர் கே.எம். அண்ணல் தங்கோ அவர்களுக்குக் குடியாத்தத்திலும், திருமுருக கிருபானந்த வாரியாருக்குக் காங்கேயநல்லூரிலும் நினைவு மண்டபங்கள். கே.வி.குப்பத்தில் தொழிற்பயிற்சி நிலையம். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கே.வி.குப்பம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்படும். அரியூர் கூட்டுறவு நூற்பாலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கும் அரசு வெடிமருந்து தொழிற்சாலை திறக்கப்பட்டு மீண்டும் செயல்பட நடவடிக்கை. இது நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றப்பட இருக்கின்ற சில திட்டங்கள்.
ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்த பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை அறிவித்தேன். அதை அறிவிக்கும்போது இது அண்ணா மீது – தலைவர் கலைஞர் மீது – தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணை என்று தான் அறிவித்தேன்.
இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
இப்போது இங்கிருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு விட்டேன். இப்போது இறுதியாக எனக்கு வாக்கு கேட்கப் போகிறேன். ஒட்டுமொத்த தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். அதனால் இங்கிருக்கும் நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர்.
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, சமஸ்கிருதத்தை திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.
இது திராவிட மண். தந்தை பெரியார் பிறந்த மண் – பேரறிஞர் அண்ணா பிறந்த மண் - கலைஞர் வாழ்ந்த மண், இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.
தமிழருடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்றால், நம்முடைய தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், இழந்திருக்கும் உரிமையை மீட்க வேண்டும் என்றால், நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டு, உங்கள் அன்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
இராணிப்பேட்டையில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.
இராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் அருமை சகோதரர் காந்தி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும். காந்தி என்றால் இராணிப்பேட்டை. இராணிப்பேட்டை என்றால் காந்தி தான். அவரை காந்தி என்றால் சிலருக்கு தெரியாது. இராணிப்பேட்டை காந்தி என்றால்தான் தெரியும். அந்த அளவிற்கு தொகுதியோடு ஒன்றி இருப்பவர். நம்முடைய மாவட்டச் செயலாளர்களில் மூத்த மாவட்ட செயலாளராக இருப்பவர். ஏற்கனவே இந்தத் தொகுதி மக்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த ராணிப்பேட்டை தொகுதிக்கு பல நன்மைகளை, திட்டங்களை, சாதனைகளை, கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருக்கிற போதும் பல பணிகளை ஆற்றி இருப்பவர். அவர்தான் மீண்டும் இந்த இராணிப்பேட்டை தொகுதியில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
அதேபோல ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ஈஸ்வரப்பன் அவர்கள் ஒரு துடிப்பான இளைஞர். அவர் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து சட்டமன்றத்தில் பேசிய பேச்சுகளை தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஆளுங்கட்சி உறுப்பினர்களே மனதாரப் பாராட்டினார்கள். அந்த அளவிற்கு மிக சிறப்பாகப் பேசுபவர், பணியாற்றுபவர். ஏற்கனவே ஆற்காடு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அவரைத்தான் மீண்டும் தேர்ந்தெடுத்து வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
அதேபோல சோளிங்கர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளராக அந்தத் தொகுதியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோரிடத்திலும் நற்பெயர் பெற்றவராக விளங்குபவர் ஏ.எம்.முனிரத்தினம் அவர்கள். அவர் ஏற்கனவே அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றி இருப்பவர். எனவே அப்படிப்பட்டவரைத்தான் காங்கிரஸ் கட்சியின் சார்பில், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தி உள்ளோம். அவருக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் வாக்களித்து பெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
அதேபோல அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர், தொல்.திருமாவளவன் அவர்களுடைய போர் வீரனாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக இருப்பவர்தான் வேட்பாளர் கௌதம சன்னா. அவருக்கு பானை சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடித்தர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
முதலமைச்சர் பழனிசாமிக்கு இப்போது தோல்வி ஜுரம் வந்துவிட்டது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார். என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசிக் கொண்டிருக்கிறார்.
அவர் இப்போது புதிதாக புதிதாகக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார். இயற்கையும், கடவுளும் தனக்குத் துணையாக இருப்பதாகப் பேசியிருக்கிறார்.
தன்னுடைய பலவீனத்தை மறைப்பதற்காக, தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக ஏதேதோ சொல்ல ஆரம்பித்திருக்கிறார். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘புலிக்கு பயந்தவர்கள் என் மீது படுத்துக்கொள்ளுங்கள்’ என்று. அது போல தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
இவருக்கு இயற்கை எப்போது துணை இருந்திருக்கிறது? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே இயற்கை பேரிடர்கள்தான் அதிகமாக நடக்கிறது என்பதற்கு பல சாட்சிகள் உண்டு.
அதாவது உயிர்களை காவு வாங்கிய மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது 2004-ஆம் ஆண்டு சுனாமி. அது அ.தி.மு.க. ஆட்சியில் தான் வந்தது. அதேபோல லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்த 2011 தானே புயல், அதுவும் அ.தி.மு.க. ஆட்சியில் தான் வந்தது. 2015-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் சென்னையே மிதந்தது. தலைநகரை மீட்பதற்கு இரண்டு மாதங்கள் ஆகியது. அதுவும் அ.தி.மு.க. ஆட்சியில் தான். 2016-இல் வரலாறு காணாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டது. அதன்பின்னர், ஒக்கி புயலினால் பேரழிவு ஏற்பட்டது. பிறகு கஜா புயல். நீலகிரியில் நிலச்சரிவு. வரலாறு காணாத வறட்சி. இப்போது அண்மையில் நிவர் புயல் வந்தது. புரெவி புயல் வந்தது. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இயற்கைப் பேரிடர்களில் மக்களை முன்யோசனையோடு, முன்னெச்சரிக்கையோடு பாதுகாக்கின்ற கடமையை இந்த அ.தி.முக. ஆட்சி செய்யத் தவறிவிட்டது. பேரிடர் ஏற்பட்ட பிறகும் முறையான நிவாரணம் கிடைத்ததா? மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிதியை முறையாக பெற்றார்களா? அதுவும் இல்லை.
அது மட்டுமல்ல, இந்தப் பேரிடர் காலத்தில் ஒரு முதலமைச்சர் வந்து மக்களை சந்திக்க வேண்டும். அவ்வாறு அவர் சந்திக்கவும் இல்லை. சில வேடிக்கை எல்லாம் நடந்தது. வேதாரண்யம் பகுதியில் ஓ.எஸ்.மணியன் என்ற அமைச்சர் மக்களுக்குப் பயந்து சுவர் ஏறி குதித்து ஓடினார். ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிப் பக்கமே வரமாட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதுதான் பழனிசாமி ஆட்சியின் லட்சணம்.
இவை எல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக்கொண்டு, இப்போது இயற்கையையும், இறைவனையும் கூப்பிடுகிறார். சாமி சிலைகளைக் கடத்தியவர்களைக் காப்பாற்றிய ஆட்சிதான் இந்த பழனிசாமி ஆட்சி. அந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் அவர்களுக்கு என்னென்ன துன்பங்கள் கொடுத்தார்கள்? சாமி சிலை திருடுவதைக் கண்டுபிடிப்பதற்காக பொன்.மாணிக்கவேல் எவ்வளவோ கஷ்டப்பட்டார். அவருக்கு துன்பத்தைக் கொடுத்தவர்களுக்கு இந்தக் கடவுள் துணை நிற்பாரா? பழனிசாமிக்கு கடவுள் துணை நிற்பாரா? இதுதான் பழனிசாமி ஆட்சியின் லட்சணம். இந்த பழனிசாமியை கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்கிறார். நான் கேட்கிறேன், இந்த ஆட்சியில் தூத்துக்குடியில் பதிமூன்று பேரை சுட்டுக் கொன்றார்கள். இந்தப் பாவிகளைக் கடவுள் காப்பாற்றுவாரா?
சாத்தான்குளத்தில் அப்பா – மகன் இரண்டு பேரையும் காவல் நிலைய லாக்கப்பில் அடித்தே கொன்றார்கள். இந்தப் பாவிகளை கடவுள் காப்பாற்றுவாரா?
நீட் தேர்வினால் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த கொடுமையைப் பார்த்த பிறகும் கடவுள் இவர்களை காப்பாற்றுவாரா?
நீட் தேர்வினால் பல மாணவ - மாணவியர்கள் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள். இவ்வளவு பாவம் செய்திருக்கும் பழனிசாமியைக் கடவுள் காப்பாற்றுவாரா?
எனவே இயற்கையையும் கடவுளையும் அழைப்பதற்கான யோக்கியதை இந்த பழனிசாமிக்கு உண்டா?
காலைப் பிடித்துப் பதவியைப் பெற்றுக் கொண்டு அந்தக் காலையே வாரிவிட்டு துரோகம் செய்தவரைக் கடவுள் காப்பாற்றுவாரா?
தன்னுடைய நாற்காலியைக் காக்க தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த பழனிசாமியை கடவுள் காப்பாற்றுவாரா?
நிச்சயமாகச் சொல்கிறேன், இயற்கையும் காப்பாற்றாது. கடவுளும் காப்பாற்ற மாட்டார். மக்களாக இருக்கும் நீங்களும் அவரைக் காப்பாற்ற மாட்டீர்கள். அந்த உண்மையைப் பழனிசாமி அவர்கள் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நன்றாகத் தெரிந்து கொள்ளப்போகிறார். கடவுள் நம் பக்கம் இல்லை. மக்களும் நம் பக்கம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளப்போகிறார். அதற்கு நீங்கள் எல்லாம் தயாராகிவிட்டீர்களா?
நம்முடைய கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அதில் சிலவற்றை தலைப்புச் செய்தியாக உங்களுக்கு சொல்கிறேன்.
தொழில் வளர்ச்சிக்காக, கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க வைக்கவும், அங்கே பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கவும், இந்த நிறுவனங்களுக்கு எளிய தவணையில் திரும்ப செலுத்தும் வகையில் கடன் உதவி செய்வதற்கென்று 15,000 கோடி நிதி ஒதுக்கப்படும், டிட்கோ - சிட்கோ போன்ற முன்னோடி அமைப்புகள் உருவாக்கப்பட்டது போல, வங்கிகள் - நிதி நிறுவனங்களோடு இணைந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவியினை ஏற்பாடு செய்ய சிறப்பு நிறுவனங்கள்.
தொழில் நிறுவனங்களை நலிவிலிருந்து மீட்க அரசு துறைகள், நிதி நிறுவனங்கள், தொழில் துறையினர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். தொழிலாளர் நல வாரியங்கள் முழு வீச்சில் செயல்படும். கொரோனா காலத்தில் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் வெறும் 1,000 ரூபாய் வழங்கினார்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாயை நாம் ஆட்சி பொறுப்பேற்று ஜூன் 3-ஆம் தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட மேலும் பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம்.
மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்த்தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் வழங்கி இருக்கிறோம்.
மேலும் இந்த இராணிப்பேட்டை மாவட்டத்திற்காக, இராணிப்பேட்டையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து முனையம், அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தமிழறிஞர் மு. வரதராசனாருக்கு சிலை, மஞ்சள் விற்பனைச் சந்தை. சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் மலைக்கோயிலுக்கு ரோப் கார் அமைக்கப்படும். சோளிங்கரில் நெல் கொள்முதல் நிலையம். அரக்கோணம் நகரத்தில் பழனிப்பேட்டை முதல் சுவால்பேட்டை வரை மேம்பாலம். இராணிப்பேட்டை வாலாஜா, மேல்விஷாரத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். இராணிப்பேட்டை சிப்காட்டில் டி.சி.சி நிறுவனத்தின் குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆற்காட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி, கால்நடை மருத்துவமனை, புறவழிச் சாலை. இது நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றப்பட இருக்கின்ற சில திட்டங்கள்.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் சாதாரண வெற்றியல்ல; மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடித் தரவேண்டும். இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய தன்மானம், சுய மரியாதை காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதை மறந்துவிடக்கூடாது.
எனவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்து, மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.