வீரபாண்டியார் அவர்களைப் போலவே தம்பி ஆ.ராஜா அவர்களும் கழகத் தொண்டர்கள் மனதில் எந்நாளும் வாழ்வார்! கழகத்துக்காகப் பல கொடுமைகளைத் தாங்கி; தியாகம் செய்த குடும்பம் வீரபாண்டியாரின் குடும்பம்!
பதிவு: 14 Dec 2021, 10:42:18 மணி
வீரபாண்டியார் அவர்களைப் போலவே தம்பி ஆ. ராஜா அவர்களும் கழகத் தொண்டர்கள் மனதில் எந்நாளும் வாழ்வார்!
கழகத்துக்காகப் பல கொடுமைகளைத் தாங்கி; தியாகம் செய்த குடும்பம் வீரபாண்டியாரின் குடும்பம்!
இன்று (11-12-2021) சேலம் ஸ்ரீ ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் கழகத் தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான மறைந்த திரு. வீரபாண்டி ஆ. ராஜா அவர்களின் திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:
என்னுடைய அருமைத் தம்பி வீரபாண்டி ராஜா அவர்களுடைய திருவுருவப் படத்தினைத் திறந்து வைக்கும் அளவிற்கு ஒரு மோசமான சூழல் இவ்வளவு சீக்கிரம் வருமென்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி நம்மையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. அவர் மறைவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இதே சேலத்தில் ஒரு அரசு நிகழ்ச்சிக்காக நான் வந்திருந்தேன். அப்போது அவர் என்னை வரவேற்று, அதற்குப் பிறகு நடைபெறவிருக்கும் கழக நிகழ்ச்சிகளை பற்றி, அரசு நிகழ்ச்சிகளை பற்றி எல்லாம் என்னிடத்தில் அவர் புன்சிரிப்போடு, ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்தார். அதற்குப் பிறகு நான் சென்னைக்கு கிளம்புகிறபோது அவரிடத்தில் விடைபெற்று சென்றேன்.
அது நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் நம்மிடமிருந்து பிரிந்து விட்டார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. இந்த துயரமான செய்தி எனக்கு எங்கே கிடைத்தது என்று கேட்டால், மதுரை மாவட்டத்தைச் சார்ந்த பாப்பாப்பட்டி, கே.நாட்டாப்பட்டியில் நடைபெற்று கொண்டிருந்த அரசு நிகழ்ச்சி - கிராம சபைக் கூட்டம். முதலில் நான் நம்பவில்லை. நம்பவும் முடியவில்லை. அதற்குப் பிறகு அதை உறுதி செய்துகொண்டு, உடனே ஒரு இரங்கல் அறிக்கையை நான் வெளியிட்டேன். அதில் என்ன குறிப்பிட்டேன் என்று சொன்னால், “சேலம் மண்டலத்தில் கழகம் வளர்க்கும் வீரனாக வலம் வந்த தம்பி வீரபாண்டி ராஜா“ என்று நான் குறிப்பிட்டிருந்தேன். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர். அருமையான குணத்தை பெற்றிருந்தவர். அனைவரையும் ஈர்க்கும் அளவிற்கு சாதுவாக, மெதுவாக, எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் பேசக்கூடியவர். எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், அவர் பொறுமையாக அதை நிறைவேற்றித் தரும் அளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தவர்.
இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளராக இருந்து பணியாற்றினார். அதற்குப் பிறகு, மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்று பணியாற்றி இருக்கிறார். தலைமைக் கழகத்தின் தேர்தல் பணிக்குழு செயலாளர்களில் ஒருவராக இருந்து சிறப்போடு பணியாற்றியவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றி இருப்பவர். திறம்பட மக்களுக்குப் பணியாற்றுவதில் அவர் சுறுசுறுப்பாக தன்னுடைய கடமையை நிறைவேற்றும் ஆற்றல் பெற்றிருந்தவர். எனவே அவர் நம்மிடத்தில் இன்றைக்கு இல்லை. படமாக மாறியிருக்கிறார். எனவே இதை வெறும் படமாக நீங்கள் கருதிவிடக்கூடாது. நமக்கெல்லாம் ஒரு பாடமாக இந்தப் படம் அமைய வேண்டும்.
மிக இளமைப் பருவத்திலேயே இவருடைய அண்ணன், வீரபாண்டியாருடைய மூத்த மகன் செழியனை நாம் இழந்தோம். மருத்துவமனை வாசலிலேயே தலைவர் கலைஞர் அவர்கள் வாய்விட்டு கதறும் அளவிற்கு நம்மை விட்டுப் பிரிந்தவர் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள். இதோ இப்பொழுது வீரபாண்டி ராஜாவும் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவருடைய குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது? என்னை நானே எவ்வாறு தேற்றிக் கொள்வது? வீரபாண்டி ராஜா போன்றோர் மறைவு, ஒரு தனி மனித மறைவு அல்ல. நம் கழகத்தின் தூண் ஒன்று சாய்ந்து விட்டது என்றுதான் நாம் நினைக்க வேண்டும். எந்நாளும் அவர் புகழ் நிலைத்திருக்க வேண்டும். கழகத் தொண்டர்கள் எந்நாளும் மனதில் நிச்சயமாக, எவ்வாறு வீரபாண்டியார் வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ, அதேபோல ராஜாவும் நிச்சயமாக வாழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வீரபாண்டியார் குடும்பத்திற்கு ஆறுதலும் தேறுதலும் சொல்வது என்பது எனக்கு நானே என்னைத் தேற்றிக்கொள்வதாக அது அமைந்துவிடும். தலைவர் குடும்பத்தில் வீரபாண்டியாருடைய குடும்பமும் எவ்வாறு உள்ளடங்கி இருக்கிறதோ, அதேபோல வீரபாண்டியாருடைய குடும்பத்தில் நானும் ஒருத்தன் என்கின்ற பாச உணர்வோடுதான் இன்றைக்கு நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அவருடைய படத்தை திறந்து வைத்துவிட்டு, இங்கே அவருக்கு நான் புகழ் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கிறேன்.
சேலம் என்று சொன்னால் நமக்கு நினைவுக்கு வருவது வீரபாண்டியார் தான். அது கல்வெட்டு போலப் பதிந்துவிட்டது. யாராலும் மாற்ற முடியாது எவனாலும் மாற்ற முடியாது. இனிமேல் பிறந்து கூட வரமுடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் பட்டியலைப் போட்டால், அந்த பட்டியலில் இடம் பெறுபவர் மட்டுமல்ல, அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவரும் அண்ணன் வீரபாண்டியாராகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு தீரராக விளங்கிய வீரபாண்டியாருடைய பிள்ளை, என்னுடைய தம்பி ராஜாவை நாம் இழந்திருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கு இவ்வளவு காலம் தாமதமாக வந்ததற்கு என்ன காரணம் என்றால், இந்த நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு அரசு நிகழ்ச்சி இருந்தது. சரியாக 9.30 மணியளவில் விமான நிலையத்தில் இறங்கினாலும், பத்து நிமிடத்தில் செல்ல வேண்டிய அந்த இடத்திற்கு சென்று சேர 2 மணி நேரம் ஆகியது. அதற்குப் பிறகு அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்த இடத்திற்கு நான் தாமதமாக வர வேண்டிய ஒரு நிலை. மக்களுக்குப் பல நலத்திட்டங்களை அறிவித்தோம். நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். இங்கு வருவதற்கு முன்பு, அவ்வாறு ஒரு அரசு நிகழ்ச்சி.
அங்கே பேசுகிறபோது, வீரபாண்டியாரை குறிப்பிட்டுப் பேசினேன். ஏனென்றால், சேலத்தில் யார் பேசினாலும் வீரபாண்டியாரை குறிப்பிடாமல் எவரும் பேச முடியாது. அந்த அளவிற்கு இந்த மாவட்டத்தினுடைய நன்மதிப்பைப் பெற்றவர் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள். அண்ணன் வீரபண்டியார் அவர்கள் இந்த சேலத்திற்கு எத்தனையோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து வந்திருக்கிறார். நான் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது, சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, துணை முதலமைச்சராக இருந்தபோது, அரசு நிகழ்ச்சி மட்டுமல்ல கழக நிகழ்ச்சிகளுக்கும் பலமுறை என்னை அழைத்து வந்திருக்கிறார்.
இன்றைக்கு முதலமைச்சராக நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அவர் அழைக்காமல் வரும் நிகழ்ச்சி இது. அவரால் அழைக்க முடியாது. அவர் மறைந்துவிட்டார். இப்போது முதலமைச்சராக வந்திருக்கிற இந்த நேரத்தில் அண்ணன் வீரபாண்டியார் இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். அது ஒரு வருத்தம். அது ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் சரி, அதேபோல விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோதும் சரி, அவர் தலைவரிடத்தில் போராடி, வாதாடி எத்தனையோ திட்டங்களை இந்த சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வந்து பெருமை சேர்த்திருக்கிறார். எனவே இந்த சேலம், அது மாநகரமாக இருந்தாலும், சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளாக இருந்தாலும், ஊராட்சிகளாக இருந்தாலும் இன்றைக்கு கம்பீரமாக நிற்கிறது என்றால் அதற்கு முழுக் காரணம் நம்முடைய வீரபாண்டியார் அவர்கள்தான்.
அவர் ஆட்சியில் இருந்தபோது தலைவர் கலைஞர் இடத்தில் சண்டையிட்டு, வாதாடி, போராடி, ‘நிதி இல்லை இப்போது செய்ய வேண்டாம் பொறுத்துக் கொள்ளுங்கள்‘ என்றாலும், ‘அதெல்லாம் முடியாது, செய்துதான் ஆக வேண்டும்‘ என்று பிடிவாதம் செய்வார். தலைவர் இடத்தில் பிடிவாதம் செய்கிறார் என்றால் அது இதற்காகத்தான்.
எனவே அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் செய்திருக்கும் சாதனைகளை நம்மால் மறக்கவே முடியாது. எவ்வாறு வீரபாண்டியாருடைய பெயர் நிலைத்து இருக்கிறதோ, அதேபோல தம்பி செழியனுடைய பெயராக இருந்தாலும் சரி, தம்பி ராஜாவினுடைய பேராக இருந்தாலும் அது நிலைத்து நிற்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
25 வருடங்களுக்கு முன்பு, அதாவது 1997-ஆம் ஆண்டு சேலத்தில் ஒரு மாபெரும் மாநாட்டை அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் நடத்தி, அந்த மாநாட்டில் பேரணி நடத்தியபோது, அந்த பேரணிக்குத் தலைமை தாங்கி நான்தான் அந்தப் பொறுப்பேற்று நடத்தி வந்தேன். அதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் பெருமையை, அந்தப் பூரிப்பை, அந்த பொறுப்பை எனக்கு வழங்கியவர் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள்.
அதற்குப் பிறகு 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற சேலம் மாநாட்டில் கழகத்தினுடைய இரு வண்ணக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் எனக்கு வழங்கினார்கள்.
இவ்வாறு ஒவ்வொருவரையும் அவர் உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தித் தூக்கி விட்டவர். அந்த நினைவுகள் எல்லாம் எனக்கு வந்து கொண்டிருக்கிறது. அதேபோல, 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என்னிடத்தில் தேதி வாங்கி, வீரபாண்டி ராஜா அவர்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். அது என்னவென்றால், வீரபாண்டியார் எழுதிய ‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்‘ என்ற ஒரு நூலை நான் வெளியிட வேண்டும் என்று என்னை அழைத்து வந்தார்கள். அப்போது நான் அந்தப் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றி இருந்தேன். வீரபாண்டியார் அவர்கள் உயிரோடு இருக்கிறபோதே அந்த நூல் வெளி வந்திருக்க வேண்டும். ஆனாலும் அப்பாவிற்கு செய்ய வேண்டிய கடமையை இன்றைக்கு தம்பி ராஜா அவர்கள் செய்து முடித்திருக்கிறார் என்று சொன்னேன்.
எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றை வீரபாண்டியார் இல்லாமல் எழுத முடியாது. ‘வீரபாண்டியார் வரலாறே, திராவிட இயக்க வரலாறு தான்‘ என்று நான் அன்றைக்கு குறிப்பிட்டேன்.
தனி மனிதராக மட்டுமல்ல, அவருடைய குடும்பமே கழகத்துக்காக உழைத்த குடும்பமாக, கழகத்தையே குடும்பமாகக் கருதிய குடும்பம்தான் நம்முடைய வீரபாண்டியார் அவர்களுடைய குடும்பம்.
அதே போல எத்தனையோ போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். அப்போது நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுத்தப்பட்டு 1976-ஆம் ஆண்டு நம்முடைய ஆட்சியை கலைத்து, நம்முடைய தோழர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு, அதுவும் கைது என்றாலும் சாதாரண கைது அல்ல, நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது, ஜாமீன் எடுக்க முடியாது ‘மிசா‘ என்ற ஒரு கொடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
அப்போது நான் சென்னையில் கைதாகி, சென்னை சிறையில் இருந்தேன். அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் சேலம் சிறையிலும், அதற்குப் பிறகு மதுரை சிறையிலும் இருந்து வாடினார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
பிப்ரவரி முதல் வாரத்தில் நாங்களெல்லாம் கைது செய்யப்பட்டோம். பிப்ரவரி 6-ஆம் தேதி வீரபாண்டியார் அவர்கள் தன்னுடைய மூத்த மகள் மகேஸ்வரி - காசியினுடைய திருமணத்தைத் தலைவர் கலைஞர்தான் நடத்தி வைக்க வேண்டுமென்று தேதி வாங்கியிருந்தார். நாடு முழுவதும் கைது நடந்துகொண்டிருக்கிறது. ‘நான் இல்லாமல் இந்தத் திருமணத்தை நடத்தி முடித்துவிடு‘ என்று வீரபாண்டியாரிடத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னபோது, அப்போது வீரபாண்டியார் என்ன சொன்னார் என்றால், ‘எது நடந்தாலும் பரவாயில்லை, நீங்கள் வந்துதான் நடத்த வேண்டும். அது வரைக்கும் நான் காத்திருப்பேன்‘ என்று சொன்னவர் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள்.
திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையையும் பொண்ணையும் சொந்த ஊருக்கு அதாவது மறு வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்பே அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் காவல்துறையால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதே போல, அவருடைய அம்மா சின்னம்மாள் அவர்களை 70 வயதில் பொய் வழக்கு போட்டுக் கைது செய்தார்கள். வீரபாண்டியாருடைய மனைவி ரங்கநாயகி அவர்களைக் கைது செய்து, உடலில் சூடு வைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். மூத்த மகள் மகேஸ்வரியையும், அவருடைய கணவர் காசியையும் கைது செய்தார்கள். கல்யாண விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த உறவினர்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். வீரபாண்டியாருடைய சகோதரி பாப்பம்மாள் கைது செய்யப்பட்டார். சென்னையில் படித்துக் கொண்டிருந்த அவருடைய பிள்ளைகள் நெடுஞ்செழியன், ராஜா, நிர்மலா ஆகியோரை அவர்கள் படித்த பள்ளியிலேயே நெருக்கடி கொடுத்து, அங்கு இருந்து கடத்துவதற்கு போலீஸ் முயற்சி செய்தார்கள்.
வீரபாண்டியாருடைய கார் ஓட்டுநர் கருப்பண்ணன், அவரை கைது செய்து, கைது செய்தது மட்டுமல்ல அவரை நிர்வாணமாக்கி ஐஸ் கட்டியில் படுக்க வைத்தெல்லாம் கொடுமை செய்தார்கள். வீரபாண்டியார் தோட்டத்தில் இருந்த தோட்டக்காரர்களை எல்லாம் அடித்து விரட்டிவிட்டு, வீரபாண்டியாருடைய தோட்டத்தில் இந்த மாடுகளை எல்லாம் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
வீரபாண்டியார் மேல் மட்டும் 50 பொய் வழக்குகள் போடப்பட்டன. மதுரை சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வருகிற போது, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீரபாண்டியாரை, கையில் விலங்கு போட்டு அழைத்து வந்த கொடுமை எல்லாம் நடந்திருக்கிறது. மூன்றாண்டு காலம் இந்த மாவட்டத்திற்குள் நுழைய அவருக்குத் தடை போட்டார்கள். இவ்வளவு கொடுமையையும் தாங்கிய குடும்பம் தான் அண்ணன் வீரபாண்டியாருடைய குடும்பம். இவ்வளவு தியாகம் செய்திருக்கும் குடும்பம்தான் அண்ணன் வீரபாண்டியாருடைய குடும்பம். குடும்பம் குடும்பமாக கட்சிக்கு உழைத்த குடும்பங்களில் மிகவும் முக்கியமான ஒரு குடும்பம்தான் அண்ணன் வீரபாண்டியாருடைய குடும்பம். இவ்வாறு பல குடும்பங்கள் சிந்திய இரத்தத்தால் தான், வியர்வையால் தான், உழைப்பால் தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்து கம்பீரமாக நிற்கிறது.
சென்னையில் இருக்கின்ற அண்ணா அறிவாலயம் மட்டுமல்ல, மற்ற மாவட்டங்களில் இருக்கக்கூடிய கலைஞர் அறிவாலயங்கள், அண்ணா அறிவாலயம் எதுவாக இருந்தாலும் அவை எல்லாம் கல்லாலும் செங்கல்லாலும், சிமெண்டாலும் கட்டப்பட்டவை மட்டுமல்ல. இத்தகைய தியாக மறவர்களால், இவர்கள் சிந்திய இரத்தத்தால், இவர்கள் சிந்திய வியர்வையால் கட்டப்பட்டது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. இவர்கள் செய்த தியாகத்தால்தான் இன்றைக்கு நாம் கோட்டையில் உட்கார்ந்து இருக்கிறோம். ஆட்சியில் இருக்கிறோம். ஆளுங்கட்சியாக இருக்கிறோம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. மக்களுக்கு சேவையாற்ற ஆட்சி முக்கியம். அந்த ஆட்சியைக் கைப்பற்றவும் காக்கவும் கட்சி முக்கியம். எனவே கட்சிக்கு வேராகவும், இந்த கட்சிக்குத் தூணாகும் இருந்து உயிர் விட்ட தியாகிகளை மதிப்போம். மறவோம். தம்பி ராஜாவின் புகழ் வாழ்க… வாழ்க… வாழ்க… என்று கூறி நிறைவு செய்கிறேன். வணக்கம்.
* * *