“அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி, வளர்ச்சிக் கூட்டணி அல்ல; ஊழல் - லஞ்சக் கூட்டணி!” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
பதிவு: 03 Apr 2021, 10:21:03 மணி
“அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி, வளர்ச்சிக் கூட்டணி அல்ல; ஊழல் - லஞ்சக் கூட்டணி!”
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (02-04-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, வடலூரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
உங்களைத் தேடி, நாடி உங்களிடத்தில் ஆதரவு கேட்டு, வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன். வரும் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன்.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் - வேங்கையின் மைந்தன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், அவர் மாவட்டக் கழகத்தின் செயலாளர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்று எதிர்க்கட்சியாக இருந்தாலும், தலைவர் கலைஞர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்ற நேரத்திலும், குறிஞ்சிப்பாடி தொகுதி மக்களுக்காகப் பாடுபட்டவர், பணியாற்றியவர், தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பவர். அவர் இந்த மேடையில் இல்லை. காரணம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அன்றாடம் என்னுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். பயமில்லை, விரைவில் குணமாகித் திரும்பி வந்து உங்களை எல்லாம் சந்திப்பார்.
இன்றைக்கு உங்களை வரவேற்க நான் வந்தே தீருவேன் என்று கூறினார். நான்தான் அவரை நோய் குணமாகும்வரை ஓய்வெடுக்குமாறு, தலைவர் என்ற முறையில் கட்டளையாகவே கூறினேன். அதை ஏற்று அவர் வரவில்லை. எப்படியும் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் அவர் வந்து உங்களைச் சந்திப்பார். நீங்களும் 6 ஆம் தேதி அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
அதேபோல புவனகிரி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் துரை.கி.சரவணன் அவர்கள், அவருக்கும் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டு மருத்துவமனையில் ஓய்வு எடுத்துவிட்டு, அதற்குப் பிறகு நலம் பெற்று இங்கே வந்திருக்கிறார். ஏற்கனவே புவனகிரி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தத் தொகுதி மக்களுடைய பிரச்சினைகளை சட்டமன்றத்தில் எடுத்து வாதிட்டவர், குரல் எழுப்பியவர். எனவே அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
அதேபோல கடலூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் கோ.அய்யப்பன் அவர்கள், அவரும் ஏற்கனவே ஒருமுறை சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்து பணியாற்றி இருக்கிறார். அவரைத்தான் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்து இன்றைக்கு உங்களிடத்தில் ஒப்படைத்து இருக்கிறோம். எனவே அய்யப்பன் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
அதேபோல சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் சார்பில், தேசியக் கவுன்சில் உறுப்பினராக இருக்கும் அப்துல் ரகுமான் அவர்கள், ஏணி சின்னத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு மாபெரும் வெற்றியை நீங்கள் தேடித்தர வேண்டும்.
அதேபோல காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர், சிந்தனைச்செல்வன் அவர்கள் ஒரு சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர், தொல்.திருமாவளவன் அவர்களுடைய வலதுகரமாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு பானை சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் தேடித் தரவேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி அவர்களும், உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா அவர்களும் மாறி மாறி இப்போது தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.
இன்றைக்கு காலையில் ஒரு செய்தியைப் பார்த்து இருப்பீர்கள். என்னுடைய மகள் வீட்டில் இன்றைக்கு சோதனை நடத்தினார்கள். நாளைக்கு என் வீட்டில் நடக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள். அப்போதுதான் தி.மு.க. இன்னும் வலுப்பெறும். தி.மு.க. இன்னும் உணர்ச்சி பெறும். நாங்கள் என்ன அ.தி.மு.க.வா உங்கள் சோதனையைப் பார்த்துப் பயந்து மூலையில் உட்கார்ந்து கொள்வதற்கு? நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சி விட மாட்டோம்.
வருமான வரித்துறை சோதனை என்றால் என்ன தெரியுமா? வருமானத்துக்கு மீறி சொத்துச் சேர்த்திருந்தால், அதைக் கணக்கில் காட்டாமல் இருந்தால் சோதனை செய்ய வேண்டும்.
ஆனால் அவர்கள், தேர்தலுக்காக ஏதோ பணம் பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்குச் செய்தி கிடைத்தது. அதனால் வந்தோம் என்று இறுதியாக சொல்லப் போகிறார்கள். இதுவரைக்கும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாகத் தேடுங்கள். அதைத்தான் செய்தியாகச் சொல்லப் போகிறார்கள்.
இப்போது எங்களுக்கு செய்தி கிடைத்திருக்கிறது. என்ன செய்தி என்றால், மோடி வருகின்ற விமானத்தில் பண மூட்டையுடன் வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தாராபுரத்திற்கு வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது மதுரைக்கு வந்திருக்கிறார். இரவோடு இரவாக வந்திருக்கிறார். அதனால் பண மூட்டையுடன் வந்திருக்கிறார். நாளைய தினம் அமித்ஷா வரப்போகிறார். அவரும் பண மூட்டையுடன் வரப்போகிறார் என்று நாங்கள் சொல்லுகிறோம்.
வருமான வரித்துறையினருக்கு, நேரடியாக அவர்கள் வரும் விமானத்திற்குச் சென்று சோதனை செய்வதற்கு தைரியம் இருக்கிறதா?
பிரதமருக்கு ஒரு சட்டம். ஸ்டாலினுக்கு ஒரு சட்டமா? என்று நான் கேட்கிறேன். அவர் இந்த நாட்டின் பிரதிநிதிதான், நானும் இந்த நாட்டின் பிரதிநிதிதான்.
தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் கருத்துக் கணிப்புகள் எல்லாம், தி.மு.க. தான் மாபெரும் வெற்றி பெறப் போகிறது என்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதைத் தாங்க முடியவில்லை. அவர்களுக்கு எரிச்சல் வந்து விட்டது. ஆத்திரம் வந்துவிட்டது. பொறாமை வந்து விட்டது. எப்படியாவது ஐந்தாறு சீட்டாவது வென்று விடலாம் என்று பா.ஜ.க. நினைத்துக் கொண்டிருக்கிறது. நான் சொல்கிறேன், நீங்கள் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது. மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இது தமிழ்நாடு. தந்தை பெரியார் பிறந்த மண் – பேரறிஞர் அண்ணா பிறந்த மண் - தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். இது திராவிட மண். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மோடி அவர்களே… அமித் ஷா அவர்களே… உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
வருமான வரித்துறைச் சோதனை என்றால் கணக்கு வழக்கு தவறாக வைத்திருந்தால், ஒரு மாதத்திற்கு முன்பு சோதனை செய்திருக்க வேண்டும். இல்லை என்றால், தேர்தல் முடிந்த பிறகு செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். அது எங்கள் கடமை. வருமான வரித்துறையை ஏமாற்றினால் அதற்குரிய தண்டனை இருக்கிறது. அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நான்கு நாட்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நம்முடைய தோழர்களை, அவர்கள் வேலையை கட்டுப்படுத்த வேண்டும், அவர்களை முடக்கி வைக்க வேண்டும், அவர்களை பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் செய்தீர்கள் என்றால், அதற்கெல்லாம் அஞ்சி, நடுங்கி, மூலையில் முடங்குகின்ற கட்சி தி.மு.க. அல்ல. அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சி இது. தலைவர் கலைஞரிடத்தில் பயிற்சி பெற்றவன்தான் இந்த ஸ்டாலின் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
மோடி அவர்கள் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுச் சென்றிருக்கிறார். ஏற்கனவே தாராபுரத்தில் வந்து பேசி விட்டுச் சென்றிருக்கிறார். இப்போது மதுரையில் இன்றைக்குப். பேசிவிட்டு சென்றிருக்கிறார். நான் தாராபுரத்தில் பேசிவிட்டுச் சென்றபோது ஒரு கேள்வியை அவரிடம் கேட்டேன்.
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, 2015-ஆம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தீர்கள். அதற்குப் பிறகு நான்கு வருடம் கழித்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது மக்களை ஏமாற்றுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினீர்கள். ஒரு செங்கல் வைத்துவிட்டுச் சென்று விட்டீர்கள். இன்றைக்கு அந்தச் செங்கல்லையும் எடுத்துக்கொண்டு தம்பி உதயநிதி ஊர் ஊராகச் சென்று காட்டிக் கொண்டிருக்கிறார்.
அவர் இன்றைக்கு என்ன பேசுகிறார் தெரியுமா? எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வருவது மட்டுமல்ல, சிறப்பாக இருக்கும் என்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா?
15 மாநிலங்களில் எய்ம்ஸ் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். மற்ற எல்லா மாநிலங்களிலும் வேலையைத் தொடங்கி விட்டீர்கள். அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி விட்டீர்கள். ஆனால் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கவில்லை. ஆனால் சிறப்பாகச் செய்வோம் என்று சொல்கிறீர்களே எப்படி? ஒரு சினிமாவில் வடிவேலு சொல்வார், ‘வரும் ஆனா வராது’ என்று, அதுபோலத்தான் இருக்கிறது.
அது மட்டும் சொல்லவில்லை. தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார். அது என்ன எண்ணற்ற திட்டம். எய்ம்ஸ் திட்டமே சிரிப்பாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு யோக்கியதை இல்லை.
ஆனால் இப்போது பொய்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் மோடி அவர்கள். அவர் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார். மத்திய அரசு அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது என்று சொல்லி இருக்கிறார். இது அபாண்டமான ஒரு பொய்.
இதைத்தான் ஏற்கனவே பன்னீர்செல்வம் அவர்கள் சொன்னார். அப்போதே நான் சொன்னேன். இது உங்களாலும் வரவில்லை, பன்னீர்செல்வம் அவர்களாலும் வரவில்லை, பிரதமராலும் வரவில்லை. ஜல்லிக்கட்டு நாயகர்கள் என்று தமிழ்நாட்டு இளைஞர்களைத்தான் சொல்ல வேண்டும். அவர்கள் போராடிய போராட்டத்தினால்தான் அது வந்தது. அதை மறந்து விடாதீர்கள்.
மெரினா கடற்கரையில் போராட்டத்தை அந்த இளைஞர்கள் நடத்தினார்கள். அவர்கள் அந்தப் போராட்டத்தை நடத்தவில்லை என்றால் இந்த அனுமதியை கொடுத்திருப்பார்களா? நான் கேட்கிறேன்.
2016-இல் மத்திய அமைச்சரவையில் ஒரு முக்கியமான அமைச்சராக இருக்கும் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தார்கள். அப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுப்போம் என்று சொல்லி விட்டுச் சென்றார். ஆனால் மறுபடியும் இந்த பிரச்சினை வந்தபோது பிரதமர் என்ன சொன்னார் என்றால், இந்தப் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு முடியாது என்று திட்டவட்டமாகச் சொன்னார்.
அதற்குப் பிறகு மெரினா போராட்டம் மிகப்பெரிய அளவில் நடக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டின் சார்பில் நாங்கள் சட்டமன்றத்தில் பேசி அதற்குப் பிறகு, இந்த சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டத்தைப் போட்டு நிறைவேற்றி அனுப்பினோம். பிறகு வேறு வழியில்லாமல் மத்திய அரசு அதை ஒத்துக் கொண்டது. அதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அந்தப் போராட்டம் நடந்தபோது அதில் கலந்து கொண்ட இளைஞர்களைக் கலைப்பதற்காக போலீஸ் தடியடி நடத்தியது. ஒரு கலவரத்தை ஏற்படுத்தினார்கள். ஒரு ஆட்டோவிற்கு போலீசே தீ வைத்து, அந்தத் தீயை வைத்தது போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்தான் என்று ஒரு பொய் வழக்குப் போட்டு, பெரிய கலவரத்தை நடத்தியதை இந்த நாடு மறந்துவிடாது.
அதுமட்டுமல்ல, தாராபுரத்தில் என்ன பேசினாரோ, அதையே மறுபடியும் பேசியிருக்கிறார். தி.மு.க.வால் - காங்கிரசால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று பேசியிருக்கிறார்.
நான் கேட்கிறேன், கடந்த பத்து வருடங்களாக யாருடைய ஆட்சி? தி.மு.க. ஆட்சியா? காங்கிரஸ் ஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சி கடந்த பத்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. நான் அப்போதே சொன்னேன். பிரதமர் அவர்களே… தாராபுரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தான் பொள்ளாச்சி. அந்தப் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் பிரதமருக்குத் தெரியாதா?
அதுமட்டுமல்ல, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது காவல் துறை. அந்தக் காவல்துறையில் ஒரு பெண் எஸ்.பி.க்கு ஏற்பட்ட நிலை என்ன? அந்தப் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்? அந்த எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவல்துறையின் தலைவராக இருக்கும் டி.ஜி.பி. அதுவும் ஸ்பெஷல் டி.ஜி.பி. அவர் முதலமைச்சர் பழனிசாமிக்கு, எல்லா வகையிலும் பக்கபலமாக இருப்பவர். அதுவும் விசாரணையில் இருக்கிறது. அது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?
இதே அ.தி.மு.க. ஆட்சியில், ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்காக, அ.தி.மு.கவினர் ஆத்திரமடைந்து, ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்து சென்ற கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் மூன்று பேரை, பேருந்துடன் சேர்த்து, உயிரோடு தீவைத்துக் கொளுத்திக் கொன்றார்களே!
நான் கேட்கிறேன், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க.வைப் பார்த்து குறை சொல்கிறீர்களே… நீங்கள் ஆளுகின்ற மாநிலத்தில் இருக்கும் நிலை என்ன? உங்களுடைய ஆட்சி நடக்கும் மாநிலம்தான் உத்தரப் பிரதேச மாநிலம். இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாலியல் தொல்லைகள் நடக்கும் மாநிலம் உத்தர பிரதேச மாநிலம் என்று மத்திய அரசின் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. அதைப் பற்றிப் பேசுவதற்கு பிரதமராக இருக்கும் மோடிக்கு மனது வரவில்லை.
மோடி அவர்கள் எங்கு போனாலும் அந்த மாநிலத்தில் இருக்கும் சிறப்புகளைப் பேசுவது அவருக்கு வழக்கம். இன்றைக்கு மதுரைக்கு வந்தபோது உலகில் தொன்மை வாய்ந்த தமிழைச் சங்கம் வைத்து வளர்த்தது மதுரை என்று பேசியிருக்கிறார்.
மதுரை குறித்து அப்படிப் பெருமையாக நீங்கள் பேசியதை நான் வரவேற்கிறேன். அது மகிழ்ச்சிதான். ஆனால் நான் கேட்பது, மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் கீழடியின் தொன்மையை ஆராய்ச்சி செய்ய ஏன் இதுவரை பிரதமர் அனுமதி தரவில்லை?
இந்தியைத் திணித்து, சமஸ்கிருதத்தை வளர்க்க நினைக்கும் உங்களைத் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்பது உறுதி. உங்களுக்கான தண்டனை தான் வருகின்ற ஆறாம் தேதி. அந்த தண்டனையை வழங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
இன்னும் ஒரு வேண்டுகோள். பாஜக ஒரு இடத்தில் கூட வரப்போவதில்லை. அதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பார்த்துவிட்டோம். அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் ஓரிடத்தில் கூட வந்து விடக்கூடாது. அதில் நீங்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் நான் சொன்னேன். நம்முடைய தலைமையில் இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிச்சயமாக உறுதியாக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன்.
இன்றைக்கு பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கருத்துக்கணிப்புகளை நாம் என்றைக்கும் பொருட்படுத்துவதில்லை. அது நமக்கு ஆதரவாக வந்தாலும் அல்லது எதிர்ப்பாக வந்தாலும் கலைஞர் அப்படித்தான் நமக்கு பயிற்சி அளித்து இருக்கிறார். அதனால், அதனை நம்பி ஏமாந்து ஓரம் சென்று ஒதுங்கி விடாதீர்கள். ஓய்வெடுத்து விடாதீர்கள்.
எனவே ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க. வெற்றி பெறக் கூடாது என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது நல்ல படிப்பினை நமக்குக் கிடைத்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் நாம் 38 இடங்களில் வெற்றி பெற்றோம். ஒரே ஒரு இடத்தில்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அவர் அ.தி.மு.க. எம்.பி.யாக அல்லாமல் பாஜக எம்.பி.யாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர்தான் ஓபிஎஸ் மகன்.
முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்களைப் பார்த்து நேற்றைய தினம் பல கேள்விகளைக் கேட்டேன்.
அய்யா மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி அவர்களே… பிரதமர் பிரச்சாரத்திற்காக ஏற்கனவே வந்து விட்டுச் சென்றார். இப்போது மறுபடியும் மதுரைக்கு வரப்போகிறார். நீங்கள்தான் அருகில் உட்காரப் போகிறீர்கள். அந்த மேடையில் நீங்கள் பேசப் போகிறீர்கள். ஒன்று பக்கத்திலிருந்து இரகசியமாகப் பேசுங்கள். இல்லை அதற்கும் பயமாக இருந்தால் நீங்கள் பேசுவதற்கு பத்து நிமிடம் வாய்ப்புக் கொடுப்பார்கள் அல்லவா, அப்போது இந்தப் பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நான் கோரிக்கை வைத்தேன்.
சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அதிமுகவும், பாமகவும் நாடாளுமன்றத்திலேயே ஆதரித்து வாக்களித்தனர். ஆனால் இப்போது அந்தச் சட்டத்தை எதிர்ப்பதாகத் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறீர்கள். அதைப் பற்றி மதுரைக்கு வரும் பிரதமரிடம் கேளுங்கள் என்றேன்.
அதேபோல நீட் தேர்வை எதிர்ப்பதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதையும் பிரதமரிடம் நீங்கள் கேட்க வேண்டும்.
தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்திலேயே ஆதரித்தீர்கள். விவசாயிகளைத் தரகர்கள் என்று இழிவாக விமர்சித்தீர்கள். அந்த வேளாண் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப் போவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறீர்கள். அதையும் மதுரைக்கு வரும் பிரதமரிடம் நீங்கள் கேட்க வேண்டும்.
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை விவகாரத்திலும் உடன்படுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் ஒன்றும் செய்யவில்லை. அதைப் பற்றியும் பிரதமரிடம் நீங்கள் கேட்க வேண்டும்.
பேரிடர் காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய பலமுறை நிதி கேட்டீர்கள். அந்த நிதியைத் தாருங்கள் என்று பிரதமரிடம் கேட்க வேண்டும் என்றெல்லாம் முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தேன்.
உங்களுக்கு காலில் விழுவது, ஊர்ந்து செல்வது, பழக்கம் - வழக்கம். அதை மோடியிடத்தில் செய்திருக்கலாம் அல்லவா. ஆனால் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்பதற்கு பயம். அச்சம். எதையுமே கேட்கவில்லை. அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை.
இப்படிப்பட்ட கேடுகெட்ட ஆட்சிக்கு ஏப்-6ஆம் தேதி முடிவு கட்டி, கழக ஆட்சியை மலரவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம். மேலும் இந்த 5 தொகுதிகளுக்காக, வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும். கடலூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும். கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படும். புவனகிரியில் நறுமணத் தொழிற்சாலை அமைக்கப்படும். சிதம்பரம், கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடியில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். சிதம்பரம், மங்களூரில் கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்படும். சிதம்பரம் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும். சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம், கச்சேரி சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம். பரங்கிப்பேட்டை - அண்ணன் கோவிலில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும். சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் சிலை நிறுவப்படும். கடலூரில் அரசு பொறியியல் கல்லூரி, மீன்வளக் கல்லூரி, தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் காகிதத் தொழிற்சாலை அமைக்கப்படும்; கடலூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும். குறிஞ்சிப்பாடி - சொத்திக்குப்பம் பரவனாற்றில் படகு அணைப்புப் பாலம் கட்டப்படும். குறிஞ்சிப்பாடியில் முந்திரி தொழிற்சாலை.
இப்போது நான் சொன்னவை ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் எண்ணற்ற திட்டங்களில் சில. அத்துடன், அதிமுக ஆட்சியால் 50 ஆண்டுகள் பின்தங்கிவிட்ட தமிழகத்தை முன்னேற்றுவதற்காக, ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்ற பெயரில் பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களையும் திருச்சியில் கடந்த மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அறிவித்தேன்.
அவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றால் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாக வேண்டும். அத்துடன், இவர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர் என்பதையும் மறந்து விடாதீர்கள். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
சீர்காழியில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
பூம்புகார் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் நிவேதா முருகன் அவர்களுக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மாபெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும். அவர் மாவட்டக் கழகத்தின் பொறுப்பாளராக பொறுப்பேற்று, கழகத் தோழர்களிடத்தில் மட்டுமல்ல, இந்த தொகுதியில் இருக்கும் மக்களிடத்திலும் சிறப்பான பெயரைப் பெற்றவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
அதேபோல சீர்காழி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக நம்முடைய கழகத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தர வேண்டும்.
அதேபோல மயிலாடுதுறை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக, காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ராஜ்குமார் அவர்களுக்கு கை சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும். அவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்து இந்த மாவட்டத்தில் நன்கு அறிமுகமானவர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிய சிறப்புக்குரிய செயல்வீரர். எனவே அவருக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் ஆதரித்து மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும் என்று உங்களையெல்லாம் நான் மீண்டும் மீண்டும் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
எப்போதும் தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடி வருவார். அமித்ஷா வருவார். பாஜகவில் இருக்கும் தலைவர்கள் வருவார்கள்.
அதற்குப் பிறகு தேர்தல் முடிந்து விட்டால் மக்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள், சிந்திக்க மாட்டார்கள். ஆனால் தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும் என்றைக்கும் உங்களோடு இருப்பவர்கள்தான் நாங்கள் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.
நேற்றைக்கு உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா அவர்கள் பேசியிருக்கிறார். பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி, வளர்ச்சிக் கூட்டணியாம்.
மதிப்பிற்குரிய மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே… உங்கள் கூட்டணி வளர்ச்சி கூட்டணி அல்ல, அது லஞ்சம் - ஊழல் கூட்டணி. மறந்துவிடாதீர்கள்.
அது, என்றைக்கு பிரதமர் மோடி அவர்கள், ஊழல் கைகளாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கையையும் – பழனிசாமி அவர்களின் கையையும் பிடித்துக்கொண்டு தூக்கி காட்டினாரோ அன்றைக்கே தெரிந்து விட்டது.
இன்றைக்கு மாநில வருவாயை முழுவதுமாக ஜி.எஸ்.டி. வரியைக் கொண்டு வந்து, மத்திய அரசின் கஜானாவிற்குக் கொண்டு சென்றிருக்கிறீர்கள். ஒரு எய்ம்ஸ் திட்டத்தை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. உங்களுக்கு ஆட்சி ஒரு கேடா?
நீங்கள், தமிழ்நாடு தான் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போடவில்லையே, அப்போது ஏன் நாங்கள் உங்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைக்கலாம். அப்படிப்பட்ட நினைப்பு உங்களுக்கு இருந்தால் இந்த முறையும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாங்கிய அதே ஜீரோ தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
எவ்வாறு பாஜகவுக்கு ஜீரோ என்று சொல்கிறேனோ, அதேபோல ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுக்கும் ஜீரோ தான்.
நான் உங்களைப் பணிவாக விரும்பி வேண்டி உரிமையோடு கேட்க விரும்புவது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை சுத்தமாக வாஷ் அவுட் செய்தது போல அ.தி.மு.க.வையும் இந்த சட்டமன்ற தேர்தலில் சுத்தமாக ஒழிக்கவேண்டும். அதிமுக ஒரு இடத்தில் வென்றாலும், அவர் பாஜகவாகத்தான் செயல்படுவார் என்பதற்கு, நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகனே உதாரணம்.
பாஜக நம்முடைய கல்வி உரிமை, இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்புகள் எல்லாவற்றையும் படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு அழிப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் பாஜக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு உறுதுணையாக பக்கபலமாக பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதனால் தான் சொல்கிறேன், இப்போது நடக்கும் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல,
நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். மறந்து விடக்கூடாது. நம்முடைய உரிமைகளை காப்பாற்ற வேண்டும். நம்முடைய தன் மானத்தை காப்பாற்ற வேண்டும். நம்முடைய உரிமைகள் பறி போகக்கூடாது. அது இப்போது பறிபோய்க்கொண்டிருக்கிறது.
தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் எல்லாம் உறுதியாக தி.மு.க. தலைமையில் இருக்கும் கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றி பெறப் போகிறது என்று கருத்துக் கணிப்பை வெளியிடுகிறார்கள். கருத்துக்கணிப்புகளைப் பார்க்கிறார்கள். நாம் செல்லும் இடங்களில் கூட்டங்களை பார்க்கிறார்கள். தி.மு.க. கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றி பெறப் போகிறது என்று எரிச்சல், இங்கு இருக்கும் ஆட்சிக்கு மட்டுமல்ல, மத்தியில் இருக்கும் பாஜகவுக்கும் வந்துவிட்டது.
அதனால் தான் நம்மை மிரட்டுவதற்காக இப்போது சோதனை என்ற ஒன்றை கண்டுபிடித்து ஐந்து நாட்களுக்கு முன்பு வேலு அவர்கள் வீட்டில், கெஸ்ட் ஹவுஸில், காலேஜில் நான் சென்றிருந்தபோது சோதனைக்கு வந்தார்கள். இரண்டு நாள் சோதனை போட்டார்கள். அதற்கு பிறகு நம்முடைய கட்சி தோழர்கள் வீடுகளில் சோதனை போட்டார்கள்.
இரண்டு நாள், மூன்று நாள் நம்முடைய கட்சி பணிகளை, பிரச்சாரத்திற்கு போக வேண்டிய பணிகளை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இன்றைக்கு காலையில் கரூர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல அண்ணாநகர் தொகுதியில் எம்.கே.மோகன் வீட்டில் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு காலையில் என்னுடைய மகள் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. நாளைக்கு என் வீட்டிற்கும் வருவார்கள். வரட்டும்.
நீங்கள் எப்போது சோதனை தொடர்ந்து நடத்துகிறீர்களோ அப்போதெல்லாம் உங்களுக்கு ஒரு பெரிய சோதனை காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் சோதனை செய்யச் செய்ய நம்முடைய தலைவர்கள் எழுந்து, கிளர்ந்து வெளியில் வந்துவிடுவார்கள்.
யாரிடம் இந்த மிரட்டல்? இது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சிட மாட்டோம். நாம் அண்ணாவால் உருவாக்கப்பட்டவர்கள். கலைஞரிடம் பயிற்சி பெற்றவர்கள். இது அனைத்தும் நமக்கு சாதாரணம். மிசா சட்டத்திற்கே கலங்காதது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மறந்து விடாதீர்கள்.
இவ்வாறு செய்தால் நாங்கள் கட்சிப்பணியை ஆற்றாமல் இருந்து விடுவோமா? நாங்கள் அதை பற்றி கவலைப்பட மாட்டோம். நீங்கள் அதை இன்னும் செய்யுங்கள். அதை நீங்கள் செய்ய செய்யத்தான் நம்முடைய வாக்கு வித்தியாசம் அதிகமாக போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.
அவ்வாறு வந்த அதிகாரிகள் என்ன சொல்லி விட்டு செல்கிறார்கள்? என்ன செய்வது? மேலிடத்து உத்தரவு. இங்கு ஒன்றும் இல்லை என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலும் செய்கிறோம். உங்களுக்கு என்ன? உங்களுக்கு நல்லதுதானே. இன்னும் பத்து இடங்களில் அதிகமாக வெற்றி பெறுவீர்கள் என்று அந்த அதிகாரிகள் சொல்லி விட்டு செல்கிறார்கள். இதுதான் இன்று இருக்கும் நிலை.
நீங்கள் அ.தி.மு.க.வை அச்சுறுத்த, அவர்கள் வீட்டில் சோதனை செய்தீர்கள். அதனால் உங்கள் காலில் விழுந்து இருக்கிறார்கள்.
நாங்களும் அ.தி.மு.க.வைப் போல உங்கள் காலில் விழுவோம் என்று நினைக்கிறீர்களா? அது நடக்கவே நடக்காது. உயிரே போனாலும் அது நடக்காது. மானம் உள்ளவர்கள் நாங்கள். அவர்களுக்கு மானம் இல்லை. உங்கள் காலில் விழுந்து கிடக்கலாம்.
பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறார். அவரிடம் சில கோரிக்கைகளை வைக்குமாறு முதலமைச்சர் பழனிசாமி அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவற்றை கேட்டாரா?
நம்முடைய கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன பணிகளை செய்யப்போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறோம். பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பயன்தரக்கூடிய 505 வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.
மேலும் இந்த 3 தொகுதிகளுக்காக, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும். மயிலாடுதுறை பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்பட்டு நவீனப்படுத்தப்படும். மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, குளிர்பதனக் கிடங்கு, சுற்றுச்சாலை, புறவழிச்சாலை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்குச் சிலை. சீர்காழியில் பாதாள சாக்கடை திட்டம், தரங்கம்பாடியில் சீகன்பால்கு அய்யருக்குச் சிலை. பூம்புகார் தொகுதியில் அரசு வேளாண்மைக் கல்லூரி. பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய ஊர்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்புச் சுற்றுலா மையங்களாக மேம்படுத்தப்படும். மயிலாடுதுறைக்கும் தரங்கம்பாடிக்கும் இடையே தொடர்வண்டி வசதிகள் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மீனவர் கிராமங்களுக்குக் கடல் அரிப்பைத் தடுப்பதற்குத் தடுப்புச் சுவர் கட்டப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வானகிரி – பூம்புகார் இணைக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவற்றுடன், ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்ற பெயரில் நான் அறிவித்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களையும் நிறைவேற்ற, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதைக் கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.