New - DetailPage - DMK
header_right
அமைச்சர் வேலுமணி கொள்ளை அடிப்பது வெளியில் தெரிந்து விடும். அமைச்சர் தங்கமணி எதையும் வெளியில் தெரியாமல் செய்துவிடுவார் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

பதிவு: 19 Jan 2021, 16:42:52 மணி

இன்று (19-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாதரை இப்போது மக்கள் கிராம சபை கூட்டத்தை நாம் நடத்தப் போகிறோம்.  கிராம சபை கூட்டத்தை நடத்த கூடாது என்று எடப்பாடி அரசு உத்தரவு போட்டது. அந்த உத்தரவு போட்டவுடன், ‘கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரை நாம் மாற்றி, ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்று அறிவித்து அதை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் எல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு, ஆர்வத்தோடு, எழுச்சியோடு வந்திருக்கிறீர்கள்.  அவ்வாறு வந்திருக்கும் உங்களையெல்லாம் நான் மகிழ்ச்சியோடு, இன்முகத்தோடு வருக… வருக… வருக… என வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த பாதரை ஊராட்சியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை மிக சிறப்பான வகையில், ஒரு மாநாடு போல நடத்திக் கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக அளவில் இருக்கிறீர்கள். ஆண்கள் எல்லாம் உங்களைச் சுற்றி நிற்கிறார்கள்.
உங்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பாக இருக்கிறோம். உங்களுக்கு நாங்கள் தான் எப்போதும் பாதுகாப்பு, அதேபோல எங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு. அதையும் நாங்கள் மறந்து விட மாட்டோம்.
சிறப்பான மாநாடு போல இந்த மக்கள் கிராம சபை கூட்டத்தை, நம்முடைய மாவட்டக் கழக செயலாளர், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர், செயல்வீரர், அருமை நண்பர், கே.எஸ்.மூர்த்தி அவர்கள் இதை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறார்.
அவர் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் களத்தில் இறங்கி விட்டால் கில்லி போல எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றலைப் பெற்றவர். அவரைத் தான் நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக பரமத்தி வேலூர் தொகுதியில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். மாவட்டக் கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று மிக சிறப்பான வகையில் பணியாற்றி கொண்டிருக்கும் நம்முடைய மூர்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு முழு காரணமாக இருந்து இதை நடத்திக்கொண்டிருக்கிறார். அதற்காக முதலில் அவருக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் அவருக்கு துணை நின்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கும அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய சார்பிலும், தலைமை கழகத்தின் சார்பிலும் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லி இந்த நிகழ்ச்சியை நாம் தொடங்கப் போகிறோம். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தபோது, இதேபோல் ஊராட்சி சபை கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தினோம். இதேபோல் நான் பல ஊராட்சிப் பகுதிகளுக்குச் சென்றேன். 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு நான் சென்றேன்.
12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த 12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நாம் கிராமசபை கூட்டத்தை நடத்தினோம். அதனுடைய பலன் தான், நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே இன்றைக்கு டெல்லியில் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சி நம்முடைய தி.மு.க. தான். அங்கே 3-வது இடம் பெற்றது மட்டுமல்லாமல் அதற்கு பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
எப்போதும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் தான் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவார்கள். பல்வேறு அராஜகம் நடைபெற்றது. அக்கிரமம் நடைபெற்றது. கலவரத்தை ஏற்படுத்தினார்கள். வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் பல்வேறு அட்டூழியங்களை செய்தார்கள். அதன் பிறகு வாக்கு எண்ணும் இடத்தில் கலவரங்களை செய்தார்கள். வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றர்களாக அறிவித்தார்கள். தோல்வியுற்றவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்தார்கள்.
அவ்வளவு அக்கிரமத்தையும் மீறி, நாம் கிட்டத்தட்ட 70% இடங்களில் பெரிய வெற்றியை உள்ளாட்சித் தேர்தலில் பெற்றோம். அதற்கெல்லாம் காரணம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டம் தான். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கு காரணமும் இந்த கிராமசபை கூட்டம் தான்.
இப்போது சொல்கிறேன், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கு அடையாளம்தான் இந்த கூட்டம்.  இந்த கிராம சபை கூட்டத்திற்கு நீங்கள் ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள். அமைதியாக, கட்டுப்பாட்டோடு நீங்கள் இருக்கின்ற காட்சியை பார்க்கின்றபோது நிச்சயமாக நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
இங்கு எல்லோரையும் பேச வைப்பதற்கு வாய்ப்பில்லை. 10 பேரை பேச வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்.  ஏனென்றால் நான் மாலை நிகழ்ச்சிக்காக திருச்சிக்கு செல்ல வேண்டும். அதே போல நீங்களும், வீடுகளில் பல வேலைகளை விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். நீங்களும் வீடு சென்று சேர வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே ஒரு அடையாளத்திற்காக 10 பேரை மட்டும் பேச வைக்கப் போகிறோம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதைத்தான் அந்த 10 பேர் பேசப் போகிறார்கள்.
பொதுவாக இந்த ஊராட்சியை பொறுத்தவரைக்கும் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது? கைத்தறி நெசவாளர்கள் நிறைந்து இருக்கும் பகுதி, இந்த பகுதி. விசைத்தறி நெசவாளர்கள் இருக்கும் பகுதி இந்த பகுதி.
எனவே அந்த பிரச்சினை பற்றி சொல்லப் போகிறீர்கள். அடுத்தது பட்டா பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சனை, சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், தெரு விளக்கு பிரச்சினை, மருத்துவமனை பிரச்சினை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், முதியோர் உதவித் தொகை, 100 நாள் வேலை திட்டம், இதுபோன்ற பிரச்சினைகள் தான். அந்த பிரச்சனைகளை தான் இங்கு சொல்லப் போகிறீர்கள். அதை நீங்கள் சுருக்கமாக சொல்லவேண்டும்.
இந்த குமாரப்பாளையம் தொகுதியைப் பொறுத்தவரைக்கும், குமாரப்பாளையம் பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகள் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் பகுதி, இந்த பகுதி.  இந்த விசைத்தறி தொழிலாளர்கள் இருக்கும் இந்த இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கிறார், தங்கமணி.
அவர் எதாவது இது பற்றி சிந்தித்து, அந்த தொழிலாளர்களுடைய குறைகளைப் போக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரா என்பது தான் கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கிறது.
இந்த 10 ஆண்டுகளில் அவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கந்து வட்டி வாங்கும் நிலை. வட்டிக்கு வட்டி செலுத்தும் நிலை. இந்த கொடுமைகளை அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்களோ, அது போல நெசவாளர்களும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதியில் நெசவாளர்களை பொறுத்தவரைக்கும் 4 தற்கொலைகள் நடந்து இருக்கிறது. இது மிகவும் வேதனைக்குரிய ஒன்று.
நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக, அரசு கடன் உதவி செய்தது. மானியங்கள் தந்தது. சுழல் நிதி தந்தோம். அதையும் இந்த ஆட்சி கிடப்பில் போட்டு விட்டது. அதனால் இன்றைக்கு பெண்கள் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு, மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் கடன் வாங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள் என்பது தான் உண்மை.
அதேபோல நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய நூலின் விலை தற்போது 40% உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ 150 ரூபாய்க்கு இருந்தது. ஆனால் இப்பொழுது 210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 60 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இதனால் துணி உற்பத்தி வெகுவாக குறைந்திருக்கிறது என்று நெசவாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
பருத்தியின் விலை உயராத நிலையில், நூலின் விலை ஏறுவது ஏன்? அடுத்து குமாரபாளையத்தைப் பொறுத்தவரைக்கும், பள்ளிபாளையம் பகுதியில் 400 சாயப்பட்டறைகள் இருக்கின்றன. இதில் இருந்து வெளிவரக்கூடிய கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்கின்ற காரணத்தினால், நீர் மாசுபடுகிறது.
இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. அதனால் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்ட மன்றத்தில் பேசி இருக்கிறோம். மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதற்காக பல்வேறு வகைகளில் போராட்டங்கள் எல்லாம் நடத்திக் இருக்கிறோம்.
2016-ஆம் ஆண்டு தேர்தலில் தங்கமணி அவர்கள், மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு, பொதுமக்களிடம் வாக்குறுதிகள் தந்தார். நான் வெற்றி பெற்றால், நிச்சயமாக, உறுதியாக இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு காண்பேன் என்று உறுதி தந்தார்.
அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். ஆனால் 5 ஆண்டுகள் ஆகியது. அதற்காக எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை என்பதை தயவு செய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நான் வெற்றி பெற்றால் ஓராண்டிற்குள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பேன், இல்லை எனில் என் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்வேன் என்று சொன்னார். அவர் அமைக்கவும் இல்லை,  ராஜினாமாவும் செய்யவில்லை. இது தான் இன்றைக்கு இருக்கும் நிலை.
முக்கியப் பிரச்சினைகளை நான் எடுத்துக் கூறி விட்டேன். எனவே, இங்கு இருக்கும் ஊரக பிரச்சினைகளைத்தான் நீங்கள் பேசப் போகிறீர்கள். பேசுகிறவர்கள் சுருக்கமாக பேச வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.