“சுயமரியாதை, சமதர்ம சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் தோழமையுடன் செயல்படுவோம். அதுவே தோழர் தா.பாண்டியன் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!” திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
பதிவு: 28 Dec 2021, 11:06:52 மணி
“சுயமரியாதை, சமதர்ம சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் தோழமையுடன் செயல்படுவோம். அதுவே தோழர் தா.பாண்டியன் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!”
- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (27-12-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை – எழும்பூர், பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பொதுவுடைமைப் போராளி தோழர் தா.பாண்டியன் அவர்களது படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:
தோழர் தா.பாண்டியன் படத்திறப்பு புகழஞ்சலிக்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய மாநிலச் செயலாளரும், மதிப்பிற்குரிய தோழர் முத்தரசன் அவர்களே!
திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, புகழஞ்சலி செலுத்தியிருக்கக்கூடிய பொதுவுடைமை போராளி மதிப்பிற்குரிய அய்யா திரு.நல்லக்கண்ணு அவர்களே!
உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய திராவிடர் கழகத்தினுடைய தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களே!
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய மத்திய பொதுச்செயலாளர், அகில இந்திய பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய தோழர் டி.ராஜா அவர்களே!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டினுடைய தலைவர் என்னுடைய மதிப்பிற்குரிய கே.எஸ்.அழகிரி அவர்களே!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என்னுடைய ஆருயிர் அண்ணன் வைகோ அவர்களே!
தமிழக மார்க்சிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயலாளர் மதிப்பிற்குரிய தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே!
விடுதலை கட்சியின் தலைவரும், எழுச்சித் தலைவர் என்னுடைய இனிய சகோதரர், நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்களே!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் அய்யா காதர் மொய்தீன் அவர்களே!
மனிதநேய மக்கள் கட்சியினுடைய தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவஹர் அவர்களே!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் என்னுடைய அன்பிற்குரிய சகோதரர், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களே!
புதுச்சேரி மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலச் செயலாளர் திரு.சலீம் அவர்களே!
நிகழ்சியிலே பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்களே!
பங்கேற்றுள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்களே!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கட்சியில் சார்ந்து இருக்கக்கூடிய, தோழமைக் கட்சியில் சேர்ந்திருக்கக்கூடிய தோழர்களே, நண்பர்களே, அன்பிற்கினிய பெரியோர்களே, தாய்மார்களே, தொலைக்காட்சி பத்திரிகை ஊடக நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
தோழர் தா.பாண்டியன் என்றாலே, தலைதாழாத பாண்டியன் என்றுதான் பொருள். எப்போதும், யாருக்கும், எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சாத பாண்டியனாகத்தான் அவர் வாழ்ந்திருக்கிறார். இங்கே எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். கடந்த பிப்ரவரி மாதத்திலே மதுரையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில மாநாடு. அந்த மாநாட்டில் தா.பாண்டியன் ஆற்றிருக்கக்கூடிய உரையை எல்லோரும் தவறாமல் சுட்டிக்காட்டி அந்த மாநாட்டிலே நானும் பங்கேற்றேன். அந்த மாநாட்டிலே பங்கேற்று நிறைவுரையாற்றக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அந்த மேடையில் பேசும்போது, "சோவியத் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிச தத்துவம் எப்படி இருக்க முடியாதோ, அதேபோல இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கிற உணர்வோடு இந்த மாநாட்டிற்கு என்னை அழைத்திருக்கிறீர்கள். அந்த அழைப்பை ஏற்று நானும் அதில் பங்கேற்று பேசியிருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இருக்கக்கூடிய நட்பு, அது வெறும் நட்போ, தோழமையோ மட்டுமல்ல, நாம் ஒரே குடும்பம். அதுவும் சாதாரணக் குடும்பமல்ல, கொள்கை குடும்பம். அந்த பாச உணர்வோடுதான் நான் பேசினேன். அத்தகைய பாச உணர்வோடு நெஞ்சிலே நிலைநிறுத்தி நான் அந்த மாநாட்டிலே உரையாற்றி இருக்கிறேன். இந்த உணர்வு என்பது இன்று நேற்று ஏற்பட்ட உணர்வு அல்ல. இரண்டு இயக்கங்களும் தோன்றிய காலத்தில் இருந்து உருவான உணர்வு!" என்று நான் அந்த மாநாட்டிலே குறிப்பிட்டுச் சொன்னேன்.
அதோடு, ''பாசிச பா.ஜ.க.வுக்கும், அடிமை அ.தி.மு.க.வுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் வர இருக்கக்கூடிய தேர்தல் என்று குறிப்பிட்டுச் சொன்னேன்". நம்முடைய ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார். இது படம் மட்டுமல்ல. பாடம் என்று சொன்னார். ஆகவே இந்த பாடத்தை ஏற்கனவே தமிழகத்து மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆனார் இந்திய அளவிலே நாம் இந்தப் பாடத்தை யாருக்குப் புகட்டவேண்டுமோ அவர்களுக்கு புகட்டிட வேண்டும் என்று பாடமாக இருக்கக்கூடிய இந்த படத்தை திறந்து வைத்திருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி அத்தனை பேரும் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மாநாட்டிலே கலந்துகொண்ட போது தா.பா. பேசினார். தமிழகத்திலே ஒரு ஆட்சி மாற்றம் வரவேண்டும். நல்ல காலம் பிறக்க வேண்டும். வரவிருக்கக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் எடுத்துரைத்தார். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறோம். இதைப் பார்க்க அவர் இல்லையே என்ற ஒரு ஏக்கம் தான் இன்றைக்கு என்னுடைய மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. பேசினார் என்று சொல்லக் கூடாது.
88 வயதில் உடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியில் வந்து மதுரையிலே அவர் பேசுகிறபோது பேசினார் என்று சொல்லமாட்டேன். கர்ஜித்தார் மதுரையே அலறக்கூடிய அளவிற்கு அவர் பேசினார்.
''மதுரையில் நான் நின்றுபேசி இருக்கிறேன், இப்போது உட்கார்ந்து பேசுகிறேன் என்று அவர் குறிப்பிட்டுச் சொன்னார். இடுப்பு எலும்பு அவருக்கு பழுதாகி அதனால் அவர் உடல் நலிவுற்றிருக்கக்கூடிய நிலையிலே அவர் பேசினார். என் மண்டை ஒழுங்காகத்தான் ஒத்துழைக்கிறது" ''நான் சாகும்வரை தட்டி எழுப்புவேன்!
என்னை மட்டுமல்ல - என்னுடைய செம்படையையும் எந்தக் கொம்பனாலும் அடக்க முடியாது" என்று குறிப்பிட்டுச் சொன்னார். இந்த வீரமும், தீரமும்தான் தோழர் தா.பாண்டியன் அவர்கள்!
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று அன்றைக்கு சபதம் எடுத்தார்.
'தானாக எதுவும் மாறாது! நாம்தான் மாற்ற வேண்டும்!' என்று சொன்ன தோழர் தா.பா.அவர்கள், "வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம்!" என்று முழங்கினார். என்னுடைய வருத்தமெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இவ்வளவு பெரிய வெற்றியை பார்க்காமலே சென்றுவிட்டார் என்கிற வருத்தம் நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நான் பலமுறை நேரடியாக அவரை சந்தித்தேன். அவர் தன்னுடைய உடல்நலத்தைப் பற்றி நாங்கள் விசாரித்துக் கொண்டிருப்போம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் பதில் சொல்லமாட்டார். அரசியலைப் பேசுவார். நாட்டு நிலைமையைப் பற்றி பேசுவார். மத்தியில் நடக்கக்கூடிய ஆட்சியினுடைய கொடுமையைப்பற்றி பேசுவார். ஆகவே அவரது அடையாளமே அவரது தோளில் இருந்த அந்த சிவப்புத் துண்டுதான். அவர் தனது தோளில் தாங்கியது சிவப்புத் துண்டு மட்டுமல்ல; சிவப்பு இயக்கத்தையே எப்போதும் அவர் தாங்கியிருந்தார். இறப்பதற்கு முந்தைய நாள் - மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும்போது அவரது சிவப்புத் துண்டு மடித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.
நள்ளிரவில் விழித்ததும் தா.பாண்டியன் அவர்கள், மருத்துவமனையில் இருக்கக்கூடிய செவிலியரைக் கூப்பிட்டு "என் சிவப்புத் துண்டு எங்கே? என்னிடம் கொடுத்துடுங்கம்மா'' என்று சொல்லி இருக்கிறார். "சாகும் வரை தட்டி எழுப்புவேன்" என்று அவர் மதுரை மாநாட்டில் சொன்னார். என்னைப் பொறுத்தவரைக்கும், மரணத்துக்குப் பிறகும் தட்டி எழுப்பும் மனிதராக தோழர் தா.பா. அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை!
தியாகம், அதுவும் பொதுவுடைமை இயக்கத்தின் தியாகம் என்பதற்கு எடுத்துக்காட்டு என்றால், அது தோழர் ஜீவா அவர்கள். தோழர் ஜீவாவை எல்லோரும் சொன்னார்கள். தோழர் ஜீவா அவர்களை நான் பார்த்தது கிடையாது. நான் அவரது உரையைக் கேட்டது இல்லை. தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி எங்களிடத்தில் அதை நினைவுப்படுத்தி எடுத்துச் சொல்லுவார். எப்படிப் பேசுவார் என்பதை கலைஞர் அவர்கள் பேசியும் எங்களிடத்தில் காட்டுவார். அத்தகைய தோழர் ஜீவா அவர்களால் உருவாக்கப்பட்டு, ஜீவாவைப் போல தமிழ்நாடு முழுவதும் முழங்கி வந்தவர்தான் தோழர் தா.பா. அவர்கள்.
தமிழ்நாட்டு மேடைகளை ஆட்சி செய்தவர்கள் என்று பட்டியலிட்டால் அதில் தோழர் தா.பா. அவர்களின் பெயர் நிச்சயம் இடம்பெறும். அந்தளவுக்குத் தனிச்சிறப்பான பேச்சாளர். மிகப்பெரிய கருத்தியல்களையும் எளிமையாக, பாமர்களுக்கும் புரியும் வகையில் சொல்வதிலே எடுத்துக் சொல்லக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பவர். கொள்கை சார்ந்து பேசுவது என்றால் அதைப்போல சீரியசாக பேசுவது என்று இல்லாமல் நகைச்சுவையாகவும் பேசுவார். அவரது இன்னொரு தனித்தன்மை, தலைவர் கலைஞர் அவர்களைப் போலவே, அரசியலில் மட்டுமில்லாமல் இலக்கியத்தையும் இணைத்து இரண்டிலும் பயணித்தவர் நம்முடைய தோழர் தா.பா. அவர்கள். தோழர் ஜீவா அவர்கள் கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கியபோது, தோழர் தா.பா. அவர்களைப் பொதுச்செயலாளராக நியமித்தார்கள். அத்தகைய இலக்கிய ஆளுமையாகவும் தோழர் தா.பா. இருந்தார்.
அரசியல் மேடைகளைப் போலவே இலக்கிய மேடைகளிலும் வலம் வந்தார். தா.போ அவர்கள். மேடைகளில் பேசுவதைப் போலவே, எழுத்திலும் பயணித்தார். அவர் எழுதிய புத்தகங்களே அதற்குச் சாட்சியமாக இருக்கின்றன.
தனக்கு உடன்பாடு இல்லாதவைகளை தயவுதாட்சண்யம் பார்க்காமல் விமர்சிக்கும் நெஞ்சுரம் அவருக்கு இருந்தது. சொந்தக் கட்சியில் இருக்கும் கொள்கை முரண்களைக் கூட அவர் சுட்டிக்காட்டுவதற்குத் தயங்கியது இல்லை.
'ஜனசக்தி' இதழில் 'சவுக்கடி' என்ற தலைப்பில் அவர் எழுதிய கடைசிப் பக்கம் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. இப்படி நித்தமும் எழுதியும், பேசியும், போராடியும், வாதாடியும் வலம் வந்தவராக இருந்தவர் தோழர் தா.பா. அவர்கள்.
தோழர் தா.பா. அவர்களது படத்திறப்பு, புகழஞ்சலிக் கூட்டத்தை இந்தப் பெரியார் திடலில் ஏற்பாடு செய்தது மிகமிக பொருத்தமானது. இறுதிக் காலத்தில் அவர் அடிக்கடி பெரியார் திடல் கூட்டங்களில்தான் அவர் கலந்துகொண்டிருக்கிறார்
தந்தை பெரியார் அவர்களைப் பொதுவுடைமைக் கட்சியினரே விமர்சித்த காலம் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் கூட, தந்தை பெரியாரைப் புகழ்ந்து பேசி வந்தவர்தான் தோழர் தா.பா. அவர்கள்.
பெரியாருக்குத் 'தந்தை' என்ற பட்டம் ஏன் என்பதற்கு யாரும் சொல்லாத விளக்கத்தைச் சொன்னவர் நம்முடைய தோழர் தா.பா. அவர்கள். 'தன் சொத்தையும், குடும்பச் சொத்தையும், கழகச் சொத்தையும் சேர்த்து தாய் தந்தை இல்லாத பிள்ளைகளைத் தத்தெடுத்து, வளர்த்து, அந்தப் பிள்ளைகளுக்கு தனது இனிஷியலைக் கொடுத்து, அடையாளம் கொடுத்து, படிக்க வைத்து, பட்டம் பெற வைத்து, அந்தப் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் ஒரு மனிதரைத் தந்தை என்று சொல்லாமல், யாரைத் தந்தை என்று சொல்வது?" என்று கேட்டவர் தோழர் தா.பா. அவர்கள். அதனால்தான் அவரது படத்திறப்பு பெரியார் திடலில் நடப்பது பொருத்தமானது என்று நான் குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன்.
திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று தோழர் தா.பா. அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரும், தந்தை பெரியாரும், தோழர் ஜீவாவும் இணைந்திருந்த காலம்போல் உருவாக வேண்டும் என்று அடிக்கடி அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படித்தான் செயல்பட்டு வருகிறோம் என்பதன் அடையாளம்தான் திராவிட இயக்கத் தலைவர்களும், பொதுவுடைமை இயக்கத் தலைவர்களும் இந்த மேடையில் ஒரு சேர உட்கார்ந்து இருப்பது! நமக்குள் இருப்பது தேர்தல் உறவு அல்ல; கொள்கை உறவு!
கம்யூனிஸ்ட் தோழர்கள் சொல்லும் பொன்னுலகை உருவாக்கத்தான் நாம் நினைக்கிறோம். அத்தகைய சுயமரியாதை, சமதர்ம சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் தோழமையுடன் செயல்படுவோம்.
அதுவே தோழர் தா.பாண்டியன் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக என்பதைப் இந்த நேரத்தில் நான் பதிவுசெய்து, தோழர் தா.பா. அவர்களுக்கு எனது செவ்வணக்கத்தைச் செலுத்தி விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்!
இவ்வாறு அவர் உரையாற்றினார்.