“அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத பழனிசாமி, தி.மு.க.வை இழிவு படுத்தி, கொச்சைப் படுத்தி விமர்சிப்பதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்"
பதிவு: 02 Apr 2021, 10:20:28 மணி
“அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத பழனிசாமி, தி.மு.க.வை இழிவு படுத்தி, கொச்சைப் படுத்தி விமர்சிப்பதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்"
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (01-04-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, மயிலாப்பூரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கொளத்தூர் தொகுதி மக்களிடையே கழகத் தலைவர் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:
எனது தொகுதிக்கு வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன். அப்படிச் சொன்னால் உங்களுக்குக் கோபம் வந்துவிடும்! நமது தொகுதிக்கு வந்திருக்கிறேன். புயல் அடித்தாலும், மழை பெய்தாலும், வேறு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே வருபவன் நான். வாரம் இருமுறை வந்திருக்கிறேன். இப்போது தமிழகம் முழுவதும் சுற்றி வர வேண்டி இருப்பதால் அடிக்கடி வர இயலவில்லை. அதை நீங்களும் புரிந்து கொண்டு, தமிழகம் முழுவதும் சுற்றி வாருங்கள், கொளத்தூரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பெருந்தன்மையாக என்னை அனுமதித்திருக்கிறீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி அ.தி.மு.க. – பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டினீர்களோ, அதேபோல இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். அதற்கு உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரிய அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டு, உங்களது சிறப்பான வரவேற்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் பேசினார்.
மயிலாப்பூரில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
உங்களையெல்லாம் சந்தித்து, உதயசூரியனுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன். நான் சென்னையில் இருக்கும் உங்களை அடிக்கடி சந்திக்கிறேன். நீங்களும் அடிக்கடி என்னை சந்திக்கக் கூடியவர்கள். அதனால் அதிக நேரம் உங்களிடத்தில் பேசி விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர், அருமை சகோதரர் த.வேலு அவர்கள், அவர் மாவட்டக் கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவர் ஏற்கனவே மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில், அந்த வட்டாரத்தில் மக்களுக்கு எப்படிப் பணியாற்றிட வேண்டும் என்பதை அறிந்து புரிந்து ஒரு சேவகம் செய்யும் ஒரு பண்பாளராக தன்னுடைய கடமையை நிறைவேற்றி கொண்டிருப்பவர். எனவே அவரை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
நானும் மயிலாப்பூர் வாக்காளர்தான். ஏற்கனவே ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்காளராக இருந்தேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கும் மயிலாப்பூர் தொகுதிக்கும் பக்கத்தில் இருப்பதுதான் தியாகராய நகர்.
அதேபோல தியாகராயநகர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ஜெ.கருணாநிதி அவர்கள், மறைந்த நம்முடைய மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் அவருடைய அருமைத் தம்பி. அன்பழகன் அவர்களை எப்படி இழந்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். கொரோனா தொற்று நோயினால் அவர் தாக்கப்பட்டு அதிலிருந்து காப்பாற்ற முடியாமல், அவர் நம்மை விட்டு மறைந்து விட்டார். எனவே அவருடைய குடும்பத்திலிருந்து இன்றைக்கு ஜெ.கருணாநிதி அவர்கள் தியாகராயநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
அதேபோல ஆயிரம் விளக்கு தொகுதி, முதன்முதலில் என்னை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியது ஆயிரம் விளக்குதான். ஆயிரம் விளக்கு இன்றைக்கு சென்னையில் கழகத்திற்கு இதயம் போன்ற பகுதியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் கலைஞருடைய வீடு உள்ள கோபாலபுரம் ஆயிரம் விளக்கு தொகுதிதான். அறிவாலயம் ஆயிரம் விளக்கு தான்.
இவ்வாறு வரலாற்றில் பதிவாகி இருக்கும் அந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் எழிலன் அவர்கள், திராவிடச் சிந்தனை உடையவர். அதுமட்டுமின்றி, ஒரு மருத்துவராக தலைவர் கலைஞர் அவர்களுக்கு அடிக்கடி நேரடியாக வந்து மருத்துவம் அளித்தவர். எவ்வாறு ஸ்டாலின் கலைஞருக்கு ஒரு பிள்ளையாக விளங்கிக் கொண்டிருக்கிறானோ, அதேபோல எழிலன் அவர்களும் ஒரு செல்லப்பிள்ளையாக கலைஞருக்கு விளங்கியவர். எனவே அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
சென்னையின் மிக முக்கியமான ஆன்மீகத் தலம் மயிலாப்பூர். என்னை முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது ஆயிரம் விளக்கு. திராவிட இயக்கம் உருவாவதற்கு காரணமாக இருந்த நீதிக்கட்சி தலைவர் பெயரில் அமைந்ததுதான் தியாகராய நகர். இந்த மூன்று பெருமைக்குரிய தொகுதிகளின் வேட்பாளர்கள்தான் இங்கே கரம் கூப்பி வாக்குகளை கேட்டு, உதயசூரியனுக்கு ஆதரவு தரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்து நிற்கிறார்கள். அதை வழிமொழிகிற வகையில் நான் உங்களை எல்லாம் சந்தித்து வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆன்மீக திருப்பணிகளை எப்படி எல்லாம் செய்து இருக்கிறது என்பதை நான் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தி.மு.க.வின் ஆன்மீகத் தொண்டிற்கு உதாரணம் - இந்த மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் கருணை இல்ல திறப்பு விழா நடந்தது. அந்த திறப்பு விழாவிற்கு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டபோது அவர், “முதலமைச்சர் கலைஞர் செய்யும் இதுபோன்ற நல்ல காரியங்களை பார்த்து, ‘நல்ல காரியம் செய்தாரப்பா முதல்வர்’ என்று எம்பெருமானே மகிழ்வார்” என்று கிருபானந்த வாரியாரே பாராட்டி இருக்கிறார்.
இப்போது முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் தோல்வி பயத்தின் காரணமாக, உளற ஆரம்பித்திருக்கிறார், பிதற்ற ஆரம்பித்திருக்கிறார், வாய்க்கு வந்தபடி எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்.
அவர், ‘ஸ்டாலின் சென்னையின் மேயராக இருந்தபோது என்ன செய்தார்?’ என்று கேட்டிருக்கிறார்.
நான் இங்கிருக்கும் உங்களைப் பார்த்து கேட்கிறேன். நான் ஒருமுறை அல்ல, இரண்டு முறை சென்னை மேயராக இருந்தேன். நான் மேயராக இருந்த போது என்னென்ன பணிகளைச் செய்து இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? பழனிசாமிக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்தும் தெரியாமல் நடித்து கொண்டிருக்கலாம்.
கடந்த பத்து வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று நாம் கேட்கிறோம். கடந்த பத்து வருடங்களாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் சாதனைகளை சொல்லுங்கள்? நீங்கள் செய்திருக்கும் திட்டங்களை சொல்லுங்கள்? என்று பழனிசாமியைப் பார்த்து நாம் கேட்கிறோம்.
ஆனால், அதைப் பற்றிச் சொல்லாமல் விமர்சனங்களை, நம்மை இழிவு படுத்தி கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தி பேசும் பணியைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.
நான் மேயராக இருந்த போது இந்த சென்னையை சிங்காரச் சென்னையாக வைத்து இருந்தேன். இப்போது நீங்கள் கடந்த பத்து வருடங்களாக சீரழிந்த சென்னையாக மாற்றி கொண்டிருக்கிறீர்கள். அதுதான் நீங்கள் செய்த சாதனை.
நான் முதல் முறை மேயரானபோது சென்னையில் விடாமல் மழை பெய்தது. 15 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர். அப்போது அவர் முதலமைச்சர் என்கின்ற முறையில் வெள்ளப்பகுதியை நானே பார்வையிட வருகிறேன் என்று வந்தார். மேயர் என்ற முறையில் நானும் உடன் சென்றேன். சில அமைச்சர்களும் உடன் வந்தார்கள்.
அப்போது தலைவர் கலைஞர் வேடிக்கையாக சொன்னார். ஸ்டாலின் மேயரான அன்றிலிருந்து மழை அதிகமாக பெய்து கொண்டிருக்கிறது என்று நகைச்சுவையாக பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
எனவே அன்றைக்கு சென்னையே தண்ணீரில் மிதந்தது. அப்போது, எந்த நேரம் என்று பார்க்காமல், உறக்கத்தை மறந்து, உணவை மறந்து, ரெயின்கோட் போட்டுக் கொண்டு, நம்முடைய மாநகராட்சி அதிகாரிகளை, கவுன்சிலர்களை அழைத்துக் கொண்டு தெருத்தெருவாக, வீதிவீதியாகச் சென்று நிவாரணப் பணிகளில் ஈடு பட்டவன்தான் இந்த ஸ்டாலின் என்பதை நான் பெருமையோடு பழனிசாமிக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
அதிகாரிகள் மூலமாக பல்வேறு பணிகளை நான் முடுக்கிவிட்டேன். தாழ்வான பகுதிகள் எவை என்று கண்டுபிடித்து அதற்கு பிறகு மழைநீர் வடிகால்களைத் துரிதமாக அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அந்த பணிகளைச் செய்தேன்.
நான் மேயராக இருந்தபோது சுமார் 135 கிலோ மீட்டருக்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
அதேபோல போக்குவரத்து நெரிசலை ஓரளவு குறைக்க பத்து மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்குப் பிறகு ஒன்பது இடங்களில் மேம்பாலங்கள் கட்டிய மேயர்தான் இங்கே நிற்கின்ற இந்த ஸ்டாலின் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
அதற்குப் பிறகு சில தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளால் பெரம்பூர் பாலத்தைக் கட்ட முடியவில்லை. அதற்குப் பிறகு ஆட்சி மாறி விட்டது. ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி வந்தது. அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நம் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை சொன்னார்.
அது என்ன என்றால் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்திருக்கிறது என்று ஒரு புகாரை சொன்னார். அவ்வாறு சொன்னவுடன் அன்றைக்கு இரவே கைது செய்ய வந்துவிட்டார்கள். அப்போது அதிகாரிகள் தூங்கிக்கொண்டிருந்த தலைவரை, தோள்பட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றனர். அந்த வலி தாங்காமல் அவர் போட்ட சத்தத்தை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அந்தக் கொடுமையைச் செய்தார்கள். அதற்கு பிறகு நானும் கைது செய்யப்பட்டேன். அதேபோல பொன்முடி கைது செய்யப்பட்டார். அன்றைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த கோ.சி.மணியும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு பல நடவடிக்கைகளை எடுத்தார்கள்.
அதற்கு பிறகு ஐந்து வருடம் அ.தி.மு.க. ஆட்சி நடத்திய போது நம் மீது சொன்ன ஊழல் குற்றச்சாட்டை விசாரித்து ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஐந்து வருடத்தில் சார்ஜ் சீட் கூட பதிவு செய்யவில்லை. இதுதான் உண்மை. காரணம் எந்த எந்த முறைகேடும், நடைபெறவில்லை.
அதற்கு பிறகு இந்த பாலத்தில் எப்படியாவது குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று அம்மையார் ஜெயலலிதா உத்தரவு போட்டுவிட்டார். சில காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் நாம் கட்டிய பாலத்தை உளியையும், சுத்தியலையும் வைத்து பாலத்தை உடைத்துப் பார்த்து, உள்ளே கம்பிகள் எல்லாம் சரியாக இருக்கின்றதா எனப் பரிசோதித்தார்கள்.
நான் அப்போது வேடிக்கையாக சொன்னேன். நமக்கு அருகில் இருக்கும் பாலம் தான் மிகப்பெரிய பாலம். அந்த பாலத்தின் வழியாகத்தான் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு செல்வார்கள். கோட்டையில் இருந்து திரும்பி அதன் வழியாகத்தான் செல்வார்கள்.
அந்த பாலம் பழுதாக இருந்தால், அதிலிருக்கும் கம்பிகள் சரியாக இல்லையென்றால் முதலமைச்சரை அந்த பாலம் வழியாக செல்ல விடுவார்களா? இதை நான் பல கூட்டங்களில் பேசினேன். ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதில் என்ன வியப்பு என்றால் இந்தியாவிலேயே எத்தனையோ மாநகராட்சிகள் இருக்கின்றன. எந்த மாநகராட்சி சார்பிலும் மேம்பாலங்கள் கட்டிய வரலாறு இல்லை. ஆனால் ஸ்டாலின் மேயராக இருந்தபோதுதான் சென்னை மாநகராட்சி சார்பில் மேம்பாலம் கட்டிய வரலாற்றை உருவாக்கினேன்.
இதில் என்ன அதிசயம் என்றால் எப்போதும் அரசு சார்பில் அல்லது மாநகராட்சி சார்பில் ஒரு பணியை செய்வதற்கு நிதி ஒதுக்குவார்கள். ஆனால் அந்த பணி முடிகின்ற போது ஒதுக்கீடு செய்த நிதியை விட அதிகம் செலவாகிவிடும். அதுதான் வழக்கம். ஆனால் மாநகராட்சி சார்பில் நான் மேயராக இருந்தபோது என்ன ஒதுக்கீடு செய்யப்பட்டதோ, அதை விட 30 கோடி குறைவாக, ஒன்பது மேம்பாலங்களை கட்டி முடிக்கப்பட்ட வரலாற்றைப் படைத்தவன்தான் இந்த ஸ்டாலின்.
அதற்குப் பிறகு பெரம்பூர் மேம்பாலத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். மீண்டும் கலைஞர் ஐந்தாவது முறையாக முதலமைச்சராக வந்து அந்த பத்தாவது பாலத்தையும் அவர்தான் திறந்து வைப்பார் என்று சொன்னேன். அதே போல தலைவர் கலைஞர் மீண்டும் ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்து, அதைக் கட்டி முடித்துத் திறந்துவைத்தார்.
அதேபோல மாநகராட்சி பள்ளிகள் என்றால் கேவலமாக பேசப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால் அந்த நிலையை நான் மாற்றவேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கு பிறகு தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தியவன் தான் இந்த ஸ்டாலின்.
இப்போது தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க பரிந்துரைக் கடிதம் வாங்குகிறார்கள். அதேபோல கார்ப்பரேஷன் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பரிந்துரை வாங்கும் காலத்தை நான் உருவாக்கித் தந்தேன்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் எல்.கே.ஜி. – யு.கே.ஜி.யை மழலையர் பள்ளிகள் என்று சொல்கிறோம். அங்கு வசதி படைத்தவர்களின் பிள்ளைகளைத்தான் சேர்க்க முடியும் என்ற நிலையை மாற்றினேன். நடுத்தர, ஏழை - எளிய குடும்பத்தில், குடிசைகளில் பிறக்கும் குழந்தைகளையும் எல்.கே.ஜி. – யு.கே.ஜி. மழலையர் பள்ளிகளில் சேர்க்கும் வகையில், இந்தியாவிலேயே நம்முடைய மாநகராட்சியில்தான் முதல் முறையாக மழலையர் பள்ளிகளை உருவாக்கினோம். அந்தச் சாதனையையும் நான்தான் செய்தேன்.
அதேபோல முதன்முறையாக கணினி வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தோம். இப்போது 24 மணி நேரத்தில் பிறப்பு - இறப்பு சான்றிதழ் வாங்குகிறோம். இதை உருவாக்கியதும் இந்த ஸ்டாலின் மேயராக இருந்தபோது தான்.
திடக்கழிவு மேலாண்மை உடனுக்குடன் குப்பை அகற்றுவது, பேருந்து நிலையங்கள், சத்துணவு கூடங்கள், பூங்காக்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் மாநகராட்சியை நோக்கிப் போய்க் கொண்டிருந்த மக்களை, மக்களைத் தேடி மாநகராட்சி என்ற நிலையை நான் மேயராக இருந்தபோது ஏற்படுத்தி கொடுத்தேன்.
இந்த மாநகராட்சியை பொறுத்தவரையில் அ.தி.மு.க. ஆட்சி என்ன செய்தது?
வேறு ஒன்றும் வேண்டாம். இதே மயிலாப்பூர் தொகுதியில் இருக்கும் தொல்காப்பிய பூங்கா. இன்றைக்கு பூட்டி கிடக்கிறது. இதை பல கோடி ரூபாய் செலவு செய்து கலைஞர் அவர்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று வரைபடத்தை அவரே தயார் செய்து கொடுத்து, அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் நான் வந்து ஆய்வு நடத்தி, அந்த தொல்காப்பியப் பூங்காவை தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அதை அப்படியே பூட்டி வைத்திருக்கிறார்கள். அதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
இப்போதெல்லாம், நான் என்ன சொல்லுவேன் எதை அறிக்கையாக விடுகிறேன் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பவர் தான் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி. ஸ்டாலின் என்ன சொல்வார் என்று அதைப் பார்த்து அப்படியே காப்பி அடிப்பதற்காக ஜெராக்ஸ் மிஷினைக் கையோடு வைத்துக் கொண்டு காத்திருக்கிறார். அதற்கு சில உதாரணங்களை மட்டும் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5,000 வழங்க வேண்டும் என்று சொன்னேன். உடனே அவர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று அறிவித்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று என்று முதலில் சொன்னார்கள். அதற்கு பிறகு ரத்து செய்தார்கள். அதேபோல நவம்பர் மாதம் வரை ரேசன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதேபோல நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்று அதற்குப் பிறகு அறிவித்தார். செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கைவிட்டேன். முதலில் முடியாது என்றார்கள். அதற்கு பிறகு செமஸ்டர் தேர்வை ரத்து செய்து அறிவித்தார்கள். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். முதலில் மறுத்தார்கள். அதற்கு பிறகு இ-பாஸ் முறையை ரத்து செய்தார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று சொன்னேன். பிறகு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். தமிழக அரசு வெளியிட்ட பள்ளித் திறப்பு குறித்த அறிவிப்புக்கு நான் கண்டனம் தெரிவித்தேன். நாங்கள் முடிவு செய்து விட்டோம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு பெற்றோர்களிடத்தில் கருத்து கேட்கப்படும் என்று அறிவித்து தள்ளி வைத்தார்கள். அதற்கு பிறகு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி கட்டணத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொள்ளும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். நான் அறிவித்தது காலை10:30 மணிக்கு, அவர் உடனே ஒரு மணிக்கு அந்த 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் பயிலும் அனைத்து மாணவர்களின் கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று அறிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என்று நான் அறிவித்தேன். கடந்த பத்து வருடங்களாக அதைப் பற்றி சிந்திக்காத அரசு, நான் அறிவித்தவுடன் இப்போது அறிவித்திருக்கிறது. அதேபோல தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தேன். அதற்குப் பிறகு அவர்களும் அதை அறிவித்தார்கள். நான் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தவுடன், அடுத்தநாள் 1,500 என்று அறிவித்திருக்கிறார்கள்.
இப்போது நான் அறிவிக்க, அறிவிக்க ஒவ்வொன்றையும் அவர் அறிவித்துக் கொண்டிருக்கிறார். நாளைக்கு எல்லாருக்கும் ஹெலிகாப்டர் கொடுக்க போகிறோம், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஏரோபிளேன் கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார். தாங்கள் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். எதிர்க்கட்சியாகக்கூட வந்து உட்கார முடியாது என்று அவர்களுக்கு தெரியும். அதனால்தான் இஷ்டத்திற்கு வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.
மேலும் இந்த 3 தொகுதிகளுக்காக, தியாகராய நகரில் அரசு மருத்துவமனை தொடங்கப்படும். சென்னைப் பெருநகரில் பாதாள சாக்கடை வசதி இல்லாத அனைத்துப் பகுதிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம். சென்னைப் பெருநகரில் ரயில்வே பாதைகள் குறுக்கிடும் இடங்களிலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், தேவையான இடங்கள் அனைத்திலும் மேம்பாலங்கள் கட்டப்படும். மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் தொகுதிகளில் தேவையான இடங்களில் சமுதாயக் கூடங்கள்; விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள், நூலகங்கள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ளவை தரம் உயர்த்தப்படும். சென்னைப் பெருநகரில் அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். சென்னைப் பெருநகரில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு, கழிவுநீர் கலக்காமல் தூய்மைப்படுத்தப்படும். தியாகராய நகர் கிரியப்பா சாலையில் தாய்சேய் நல மருத்துவமனை அமைக்கப்படும். சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சாலையோரம் உள்ள கடைகளுக்கு மாற்றாக அரசு வணிக வளாகங்கள் கட்டித் தரப்படும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொகுதிகளில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா வழங்க ஆவன செய்யப்படும். இது நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றுப்பட இருக்கின்ற சில திட்டங்கள். அத்துடன் அ.தி.மு.க ஆட்சியால் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்ட தமிழ்நாட்டை முன்னேற்ற, ‘ஸ்டாலினின் 7 உறுதி மொழிகள்’ என்ற பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவித்துள்ளேன். இவை எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாக வேண்டும்.
ஏதோ ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற தேர்தலாக மட்டும் இதனை நினைத்து விடாதீர்கள். அதையெல்லாம் தாண்டி நம்முடைய திராவிடம் காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். இந்தியைத் திணித்து, தமிழை ஒழித்து, நம்முடைய பிள்ளைகள் மருத்துவராக வரக்கூடாது என்பதற்காக நீட் தேர்வைத திணித்து, மதவெறியைத் தூண்டலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு சொல்கிறேன், இது தமிழ் மண். தந்தை பெரியார் பிறந்த மண் - அறிஞர் அண்ணா பிறந்த மண் - தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. எனவே இது தான் இன்றைக்கு இருக்கும் நிலைமை.
தமிழர்கள் இன்றைக்கு தங்களுடைய சுயமரியாதையை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாநில உரிமைகள் பறி போய் கொண்டு இருக்கிறது.
அதைக் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்த தேர்தலில் நீங்கள் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். அதற்கு இந்த மூன்று வேட்பாளர்களை ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித்தர வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டு, உங்கள் அன்பான உற்சாகமான இனியதொரு வரவேற்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.