New - DetailPage - DMK
header_right
பட்டியலின - பழங்குடியின மாணவர்களுக்கு 76 ஆண்டுகளாக இருக்கும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை தொடர்ந்திட மாண்புமிகு பிரதமர் அவர்கள் தலையிட்டு உத்தரவிட வேண்டும்!" - கழகப் பொருளாளரும், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள் அறிக்கை

பதிவு: 14 Dec 2020, 12:24:18 மணி

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்குச் சுதந்திரத்திற்கு முன்பு (1944-ல்) உருவாக்கப்பட்ட “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையை” நிறுத்திவிட மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்து - சமூகநீதி மீது தொடர் தாக்குதல் நடத்துவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட பட்டியலின - பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்தக் கல்வி உதவித் தொகை - பராமரிப்புப் படி, கல்வி நிறுவனங்களுக்குத் திரும்ப அளிக்கப்படாத கட்டணங்கள், கல்விச் சுற்றுலா, ஆய்வு அறிக்கை தயார் செய்வது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வழங்கப்பட்டு வருகிறது.

“பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான திட்டம் இது” என்று கடந்த ஆண்டு தனது சுற்றறிக்கை மூலமாகவே ஒப்புக்கொண்டது மத்திய பா.ஜ.க. அரசு. தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு இந்த “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையையே நிறுத்திவிட” முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே 2.50 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே இந்தக் கல்வி உதவித் தொகை என்பதால் - பட்டியலின பழங்குடியின மாணவர்கள் இத்திட்டத்தால் முழுமையாகப் பயனடையவில்லை. இப்போது பெயரளவிற்கு 60 லட்சம் பேர் பயனடைந்து வரும் இந்தக் கல்வி உதவித் தொகையையும் ரத்து செய்ய மத்திய பா.ஜ.க. அரசு முனைவது - எங்கள் கழகத் தலைவர் தளபதி அவர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டுவதைப் போல, சமூகநீதிக்கும் - பா.ஜ.க.விற்கும் பரம்பரையாக இருக்கும் கசப்புணர்வை - எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகிறது. 

76 ஆண்டுகளாகப் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்தக் கல்வி உதவித் தொகை பா.ஜ.க. என்ற தனியொரு கட்சியின் யாசகம் அல்ல! இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற முறையில் மத்திய அரசு வழங்க வேண்டிய அவர்களுக்கான அடிப்படை  உரிமை என்பதை  தற்போது பா.ஜ.க உணர வேண்டும். இந்தக் கல்வி உதவித் தொகையைப் பறிப்பது என்பது சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பெயரையே நீக்குவதற்குச் சமம்! 

எனவே, மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மிகவும் முக்கியமான பட்டியலின - பழங்குடியின மாணவர்களின் இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு - இந்தப் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்குக் காலதாமதமின்றி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.