“மக்களை ஏமாற்ற திரு. பழனிசாமியுடன் சேர்ந்து நாடகமாடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
பதிவு: 31 Mar 2021, 15:08:37 மணி
“மக்களை ஏமாற்ற திரு. பழனிசாமியுடன் சேர்ந்து நாடகமாடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்”
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (31-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, போடிநாயக்கனூரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
உங்களைத் தேடி நாடி உங்களிடத்தில் உதயசூரியனுக்கு ஆதரவு கேட்டு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் அருமைச் சகோதரர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இப்போது கழகத்தின் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றுபவர். வெள்ளை மனதிற்குச் சொந்தக்காரர். சட்டமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் எல்லோரிடத்திலும் வெளிப்படையாகப் பேசுபவர். இதை ஏன் இவ்வளவு அழுத்தந்திருத்தமாக சொல்கிறேன் என்றால், நம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் அப்படிப்பட்டவர்.
அதேபோல கம்பம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அன்பிற்கினிய கம்பம் ராமகிருஷ்ணன் அவர்கள், அவர் பெயரிலேயே கம்பம் அடங்கி இருக்கிறது. அந்த அளவிற்கு கம்பத்தோடு ஒன்றியவர். ஏற்கனவே கம்பம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொடர்ந்து பணியாற்றி சட்டமன்றத்தில் வாதாடிப் போராடி அந்தத் தொகுதி மக்களுக்குப் பல நன்மைகளை, சாதனைகளைப் படைத்தவர். எனவே அவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து நீங்களெல்லாம் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
அதேபோல ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மகராஜன் அவர்கள், அவர் ஏற்கனவே இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்று வென்று அந்தத் தொகுதியின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து கொண்டிருப்பவர். எனவே முன்பை விட இந்தத் தேர்தலில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
அதேபோல பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சரவணக்குமார் அவர்கள், அவரும் இடைத் தேர்தலில் நின்று வென்று, சட்டமன்றத்தில் அந்தத் தொகுதி குறைகளைச் சுட்டிக்காட்டி வாதாடியவர், போராடியவர்.
அவருக்கு நீங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று நான் மிகுந்த பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
இதே போடிக்கு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தார். அவர் இப்போது தோல்வி பயத்தில் என்னென்ன பேசிக்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் இப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
நாம் என்ன சொன்னோம், அவர் முதலமைச்சர் பதவிக்காக ஊர்ந்து போனார். அவர் முதலமைச்சர் பதவிக்காக தவழ்ந்து சென்றார் என்று சொன்னோம்.
இதனை ஏதோ இட்டுக்கட்டிச் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொன்னோம். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வந்தது. அதை இல்லை என்று அவரால் மறுக்க முடியாது.
இதைச் சொன்னதற்கு, அவருக்குக் கோபம் வந்து விட்டது. அவர், நான் என்ன பாம்பா? பல்லியா? என்று திரும்பக் கேட்டார். பாம்பு, பல்லிக்கு இருக்கும் விஷத்தைவிட துரோகத்திற்குத்தான் விஷம் அதிகம். அப்படிப்பட்ட துரோகத்திற்குச் சொந்தக்காரர் அவர்.
அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். இந்த போடிக்கும் வந்து பேசியிருக்கிறார். அப்போது பன்னீர்செல்வத்தை மறைமுகமாகத் தாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்.
அவர் பன்னீர்செல்வத்தை, “ஓ.பி.எஸ். அவர்கள் இந்த மாவட்டத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை” என்று பேசியிருக்கிறார். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் இருவரும் எப்படி இருந்தார்கள். அதை இந்த நாட்டு மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘விடாக்கண்டன், கொடாக்கண்டன்’. விடாக்கண்டன் ஓ.பி.எஸ்., கொடாக்கண்டன் இ.பி.எஸ்.
பழனிசாமி, அவரை இந்த மாவட்டத்தின் கொடை என்று சொல்லி, நீங்கள் இங்கேயே இருங்கள், வெளியில் வந்து விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இது புரியாமல் ஓ.பி.எஸ். தலையாட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அ.தி.மு.க.விற்குத் துரோகம் செய்தவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். அவ்வாறு பார்த்தால் அ.தி.மு.க.விற்கு முதன்முதலில் துரோகம் செய்தவர் யார்? ஆட்சிக்கு எதிராக 11 ஓட்டுப் போட்டார்களா? இல்லையா? அந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டும போட்ட 11 பேரும் டெபாசிட் வாங்கலாமா?
இப்போது ஓ.பி.எஸ்-ஐ எல்லோரும் பெரிய தியாகி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையாக அவர் தியாகி அல்ல, பெரிய புத்திசாலி. ஏனென்றால் தோற்கப் போகின்ற அ.தி.மு.க.விற்கு பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொன்னார்.
அதேபோல, அரசியலில் சிலருக்குத்தான் வாய்ப்புக் கிடைக்கும். ஓ.பி.எஸ்.க்கு ஒருமுறை அல்ல, மூன்று முறை முதலமைச்சர் வாய்ப்புக் கிடைத்தது. அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தத் தொகுதிக்கு ஏதாவது செய்தாரா? இந்த நாட்டுக்கு ஏதாவது செய்தாரா? ஜெயலலிதாவிற்கு உண்மையாக இருந்தாரா?
ஒரு தியான நாடகத்தை நடத்தினார். பதவிக்காக தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அதை விசாரிக்க விசாரணைக் கமிஷன் வேண்டும் என்று கேட்டாரா? இல்லையா?
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உட்கார்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார். ஆன்மாவோடு பேசினார். “உங்கள் சாவுக்கு யார் காரணம்? அதைக் கண்டு பிடிக்காமல் விடமாட்டேன். அதற்கு விசாரணைக் கமிஷன் வேண்டும்” என்று சொன்னாரா? இல்லையா?
உடனே விசாரணைக் கமிஷன் வைத்தார்கள். அவ்வாறு விசாரணை கமிஷன் வைத்தவுடன் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள். அதற்குப்பிறது அதை மறந்து விட்டார். அந்த விசாரணைக் கமிஷன் அவரைப் பலமுறை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியது. அவர் ஒருமுறையாவது சென்று அந்த விசாரணைக் கமிஷன் முன் ஆஜரானாரா? இல்லை.
ஜெயலலிதா இருந்தவரை நின்று தரையைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்தவர். இப்போது ஜெயலலிதாவை தலைமுழுகி விட்டார். ஜெயலலிதாவிற்குத் துரோகம் செய்த இவரை இந்தத் தேனி மாவட்ட மக்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? அம்மையார் ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவரை இந்தத் தேனி மாவட்டத்திலிருந்து விரட்ட வேண்டுமா? வேண்டாமா?
அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதற்குப்பிறகு அமைச்சர் பொறுப்பு கிடைத்தது. முதலமைச்சராகவும் மூன்று முறை இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது துணை முதலமைச்சர் பதவியில் இருக்கிறார். இத்தனை பதவிகளை வைத்துக்கொண்டு இந்த மாவட்டத்திற்கு, இந்தத் தொகுதிக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? தயவுசெய்து நீங்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நான் சில கேள்விகளை உங்கள் மூலமாக அவரைப் பார்த்து கேட்கிறேன். பி.டி.ஆர். கால்வாய் விரிவுபடுத்துவதாக கடந்த பத்து வருடங்களாக பன்னீர்செல்வம் சொல்லிக்கொண்டிருக்கிறார். அதைச் செய்தாரா?
புலிக்குத்தி, அய்யம்பட்டி, சங்கரபுரம் பஞ்சாயத்துகளைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு 18-வது கால்வாய் விரிவாக்கத் திட்டத்தைச் செய்வேன் என்று சொன்னார். அதைச் செய்தாரா?
போடிநாயக்கனூரில் வசிப்பவர்கள் கோட்டகுடி நதிக்கு செக் அணை அமைக்க தொடர்ந்து கேட்கிறார்கள். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரா?
அதேபோல, ராஜகோபாலன் சமுத்திர ஏரியில் நீர் தேக்கத்தை அமைப்பேன் என்று சொன்னார். அதை அமைத்தாரா?
குமுளி அருகே வடிகால் சுத்திகரிப்பு நிலையம் அமைப்போம் என்று சொன்னார். அதை அமைத்தாரா?
முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பேன் என்று சொன்னார். அதைக் கண்டாரா?
நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு ஏற்படும் என்று ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அச்சப்படுகிறார்கள். அதைப் போக்குவேன் என்று சொன்னார். அவ்வாறு போக்கினாரா?
போடிநாயக்கனூரில் சிறிய அளவிலாவது ஒரு தொழிற்சாலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாரா?
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறாரா?
போடியில் நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்திக் கொடுத்தாரா?
மா விவசாயிகளுக்கு மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்சாலையை உருவாக்குவேன் என்று சொன்னார். உருவாக்கினரா?
குமுளியில் ஒரு பஸ் டெப்போ ஏற்படுத்திக் கொடுத்தாரா?
ஏராளமான ஏரிகள் இருக்கிறது. அதற்கு தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தாரா?
முதியோர் ஓய்வு ஊதியம் இங்கிருக்கும் எல்லோருக்கும் கிடைக்கிறதா?
அரண்மனை புதூர், கொடுவிலர்பட்டி, நாகலபுரம், ஸ்ரீரங்கபுரம், வெங்கடாச்சலபுரம், குப்பினநாயக்கன்பட்டி, அம்பசமுத்திரம், கோவிந்தநகரம், ஜங்கல்பட்டி, கட்டுனாயகன்பண்டு, பூமலக்கட்டு ஆகிய கிராமங்களில் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட்டதா?
குரங்கணி, முதுவாக்குடி, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் மிளகு, காப்பி, தேயிலை உள்ளிட்ட பயிர்களை கொண்டு செல்ல ஏதுவாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் குரங்கணி டாப் ஸ்டேஷன் வரை சாலை அமைப்பேன் என்று சொன்னார். அவ்வாறு அமைத்தாரா?
போடி - சங்கராபுரம் அருகே சிட்கோ தொழிற்சாலைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூஜை போடப்பட்டது. இதுவரை அந்தப் பணி தொடங்கி இருக்கிறதா?
போடிநாயக்கனூரில் உள்ள புதூர், வினோபாஜி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை.
போடி நகர் பகுதியில் முறையான சாலை இல்லை.
இந்தத் தொகுதியில் இயங்கிவந்த இரண்டு தொழிற்சாலைகள் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு மூடப்பட்டு 10,000 குடும்பங்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். அதற்கான முயற்சி எடுத்தாரா?
இவ்வாறு எந்தப் பிரச்சினையையும் துணை முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தால் தீர்க்க முடியவில்லை. ஆனால் அவர் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார். இப்போது வீடியோவிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். எனவே மக்கள் உங்களுக்கு முடிவு கட்டும் நாள்தான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என்பதை மறந்துவிடக் கூடாது.
அ.தி.மு.க. கடந்த ஐந்து வருடங்களாக மக்களைப் பற்றி எதுவும் கவலைப் படவில்லை. காரணம் அவர்களுக்குள் இருக்கும் கோஷ்டிச் சண்டை.
இப்போது தேர்தல் வருகிறது என்று சொன்னவுடன் வாக்கு வாங்குவதற்காக, மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு பெரிய நாடகத்தை நடத்தினார்கள்.
அது சட்டமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர். அதுதான் அவர்களுக்குக் கடைசிச் சட்டமன்றக் கூட்டத்தொடர். இனிமேல் சட்டமன்றத்திற்கு அவர்கள் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது. அந்தக் கூட்டத்தொடரில் ஓ.பி.எஸ்.ஐ வைத்துக்கொண்டு உள்ஒதுக்கீடு என்ற ஒரு சட்டத்தை பழனிசாமி கொண்டு வந்து நிறைவேற்றினார். அப்போது அமைதியாக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஓ.பி.எஸ்.
ஆனால் இப்போது அது நிரந்தரச் சட்டம் அல்ல, தற்காலிகமான சட்டம்தான் என்று சொல்கிறார். அவர் இதை நேற்றைய தினம் ‘தி இந்து’ பத்திரிகையில் கொடுத்திருக்கும் சிறப்புப் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
அதில் அவர் என்ன தெளிவாகச் சொல்கிறார் என்றால், சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி நிறைவேற்றிய உள்ஒதுக்கீடு பிரச்சினை என்பது நிரந்தரமல்ல, தற்காலிகம்தான் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தச் சட்டம் நிறைவேறிய போது அருகிலிருந்து கைதட்டி வரவேற்றிருக்கிறார். அவர் மட்டுமல்ல, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்களும் அது தற்காலிகம் என்று பேசியிருக்கிறார்.
உடனே இன்றைக்கு மருத்துவர் அய்யா - பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்கள் ஒரு செய்தி சொல்லி இருக்கிறார். “நான் ஓ.பி.எஸ். அளித்த அந்தப் பேட்டியைப் படித்தேன். அதிர்ச்சிக்கு ஆளானேன். உடனடியாக நான் முதலமைச்சரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் அவ்வாறு அல்ல, வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தரமானதுதான்” என்று சொல்லியிருக்கிறார்." இது என்ன கூத்து!
எனவே மக்களை ஏமாற்றுவதற்காக, எப்படியாவது வாக்கு வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு நாடகத்தை இன்றைக்கு அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? தங்களது தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். நிச்சயமாக நீங்கள் தான் வருகின்ற 6 ஆம் தேதி ஏமாறப்போகிறீர்கள். அது உறுதி.
ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். மே மாதம் 2-ஆம் தேதி வாக்கு எண்ணும் போது நாம்தான் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்கப் போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவ்வாறு அமைகின்ற ஆட்சி சமூகநீதிக்காக வழங்கும் ஆட்சியாக நிச்சயம் இருக்கும். அனைத்துச் சமூகத்தினரும் திருப்தி அடையும் வகையில் சட்டத்தை இயற்றுவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல, தேர்தல் வருகின்ற போதெல்லாம் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து செல்வார். அதுபோல இந்தத் தேர்தலுக்காகவும் இப்போது வரத் தொடங்கி இருக்கிறார். நேற்றைக்குக் கொங்கு மண்டலம் - தாராபுரத்திற்கு வந்திருக்கிறார். நான் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை.
அவ்வாறு வந்தவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? நான் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே ஐந்து வருடம் ஆட்சி நடத்தி உள்ளேன். இப்போது மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன்.
எனவே எங்களது ஆட்சியில் என்னென்ன திட்டங்களை இந்தியாவிற்குச் செய்திருக்கிறோம்? தமிழ்நாட்டிற்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்? தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சிக்கு இவ்வாறெல்லாம் துணை நின்று திட்டங்களை நிறைவேற்றப் பயன்பட்டிருக்கிறோம் என்று சொன்னால், அது உண்மையாக இருந்தால், அதை வரவேற்க நான் இருக்கிறேன்.
ஆனால் அவர் வெறும் பொய்யாக சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். எப்போதெல்லாம் மோடி வருகிறாரோ… அப்போதெல்லாம் அந்தக் கட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்ன பாடம் கற்பிக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
ஏன் என்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அவர்களுக்கு பூஜ்யம்தான். இந்தத் தேர்தலிலும் அவருக்கு பூஜ்யம்தான். எனவே அவர் அடிக்கடி வந்து போகட்டும். அது நமக்கு நல்லதுதான். வரும் இரண்டாம் தேதி வரப் போவதாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். வரட்டும்.
அவரைப் பார்த்து ஓ.பி.எஸ். “உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான்” என்று பாராட்டிப் பேசுகிறார். இவ்வளவு நாட்களாக பத்திரிகைகளில் ஓ.பி.எஸ். தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்று விளம்பரம் அவரே கொடுத்துக்கொண்டிருந்தார். இப்போது ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான் என்று சொல்கிறார். இது என்ன நடிப்பு. சினிமாவில் ஒரு டயலாக் வரும், “உலக மகா நடிப்புடா சாமி” அதுபோலத்தான் இருக்கிறது.
ஜல்லிக்கட்டு வந்ததற்குக் காரணம், நம்முடைய இளைஞர்கள்தான், அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் ஜல்லிக்கட்டு வந்தது. எனவே அப்படிப்பட்ட இளைஞர்களை ஓ.பி.எஸ். அவர்களே தயவு செய்து கொச்சைப் படுத்தாதீர்கள்.
அந்தப் போராட்டத்தை எப்படியாவது கலைக்கவேண்டும், கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி, காவல்துறையினரை வைத்துத் தடியடி நடத்தி அங்கிருந்த ஆட்டோக்களை எரித்து கொடுமைப் படுத்தினீர்களே… அது அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் வந்ததே… அதை மக்கள் மறந்து விட்டார்களா?
நீங்கள் மோடி காலில் விழுந்து கொள்ளுங்கள் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவரை ஆதரியுங்கள் அதைப்பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. ஆனால் என்ன பேச வேண்டும் என்ற விவஸ்தை வேண்டாமா? எதை வேண்டுமானாலும் பேசி விடலாமா?
இன்றைக்கு கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே "புதிய தலைமுறை"யில் வந்தது. தந்தியில் வந்தது. மாலை முரசில் வந்தது. தந்தியில் இரண்டாவது முறையாக நேற்று வந்தது. இன்றைக்கு ஜூனியர் விகடனில் வந்திருக்கிறது. பெரும்பாலும் எல்லாவற்றிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்கள். யாராவது நம்மைக் குறைத்து மதிப்பிட்டுச் சொல்கிறார்களா?
அது உண்மையோ… பொய்யோ… அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நாம் ஆற்றுகிற பணியிலிருந்து நாம் என்றைக்கும் பின் வாங்கப் போவதில்லை. அதில் ஏமாந்து விடக்கூடாது.
ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நான் இந்தத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியபோது நம்முடைய கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று சொன்னேன். இப்போது 15 நாட்களாக சுற்றி சுற்றி பயணத்தை நடத்தி மக்களைப் பார்க்கிறேன். உங்கள் எழுச்சியைப் பார்க்கிறபோது 200 அல்ல, 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
நான் எதற்கு அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது என்று அதீத ஆசையால் சொல்வதாக நினைக்க வேண்டாம். ஒரு அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக அல்லாமல் பாஜக எம்.எல்.ஏ.வாக தான் இருப்பார். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக இதே தொகுதியில் இருந்து ஒரு எம்.பி. தேர்தெடுக்கப்பட்டார். அவர் ஓபிஎஸ் மகன்தான். அவர் இப்போது அ.தி.மு.க.வின் எம்.பி.யாக அல்லாமல், பா.ஜ.க. எம்.பி.யாக இருக்கிறார். அவர் லெட்டர் பேடில் அ.தி.மு.க. தலைவர் படம் அல்லாமல் மோடியின் படம் தான் இருக்கிறது. அப்படி ஒரு அடிமையாக இன்றைக்கு அவர்கள் இருக்கிறார்கள். அதனால், ஒரு எம்.எல்.ஏ. கூட அ.தி.மு.க. சார்பில் வந்துவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும் போது என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறோம் என்பதைத் தேர்தல் அறிக்கையில் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.
மேலும் இந்த 4 தொகுதிகளுக்காக, போடியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போடியில் புறவழிச் சாலை அமைக்கப்படும். தேனி, போடிநாயக்கனூர், பெரியகுளம், உத்தமபாளையம், சின்னமனூரில் குளிர்பதனக் கிடங்குகள். பெரியகுளம் - கும்பக்கரை அருவி அருகே பாம்பாறுக்கு குறுக்கே வவ்வால்துறையில் அணை கட்டப்படும். ஆண்டிபட்டி - வைகை உயர் தொழில்நுட்ப விசைத்தறிப் பூங்கா மீண்டும் செயல்பட நடவடிக்கை. போடிநாயக்கனூர், தேனி, கம்பம் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். கம்பம் அல்லது கூடலூரில் நெல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். தேனியில் திராட்சைப் பழங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை, முருங்கைக்காய்ப் பூங்கா, நவீன அரிசி ஆலை, தென்னை வாரியம், தேங்காய்க் கிடங்கு, பழங்கள் மற்றும் தென்னை ஆராய்ச்சி மையங்கள். தேனி அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, இரைப்பை அறுவை சிகிச்சைப் பிரிவு. தமிழர்கள் கண்ணகி கோட்டம் சென்று வழிபடவும், கண்ணகிக் கோட்டத்தை இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது இடமாக அங்கீகரிக்கவும் கேரள அரசுடன் தி.மு.க. அரசு பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு. கம்பம், உத்தமபாளையம், சின்னமனூரில் வாழை ஏல மையங்கள். கம்பத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி, பாதாளச் சாக்கடைத் திட்டம். குமுளி பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். குரங்கணியிலிருந்து மூணாறுக்கு இணைப்புச் சாலை போடப்படும். கூ.சுப்புலாபுரம், ஆண்டிப்பட்டியில் உயர் தொழிட்நுட்ப ஜவுளிப் பூங்கா. ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் விவசாயம் மற்றும் மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதற்காக முல்லைப் பெரியாறு கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும். இவை அனைத்தும் நாம் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடத்திற்குள் நிறைவேற்றப்படவிருக்கின்ற சில திட்டங்கள். ஆனால் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு 50 வருடம் பின்னோக்கி சென்று விட்டது. எனவே இந்தத் தமிழ்நாட்டை ஓரளவிற்குக் காப்பாற்ற பத்தாண்டு கால திட்டத்தின் தொலைநோக்கு பார்வையோடு கடந்த 7ஆம் தேதி திருச்சியில் ஒரு மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்ற தலைப்பில் சில திட்டங்களை அறிவித்தேன். இவை அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் எல்லாம் வெற்றிபெற வைக்க வேண்டும். இவர்களுக்கு வாக்கு கேட்கின்ற அதே நேரத்தில நான் எனக்கும் வாக்கு கேட்கிறேன். நான் முதலமைச்சர் வேட்பாளராக உங்களிடத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர். எனவே மோடி எத்தனை முறை வந்தாலும் உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இந்தத் தமிழ்நாட்டில் நடக்காது. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
நேற்றைக்கு தந்தி தொலைக்காட்சியில் கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தி.மு.க. தான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறப்போகிறது என்று புள்ளி விவரத்தோடு சொல்லியிருக்கிறார்கள். உடனே அந்த தந்தி தொலைக்காட்சியை அவர்கள் மிரட்டி இருக்கிறார்கள். ஏற்கனவே மாலை முரசு தொலைக்காட்சியை மிரட்டி இருக்கிறார்கள். அவர்களை மிரட்டியது மட்டுமல்லாமல் அரசு கேபிள் டிவிவில், மாலைமுரசின் ஒளிபரப்பை நிறுத்தி இருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது.
இன்னும் நான்கு நாட்கள்தான் உங்கள் ஆட்டம். எனவே உங்கள் ஆட்டம் எல்லாம் முடியப் போகிறது.
மதவெறியைத் திணித்து, இந்தியைத் திணித்து, சமஸ்கிருதத்தை நுழைத்து. நீட் தேர்வை நுழைத்து, இந்த நாட்டை குட்டிச் சுவராக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் பலிக்காது. இது தமிழ்நாடு.
இது திராவிட மண். தந்தை பெரியார் பிறந்த மண் - அறிஞர் அண்ணா பிறந்த மண் - கலைஞர் வாழ்ந்த மண், இந்த மண்.
இந்ததத் தேர்தல் என்பது இவர்கள் வெற்றி பெற வேண்டும், நான் முதலமைச்சராக வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடக்கின்ற தேர்தல் அல்ல,
நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். நாம் இழந்திருக்கும் உரிமையை மீட்க வேண்டும். எனவே நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.