மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 09 Jul 2021, 10:29:24 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கோவை மாவட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின்
மாநில முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (8.7.2021), மாலை, அவர்கள் தலைமையில் கோவை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., - முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி ஆகியோர் உடனிருந்தனர்.
***
இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் அவர்களையும், அவர் தலைமையில் கழகத்தில் இணைந்தவர்களையும் வரவேற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக, இங்கே வருகை தந்து, உங்களிடையே சிறு உரையாற்றி, தன்னை இந்த இயக்கத்திலே ஒரு தொண்டனாக இணைத்துக் கொண்டு பணியாற்ற உறுதி எடுத்திருக்கும் அன்பிற்குரிய சகோதரர் மகேந்திரன் அவர்களே, அவருடன் கழகத்தில் வந்து சேர்ந்திருக்கும் அன்பிற்குரிய நண்பர்களே, சகோதரர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
நான் தேர்தல் அறிவித்தபோதே இவருக்காக ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது கொஞ்சம் லேட் ஆகிவிட்டது.
‘சூப்பர் ஸ்டார்‘ அவர்கள் ஒரு படத்தில் சொல்வார், லேட் ஆனாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார். அதேபோல லேட் ஆனாலும் லேட்டஸ்டாக நமக்கு கிடைத்திருக்கும் நம்முடைய மகேந்திரன் உள்ளிட்ட சகோதரர்கள் அனைவரையும் நான் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
எனக்கு என்ன கவலை என்றால், தேர்தலுக்கு முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் கோவையில் நாம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்க முடியும். கொங்கு மண்டலத்திலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியும்.
ஆட்சி அமைக்கும் அளவிற்கு நாம் வெற்றி பெற்றிருந்தாலும், கோவை மாவட்டத்தில், சேலம் மாவட்டத்தில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இன்னும் சில மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவிற்கு நாம் வெற்றி பெற முடியாததை எண்ணி நான் வருத்தப்படுகிறேன்.
நீங்கள் எல்லாம் இருந்திருந்தால், மகேந்திரன் அப்போதே வந்து சேர்ந்திருந்தால் அந்த கவலையும் இப்போது இல்லாமல் இருந்திருக்கும். இப்போதும் ஒன்றும் குறைந்து போகவில்லை. இப்போது வந்து விட்டீர்கள். இனிமேல் அந்த வேலையை மகேந்திரன் பார்க்கப் போகிறார். இந்தக் கழகத்திற்கு பெருமை வந்து சேரப்போகிறது. இன்னும் கழகத்திற்கு செல்வாக்கு வந்து சேரப்போகிறது.
எனவே அதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேரையும் நம்முடைய தலைமைக் கழகத்தின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகத்தின் தலைவர் என்ற முறையில் வருக… வருக… வருக… என்று உங்கள் அத்தனை பேரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.
மகேந்திரன் அவர்களை நான் பேச சொன்னேன். அவர் நான் பேசவில்லை. நீங்கள் பேசுங்கள் என்றார். ஆனால் பேசினார். நான்தான் பேச சொன்னேன். மிகவும் சிறப்பாக பேசினார்.
அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே, அவர் மனதில் இருந்தது, அவர் உள்ளத்தில் இருந்தது, அந்த பற்று, திராவிட இயக்கம், இந்த பாரம்பரியம் அதைப் பற்றி எல்லாம் எடுத்துச் சொன்னார்.
எனவே நான் அது குறித்து அதிக விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஒரு திராவிடப் பாரம்பரியத்தில் உருவாகி இருக்கும் நம்முடைய அன்பிற்கினிய சகோதரர் மகேந்திரன் அவர்கள், இன்றைக்கு இந்த கழகத்தில், நம்முடைய இயக்கத்தில் சேர்ந்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று, மகிழ்ச்சிக்குரிய ஒன்று. அவரோடு வந்து சேர்ந்திருக்கும் அத்தனை பேரையும் நான் மீண்டும் ஒருமுறை வருக… வருக… வருக… என வரவேற்று என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.
***