New - DetailPage - DMK
header_right
மூத்த காங்கிரஸ் தலைவர் மோத்தி லால் வோரா மறைவு - தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

பதிவு: 22 Dec 2020, 15:54:57 மணி

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான திரு. மோத்தி லால் வோரா நேற்று உடல் நலம் குன்றி டெல்லி மருத்துவ மனையில் தனது 93 வது வயதில் காலமானார். ஒருங்கிணைந்த மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றிய நாளில் இருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவராக விளங்கிய திரு வோரா அவர்கள் திரு ராஜீவ் காந்தியின் அமைச்சரவையிலும் கேபினட் அமைச்சராகப் பணியாற்றினார். இடையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுனராகவும் அனைவரும் பாராட்டத்தக்க  வகையில் திரு மோத்தி லால் வோரா அவர்கள் திறம்பட செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசுப் பொறுப்புகளன்றி காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பதவியிலும் சிறப்பாக செயல் பட்ட திரு வோரா,  தலைவர் கலைஞர் மீது உயர்ந்த மரியாதையும்  நட்புறவும்  கொண்டிருந்தார்.    
          
நேற்று முன்தினம் தனது 93வது பிறந்த நாளைக் கண்ட திரு வோரா அவர்களின் எதிர்பாராத மறைவுச் செய்தி அறிந்து  கதிமுக தலைவர் தளபதி  மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொருளாளரும் கழக நாடாளுமன்ற குழு தலைவருமான திரு டி.ஆர். பாலு, மறைந்த திரு. மோத்தி லால் வோராவின் புதல்வர் திரு. அருண் வோரா அவர்களுக்கு விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:           

1986 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில் தன்னுடன்  ராஜ்ய சபையிலும் பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவிலும்  சக உறுப்பினராகப் பணியாற்றிய காலம்தொட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்த திரு  டி.ஆர் பாலு, திரு மோத்தி லால் வோராவின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய நாட்டுக்கே பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார். திரு. வோரா அவர்களின்  பரந்த அரசியல்  அனுபவமும் சிறப்பான நிர்வாகத்திறனும் தலைமைப் பண்பும் அனைவராலும்  எளிதில் அணுகக்கூடிய நட்புணர்வும் கொண்டு பணியாற்றிய பாங்கும்  கட்சி பாகுபாடு இல்லாமல்   அனைவராலும் பாராட்டப்படுகிறது. அவரது மறைவு நாட்டுக்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான வேளையில் திமுக தலைவர் திரு மு. க.ஸ்டாலின் அவர்கள் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் தனது  சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை திரு. அருண் வோரா அவர்களுக்கு இன்று எழுதிய கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.